Published : 16 Mar 2019 11:27 AM
Last Updated : 16 Mar 2019 11:27 AM
அரசு பொதுத் தேர்வு காலத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க வசதியாக, தொடர்ந்து 2-வது ஆண்டாக வாடகையின்றி இடமளித்துள்ளார் தனியார் திருமண மண்டப உரிமையாளர்.
திருச்சி மரக்கடை பகுதியில் உள்ளது அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளில் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். ஆனாலும், கடந்த சில ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து இந்தப் பள்ளி சிறப்பிடம் பிடித்து வருகிறது.
தற்போது, பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சில மாணவ, மாணவிகள் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்குள் நுழைந்தனர். இதையடுத்து, அங்கு சென்று பார்த்தபோது 150-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் குழுக்களாக அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். ஆசிரியர்கள் சிலர் மாணவ, மாணவிகளை கண்காணித்துக் கொண்டிருந்தனர்.
இதுதொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியர் வேலுச்சாமி கூறியதாவது:எங்கள் பள்ளி மாணவர்களில் 99 சதவீதம் பேர் ஏழ்மையானவர்கள் என்பதால், பெரும்பாலானோருக்கு வீட்டில் படிக்க முடியாத சூழல் இருந்து வருகிறது. எனவே, வழக்கமாகவே 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகளை மாலை 6 மணி வரை படிக்க வைத்து, வீட்டுக்கு அனுப்புவோம்.
மேலும், பொதுத் தேர்வு காலங்களில் இரவு 8 மணி வரை படிக்க வைப்பதுடன், கொடையாளர்கள் மற்றும் சொந்த செலவில் மாணவ, மாணவிகளுக்கு பிஸ்கெட், வாழைப்பழம் அளித்து, பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் அனுப்புகிறோம். சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு நேர வகுப்புகளை நடத்தி, மதிய உணவு கொண்டு வராத மாணவர்களுக்கு எங்களின் சொந்த செலவில் உணவு வழங்குகிறோம்.
இந்நிலையில், பொதுத் தேர்வு காலத்தில் தேர்வெழுதும் மாணவர்களை தவிர பிற மாணவர்கள் பள்ளிக்குள் நுழைய முடியாது. குறிப்பாக, பிளஸ் 2 தேர்வின்போது 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குள் செல்ல முடியாத நிலையில், வீட்டில் இருந்தும் படிக்க முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, அருகில் உள்ள தனியார் திருமண மண்டப உரிமையாளரை கடந்த ஆண்டு அணுகினோம். அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், பொதுத் தேர்வு காலத்தில், முன்பதிவு இல்லாத நாட்களில், பள்ளி மாணவ, மாணவிகள் அமர்ந்து படிக்க மண்டபத்தின் தரைத் தளத்தை வாடகையின்றி பயன்படுத்திக்கொள்ள அனுமதித்தார். நிகழாண்டு தரைத்தளத்துடன், முதல் தளத்தையும் அளித்துள்ளார். குடிநீர், மின்விளக்கு, மின்விசிறி, கழிப்பிடம் என மண்டபத்தின் வசதிகளை மாணவர்கள் பயன்படுத்துவதால், மண்டப உரிமையாளருக்கு செலவானபோதும், அதை அவர் பொருட்படுத்தவில்லை" என்றார்.
இதுகுறித்து திருமண மண்டப உரிமையாளர் ந.உத்திரகுமாரிடம் கேட்டபோது, “கடந்தாண்டு திருமண மண்டப மேலாளர் சிவக்குமாரை அணுகி இடம் கேட்டுள்ளனர். பராமரிப்பு, செலவினம், நிர்வாகம் என திருமண மண்டபத் தொழில் நிறைய சவால்களைச் சந்தித்து வரும் நிலையிலும், குழந்தைகளின் கல்வி என்பதால் உடனடியாக ஒப்புக் கொண்டேன். மாணவ, மாணவிகள் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே என் ஆசை" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT