Published : 20 Mar 2019 09:08 AM
Last Updated : 20 Mar 2019 09:08 AM
உக்கடைத் தேவர், பூண்டி வாண்டையார், கபிஸ்தலம் மூப்பனார் ஆகியோரது குடும்பங்கள் முன்னொரு காலத்தில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் பிரபலமாக இருந்த குடும்பங்களாகும். செல்வந்தர்களாகவும், நாட்டின் அரசியல் சக்தியை நிர்ணயிக்கக் கூடியவர்களாகவும் இவர்கள் இருந்தார்கள்.
இதில் கபிஸ்தலம் மூப்பனார் குடும்பத்தில் இருந்த கருப்பையா மூப்பனார் என்றழைக்கப்படும் ஜி.கே.மூப்பனார், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாளடைவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக சக்திவாய்ந்த பொறுப்பில் இருந்தார். அப்போது, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழு உறுப்பினராக ஜி.ஆர்.மூப்பனார் என்றழைக்கப்படும் ஜி.ரெங்கசாமி மூப்பனார் இருந்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்க்கும் மிக முக்கியப் பொறுப்பை ஏற்று ஜி.கே.மூப்பனாரின் நிழல்போல செயல்பட்டு வந்த ஜி.ஆர்.மூப்பனாருக்கு அரசியலில் ஈடுபட்டு சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது.
தமாகாவில் முக்கிய பங்குகடந்த 1996-ம் ஆண்டு கருத்து வேறுபாடு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜி.கே.மூப்பனார் விலகி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியபோது தமிழகம் முழுவதும் அவரது பின்னணியில் இருந்து செயல்பட்டவர் ஜி.ஆர்.மூப்பனார்.
மாநிலம் முழுவதும் கட்சியில் யாருக்கு எந்த பொறுப்பைக் கொடுக்க வேண்டும். எப்படி அவர்களிடம் வேலையை வாங்க வேண்டும் என அரசியலில் சாணக்கியத்தனமாக செயல்பட்டு வந்தார்.
அந்த நேரத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து அப்போதைய மக்களவைத் தேர்தலில் திமுக- தமாகா கூட்டணி 40-க்கு 40 இடங்களில் அமோக வெற்றி பெற பின்னணியில் இருந்து செயல்பட்டவர் ஜி.ஆர்.மூப்பனார்.
ஜி.கே.மூப்பனாரின் மறைவுக்குப் பின்னர், ஜி.கே.வாசனை தலைவராகக் கொண்டு கட்சியை உருவாக்கினார். சிறிது காலம் கழித்து அதே தமாகாவை மீண்டும் தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்று ஜி.ஆர்.மூப்பனார் செயல்பட்டார்.
பின்னர் 2014-ம் ஆண்டு மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் ஏற்பட்ட உரசலுக்குப் பிறகு 2-வது முறையாக ஜி.கே.வாசன் தலைமையில் தமாகாவை மீண்டும் தொடங்கி தமிழகம் முழுவதும் அக்கட்சியை வழிநடத்திச் சென்றவர் ஜி.ஆர்.மூப்பனார்.
காங்கிரஸ் கட்சியிலும், தமாகாவிலும் டெல்டா மாவட்டங்களில் ஜி.ஆர்.மூப்பனார் மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்திருந்தார். அவரது ஆலோசனையின்படியே கட்சி நடத்தப்பட்டு வந்தது.
தியாகராஜர் ஆராதனை விழாஅரசியல் மட்டுமில்லாமல், கலை, கல்வித் துறையிலும் மிகப்பெரிய பங்காற்றியவர். திருவையாறில் ஆண்டுதோறும் நடைபெறும் தியாகராஜர் ஆராதனை விழாவை, ஜி.கே.மூப்பனாருக்குப் பின்னர் ஜி.ஆர்.மூப்பனாரே பொறுப்பேற்று திறம்பட நடத்தி வந்தார். இதேபோல கும்பகோணத்தில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த நாட்டியாஞ்சலி மீண்டும் நடத்தும் விதமாக விழாக்குழுவை உருவாக்கி, கடந்த சில ஆண்டுகளாக நாட்டியாஞ்சலியை நடத்திய வரும் ஜி.ஆர்.மூப்பனாரே.
கபிஸ்தலத்தில் உள்ள கோவிந்தசாமி மூப்பனார் நினைவுப் பள்ளியை இன்றளவும் ஜி.ஆர்.மூப்பனார் குடும்பத்தினர் நடத்தி அப்பகுதி ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் கல்வி பெற உதவிபுரிந்து வருகின்றனர்.
அரசியல், கலை, கல்வி என எந்தத் துறையானாலும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்துவதில் திறமையான அரசியல் சாணக்கியத்தனத்தைப் பெற்றவர் ஜி.ஆர்.மூப்பனார் என அவரது விசுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவரை ஜி.ஆர்.மூப்பனாரின் ஆலோசனையின்படியே செயல்பட்டு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் என்னும் இயக்கம் தற்போது படகோட்டி இல்லாத படகுபோல நிலை தடுமாறி நிற்கிறது என்று அந்த இயக்கத்தினர் வேதனையுடன் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT