Published : 23 Mar 2019 01:24 PM
Last Updated : 23 Mar 2019 01:24 PM
சிவகங்கை தொகுதியை எனக்கு அளிக்கவிடாமல் தடுக்க முயற்சி நடக்கிறது. காங்கிரஸ் தலைமைக்கு என்னுடைய விசுவாசம் தெரியும், முடிவு ராகுல் கையில் என சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை அறிவித்து சிவகங்கை தொகுதியை மட்டும் நிறுத்தி வைத்துள்ளார்கள். இங்கு கார்த்தி சிதம்பரம் சீட்டு கேட்டுள்ளார். அவருக்குக் கிடைக்கும் என்கிற நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அவருக்கு ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது.
அடுத்து பலம் வாய்ந்த வேட்பாளர் என்றால் தொகுதியில் நன்கு பரிச்சயமானவர் சுதர்சன நாச்சியப்பன். ஏற்கெனவே ராஜ்யசபா உறுப்பினராக இருந்து நிலைக்குழுக்களில் சிறப்பாகப் பணியாற்றி கட்சி மேலிடத்தில் நன்மதிப்பைப் பெற்றவர்.
அவரை நிறுத்தினால் வெற்றி நிச்சயம் எனும் நிலையில், சிதம்பரம் தரப்பில் தங்கள் ஆதரவாளர் ஒருவருக்கு தொகுதியை ஒதுக்குவதாகக் கேட்டு வருவதால் இழுபறி உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தகவல் பரவுகிறது.
இதுகுறித்து, சிவகங்கை தொகுதி கேட்டுள்ள சுதர்சன நாச்சியப்பனிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:
சிவகங்கை தொகுதி அறிவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார்கள் என்ன பிரச்சினை?
இன்று மாலை அதை இறுதிப்படுத்திவிடுவார்கள். அது பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?
அது தலைமை பார்த்து முடிவு செய்வதுதானே. எதிலுமே நம்முடைய ஆசைகளைச் சொல்ல முடியாது அல்லவா? தலைமை பார்த்துதான் முடிவு செய்யவேண்டும்.
நீங்கள் சிவகங்கை தொகுதியைக் கேட்டுள்ளீர்களா?
ஆமாம், முதலிலிருந்தே கேட்டு வருகிறேன். விருப்ப மனுவில் பணம் கட்டி இருக்கிறேன், பேனலில் பெயர் வந்திருக்கிறது. டிஸ்கஷனில் இருக்கிறது. எல்லாமே இருக்கிறது. இப்ப நானும் கார்த்தியும் மட்டும்தானே இருக்கிறோம்.
கார்த்திக்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்து நீங்கள்தானே சாய்ஸ்?
அது தலைமைதான் முடிவெடுக்கணும் அல்லவா? அவர்கள் சொல்வதற்காகத்தான் காத்திருக்கிறோம்.
கார்த்திக்கு வாய்ப்பில்லை என்றால் எங்கள் ஆதரவாளர் ஒருவரை அறிவிக்க வேண்டும் என அவர்கள் தரப்பில் கோரிக்கை வைப்பதாகச் சொல்கிறார்களே?
நடைமுறை என்னவென்றால் பிரச்சினை உள்ளது என்றால் அடுத்து முடிவு செய்யவேண்டியது தலைவர் கையில் என விட்டுவிடுவார்கள்.
மாநிலத் தலைவர் அழகிரி கையிலா?
மாநிலத் தலைவரின் ரோல் எல்லாம் முடிந்து விட்டது. இனி அகில இந்தியத் தலைவர் ராகுல்தான் முடிவெடுப்பார்.
அப்படியானால் பிரச்சினை இருக்கிறதுதானே?
அதெல்லாம் இருக்கத்தானே செய்யும், உங்களுக்கெல்லாம் தெரியாததா? அதுதான் வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்களே. வந்தால் வென்றுவிடுவோம் என்ற எண்ணம்தான். நான் வெல்வது முக்கியமல்ல, ஒரு இடம் ராகுல் பிரதமராவதற்கு கூடுதலாகக் கிடைக்கும் அல்லவா.
இன்று மாலை உறுதியாகத் தெரிந்துவிடுமா?
இன்று மாலை வரலாம், இல்லையென்றால் நாளை வந்துவிடும். தொடர்ந்து பல மாநிலங்களுக்கான தேர்வுகள் நடந்து வருகின்றன. அதையெல்லாம் முடிக்க வேண்டும். வேட்புமனுதாக்கல் இறுதி நாட்கள் உள்ள மாநிலங்கள் இருக்கிறது அல்லவா? நமக்கு 26-ம் தேதி முடிகிறது ஆகவே விரைவில் அறிவிப்பார்கள்.
உங்களுக்கான வாய்ப்பு எத்தனை சதவீதம் உள்ளது?
நம்பிக்கைதான். தலைமை பார்த்து முடிவு செய்வதுதான். உங்களைப் போன்ற ஊடக நண்பர்களே கூறும்போது கட்சிக்குத் தெரியாதா? யார் கட்சிக்காக விசுவாசமாக இருப்பார்கள், யார் கட்சி சொல்வதை மறுக்காமல் செய்வார்கள் என்று தெரியும் அல்லவா?
நான் எப்போதும் கட்சி சொல்வதை மட்டுமே கேட்டு நடப்பவன். கட்சிக்கு எதிராகப் புரட்சி செய்து எப்போதும் நடக்கும் நபரல்ல. அதற்கான மரியாதை எனக்கு கட்சிக்குள் இருக்கிறது அல்லவா. ஆகவே நம்பிக்கையுடன் இருக்கிறேன் பார்ப்போம்.
இவ்வாறு சுதர்சன நாச்சியப்பன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT