Published : 10 Mar 2019 12:38 PM
Last Updated : 10 Mar 2019 12:38 PM
நாங்கள் மக்களுடன் கூட்டணி வைத்திருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறேன். எந்தத் தொகுதி என்பதை விரைவில் தெரிவிக்கிறேன் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி, அறிவித்துள்ளது.
தன்னுடைய கட்சியின் சின்னத்தை, பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் கமல்ஹாசன்.
அப்போது செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்ததாவது:
எங்களின் மக்கள் நீதி மய்யம் கட்சி, மக்களிடம் கூட்டணி வைத்திருக்கிறது. மக்களுடன் கூட்டணி வைத்திருப்பதுதான் பலமான கூட்டணி என்று நான் நினைக்கிறேன். இதுதான் வெற்றிக் கூட்டணி.
எங்களுக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. நிச்சயம், தமிழகத்தில் ‘ஒளி பாய்ச்சுவோம்’ எனும் நம்பிக்கை இருக்கிறது.
நாளை 11ம் தேதி முதல் 15ம் தேதி விருப்பமனு அளித்தவர்களுடன் நேர்காணல் நடைபெறுகிறது. அதேவேளையில், தேர்தல் அறிக்கையையும் தயார் செய்துகொண்டிருக்கிறோம். விரைவில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடுவோம்.
ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் சட்டம் எப்படி முக்கியமோ அதேபோல், கருணையும் மிகமிக முக்கியம். சட்டம் அதன் போக்கில் செய்யட்டும். நாம் கருணை அடிப்படையில் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யவேண்டும்.
அதேபோல், ஏழு பேர் விடுதலை எப்படி முக்கியமோ, ஏழரை கோடி பேரின் விடுதலையும் இங்கே முக்கியம்.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.
அப்போது கமலிடம், ‘21 சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில், நிற்கப்போவதில்லை என்று உங்கள் நண்பர் ரஜினிகாந்த் இப்போது அறிவித்திருக்கிறார். அவரிடம் நீங்கள் ஆதரவு கேட்பீர்களா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு கமல், ‘ஆதரவு என்பது கேட்டுப் பெறுவது அல்ல. தாமாகவே கொடுக்கவேண்டும். அப்படி கேட்காமல், தாமாகவே கொடுப்பதும் பெரியவிஷயம். பெறுவதும் பெரியவிஷயம். ரஜினி கொடுப்பார் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT