Published : 28 Mar 2019 06:50 AM
Last Updated : 28 Mar 2019 06:50 AM

நான் பனங்காட்டுக்காரி; சலசலப்புக்கு அஞ்சமாட்டேன்: தமிழிசை

திமுக, காங்கிரஸ் கூட்டணி தோல்வியைத் தழுவும் என கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

கோவில்பட்டியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணியின் காரியாலய திறப்பு விழாவில் அவர் பேசியது: இலங்கை தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் பாதுகாக்காத திமுகவும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துள்ளன. `ராகுலை பிரதமராக முன்னிறுத்துகிறோம்’ என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் அனைத்து கட்சி தலைவர்களும் மேடையில் இருந்தபோது, அதைச் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு வராதது ஏன்?.`நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை ஏன் கொண்டு வரவில்லை?’ என ஸ்டாலின் கேட்கிறார்.

5 முறை தமிழகத்தில் முதல்வராக இருந்த கருணாநிதி, தமிழை வழக்காடு மொழியாக ஏன் கொண்டு வரவில்லை?. ஏனென்றால், தமிழ் மொழியை வளர்க்கிறேன் எனக் கூறி, கனிமொழியைத்தானே அவர் வளர்த்தார். கனிமொழி இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். இந்த மண்ணின் மகள் நான். என்னை கருப்பாக இருக்கிறேன் என்று சமூக வலைதளங்களில் கேலி பேசுகின்றனர். இது பனங்காட்டுக்கே உரிய கருப்பு. இந்த பனங்காட்டுக்காரி எந்த சலசலப்புக்கும் அஞ்ச மாட்டேன் என்றார்.

மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் பேசும்போது, "கருப்பு தான் அழகு. அதற்காக தமிழிசை கவலைப்பட வேண்டாம். நீங்கள் இங்கே தூத்துக்குடி மக்களுடனேயே இருப்பவர். இந்த மக்களுக்காக சேவை செய்பவர். மற்றவர்கள்போல திடீரென்று தேர்தலுக்காக வந்தவர் அல்ல" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x