Published : 26 Mar 2019 10:30 AM
Last Updated : 26 Mar 2019 10:30 AM

தனியாக வேட்புமனு தாக்கல் செய்த மதுரை அதிமுக வேட்பாளர்: கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டது ஏன்?

அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியன், நேற்று (திங்கள்கிழமை) தாக்கல் செய்தபோது கூட்டணியில் அங்கம் வகிக்கும் மற்ற கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் யாரையும் உடன் அழைத்து செல்லாதது, அக்கட்சி தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மதுரை அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியன், நேற்று திறந்த வெளிஜீப்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மாநகர அதிமுக அலுவலகம் அமைந்துள்ள பனங்கல் சாலையில் இருந்து கட்சியினருடன் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார். 

அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு அவரை வழிநெடுக வரவேற்றனர்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, எம்எல்ஏ-க்கள் சரவணன், பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன், வழக்கறிஞர் ரமேஷ், நிலையூர் முருகன், பாமக மாவட்ட செயலாளர் கிட்டு, தமாகா சார்பில் முன்னாள் எம்பி ஏஜிஎஸ் ராம்பாபு, மாவட்ட தலைவர் சேதுராமன், பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்டத் தலைவர்கள் சசிக்குமார், ஹரிகரன், சுசீமகேந்திரன், தேமுகதி மாவட்டச் செயலாரள்கள் சிவமுத்துக்குமார், பாலசந்தர், கவியரசு, புதிய தமிழக கட்சி உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளர் ராஜ்சத்தியனுடன் ஊர்வலமாக வந்தனர். 

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்ததும், போலீஸார் ஊர்வலமாக வந்தவர்களை தடுத்து நிறத்தினர். அதன்பிறகு வேட்பாளர் ராஜ்சத்தியன், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் சரவணன், பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் ஆகியோருடன் சென்று மாவட்ட ஆட்சியர் ஆட்சியரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராஜ்சத்தியனை, முன்னாள் மண்டலத் தலைவர் ஜெயவேல், அண்ணாநகர் முருகன், முன்மொழிந்தனர். மாற்று வேட்பாளராக சூரகுளம் ஊராட்சி செயலாளர் பூமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது உடன் 4 பேர் மட்டுமே உடன் அனுமதிக்கப்படுவார்கள்.

அதனால், ராஜ்சத்தியன் வேட்புமனு தாக்கல் செய்தபோது, அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, எம்எல்ஏ-க்கள் சரவணன், பெரிய புள்ளான், முன்னாள் எம்எல்ஏ தமிழரசன் உடன் சென்றனர். கூட்டணி கட்சிகள் சார்பில் ஒருவர் கூட வேட்பாளருடன் செல்லவில்லை. 

முழுக்க முழுக்க அதிமுகவினரே உடன் இருந்ததால் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. ராஜ்சத்தியன் வேட்புமனு தாக்கல் செய்தபோது புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளரும், வேட்பாளர் ராஜ்சத்தியனின் தந்தையுமான ராஜன்செல்லப்பா எம்எல்ஏ, உடன் செல்லவில்லை.

அது அவர், மகனுக்காக சொந்த கட்சியின் முக்கியமானவர்கள் வேட்பாளருடன் செல்வதற்காக பெருந்தன்மையுடன் வேட்புமனு தாக்கலுக்கு உடன் செல்லாமல் வெளியே இருந்து இருக்கலாம்.

ஆனால், அதுவே கட்சியின் மற்ற நிர்வாகிகள் யாராவது வேட்பாளராக இருந்து அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்தபோது ராஜன் செல்லப்பா இதே பெருந்தன்மையுடன் உள்ளே செல்லாமல் இருந்து இருப்பாரா? என்று கூட்டணிக்கட்சி நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுபோல், உள்ளூரில் இருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும், அதிமுக வேட்பாளர் ராஜ்சத்தியன் வேட்புமனுதாக்கலுக்கு வரவில்லை. அவர் தேனியில் ஓபிஎஸ் மகன் தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அதிமுகவினர் கூறுகையில், ‘‘ஒரு கூட்டணி நிர்வாகிகளை அழைத்து சென்றால் மற்றவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதால் யாரையும் உடன் அழைத்து செல்லவில்லை.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வேட்பாளர் ராஜ்சத்தியன் சந்தித்து ஆசிப்பெற்றுள்ளார். அவருக்கு தேனி தொகுதி தேர்தல் பணி பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால் அங்கு சென்றுவிட்டார். அவர் திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை, ’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x