Published : 18 Mar 2019 11:33 AM
Last Updated : 18 Mar 2019 11:33 AM

வேலூர் மாவட்டத்தில் சரியும் நிலத்தடி நீர்மட்டம்: தண்ணீரை விலைக்கு வாங்கும் விவசாயிகள் - விவசாயத்தை கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளதால் கவலை

வேலூர் மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிய ஆரம்பித்துள்ளது. கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வேலூர் அடுத்துள்ள சிவநாதபுரம் கிராமத்தில் டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பியிருந்த விவசாயி கள் பெருத்த ஏமாற்றம் அடைந் தனர். இதன் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரியத் தொடங்கியுள்ளது. பாலாற்றின் வடக்கு மற்றும் தெற்குப்பகுதி மேட்டு நிலமாக இருப்பதால் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகள், ஆழ்துளை கிணறு களின் நீர்மட்டம் கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கோடை காலம் தொடங்க உள்ள நிலையில் நீர்மட்டம் மேலும் சரிய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.

வேலூர் அடுத்துள்ள சிவநாத புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பித்துள்ளது. விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பலர் விவசாயத்தை கைவிட்டுள்ளனர். ஒரு சிலர் டிராக்டர் டேங்கர்களில் விலைக்கு தண்ணீரை வாங்கி பயிர்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் டிராக்டர் டேங்கர் தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிவநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் கூறும் போது, ‘‘50 சென்ட் நிலத்தில் தக்காளி, 20 சென்ட் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளேன். 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தண்ணீர் வற்றிவிட்டது. 4 நாட்களுக்கு ஒருமுறை கிணற்றில் இருக்கும் நீரை பயன்படுத்தி 2 சென்ட் நிலத்துக்குத்தான் தண்ணீர் பாய்ச்ச முடிகிறது. வருமானம் கிடைக்கும் என்பதால் தக்காளி பயிரிட்டேன். ஒருமுறை அறுவடை செய்தால் 10 கூடை தக்காளி கிடைக்கும். வேலூர் மார்க்கெட்டில் கிலோ ரூ.10-க்கு விற்று சம்பாதித்தேன். இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் 5 அல்லது 6 கூடை தக்காளிதான் கிடைக்கிறது. தண்ணீர் இல்லாத தால் தக்காளியின் அளவு சிறிதாகி, எடையும் கிடைப்பதில்லை.

பயிரை வைத்துவிட்டேன் என்ற கவலையில் அருகில் உள்ள விவசாய நிலங்களில் இருந்து 6 ஆயிரம் லிட்டர் கொண்ட ஒரு டிராக்டர் டேங்கரை 500 ரூபாய் கொடுத்து வாங்கி தக்காளி தோட்டத்துக்கு பாய்ச்சி வருகிறேன். 50 சென்ட் நிலத்துக்கு 7 டேங்கர் தண்ணீர் தேவைப்படுகிறது. தக் காளியில் கிடைக்கின்ற வருமானம் தண்ணீரை வாங்கவே சரியாக இருக்கிறது. இப்படியே இருந்தால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். வசதி இல்லாததால் போர்வெல் போட முடியவில்லை. இடைப்பட்ட காலத்தில் மழை பெய்தால் இருக்கின்ற கொஞ்சம் பயிரை காப்பாற்ற முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x