Published : 12 Mar 2019 11:24 AM
Last Updated : 12 Mar 2019 11:24 AM

திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வருவோரிடம் சமூக ஆர்வலர்கள் போர்வையில் பணம் பறிக்கும் கும்பல்

சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில், பணத்துக்காக பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

பின்னலாடை நகரம் என்பதால், பெண்கள் தங்களுடன் வேலை செய்யும் நபர்கள் மூலமாக செவிவழி செய்தியாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொள்வார்கள். அதில், அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்த பகிர்தலும் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில், சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில், சிலர் அந்தந்த பகுதி மக்களை சந்தித்து அரசின் நலத்திட்டங்களை பெற்றுத் தருவதாகக் கூறி, பண மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று மனு அளிக்க வந்த பெண்கள் சிலர் கூறியதாவது: குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று வருகிறோம். சமூக ஆர்வலர் எனக் கூறும் எங்கள் பகுதியைச் சேர்ந்த ஒருவர், கணக்கம்பாளையம் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகள் தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், அதற்கு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தால் போதும் எனக் கூறி அழைத்து வந்தார். நாங்களும் மனு அளித்தோம். இந்நிலையில், எங்களில் சிலர் அரசு அலுவலகங்களில் வேலை வாங்கித்தர முடியுமா என்று கேட்கவே, அதற்கும் உடன் வந்தவர்கள் வாங்கித் தருகிறோம். மாலையில் வீட்டுப் பகுதிக்கு நேரில் வருகிறோம்.

இரண்டு மாதங்களுக்குள் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்துள்ளனர். இதற்கெல்லாம் குறிப்பிட்ட தொகை செலவாகும் எனக் கூறி, பணம் பறிக்கும் செயலில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது. இவர்களை யார் கட்டுப்படுத்துவது? என்றனர். மங்கலம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கூறும்போது, ‘குடியிருக்க வீடு, குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா, சாக்கடை பிரச்சினை தொடங்கி இலவச வீட்டுமனை வரை பலரும் பல்வேறு பொதுப் பிரச்சினைகளுக்காக, ஆட்சியர் அலுவலகத்தை நாடுகிறோம். பலர் பெண்கள் என்பதால், அவர்களின் அறியாமையை சிலர் தங்களின் சுயநலத்துக்காக விசிட்டிங் கார்டு, லெட்டர்பேடு அடித்து வைத்துக்கொண்டு இதுபோன்ற மோசடி செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதன்மூலமாக, நபருக்கு ரூ.200 தொடங்கி ரூ.1500 வரை பணம் பார்க்கும் கும்பல்களும் உண்டு' என்றார். விழிப்புணர்வு பதாகை இல்லை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் ஒருவர் கூறும்போது, ‘பொதுவாகவே மக்களை திசை திருப்பி பணம் பறிக்கும் கும்பலின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. திருப்பூர் போன்ற தொழில் நகரத்தில், ஏமாற்றுவது என்பது எளிதாக உள்ளது. நலத் திட்டங்கள் வாங்கித் தருவதாக பின்னலாடை நிறுவனத்தில் ஒன்றிரண்டு பெண்களை நம்ப வைத்தால், அந்த பெண்கள் மூலமாக அங்குள்ளவர்களை மொத்தமாக திரட்டிவிடலாம்.

அதன்படி, வாரந்தோறும் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொண்டு, ஆட்சியர் அலுவலகத்தில் வலம் வரும் பலரும் பணம் பறிக்கின்றனர். இதைத் தடுக்க ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எந்தவித பதாகைகளும், அறிவிப்புகளும் இல்லாததால், அவர்கள் ஏமாறுவதும் அதிகரிக்கிறது. பொதுமக்கள் தங்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நேரடியாக அலுவலர்களை சந்தித்து மனு அளிக்கலாம். இதற்காக இடைத்தரகர்களையோ அல்லது சமூக ஆர்வலர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியும் பணம் பறிப்பவர்களையோ நம்பவேண்டாம் என பதாகை வைத்தால், அனைவரும் பயன்பெறுவார்கள். போலிகளும் தடுக்கப்படுவார்கள்' என்றார். திருப்பூர் வருவாய் அலுவலர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஆகியோரை தொடர்பு கொண்டபோது, இருவரும் தேர்தல் தொடர்பான மீட்டிங்கில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x