Published : 10 Mar 2019 10:55 AM
Last Updated : 10 Mar 2019 10:55 AM
அதிமுக கூட்டணியில் சேர பேச்சுவார்த்தை நடத்தும் தேமுதிகவினர், விஜயகாந்த்தின் சொந்த ஊரான மதுரை மக்களவைத் தொகுதியை கேட்பதாகத் தெரிய வந்ததால் உள்ளூர் அதிமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
திமுக கட்சி மேலிடம் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கும் பணி ஒருபுறம் நடந்தாலும், மற்றொருபுறம் சீட் கேட்டவர்களிடம் நேர்காணலையும் தொடங்கிவிட்டது. ஆனால், அதிமுக இன்னும் கூட்டணியை இறுதி செய்யாமல் உள்ளது. தேமுதிகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்திக் கொண் டிருக்கின்றனர்.
விஜயகாந்தின் சொந்த ஊரான மதுரை மக்களவைத் தொகுதியை தரும்படி தேமுதிக கட்சி மேலிடம், கேட்பதாக அக்கட்சியினர் கூறு கின்றனர். தேமுதிக கேட்கும் மதுரை உள்ளிட்ட சில தொகுதிகளை விட்டுத்தர அதிமுகவுக்கு மனமில்லாததால் கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்னும் முடிவாகாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், புறநகர் மாவட்டச் செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர், அதிமுகவுக்கான தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். ‘பூத்’ வாரியாக கமிட்டிகளை அமைத்து, வாக்காளர்களுக்கு பல்வேறு விதங்களில் அரசு திட்டங்களை கொண்டு சேர்த்து வருகின்றனர். வேட்பாளரை அறிவிக்காவிட்டாலும் கட்சிக்காக அதிமுகவினர் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். கட்சி மேலிடமும், மதுரை அதிமுகவுக்குதான் என்று கூறிவிட்டதால், சிட்டிங் எம்பி கோபாலகிருஷ்ணன் முதல் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருகின்றனர்.
ஆனால், அதிமுகவினர் அதிர்ச்சியடையும் வகையில் தற்போது மதுரை மக்களவைத் தொகுதியை தேமுதிக அடம்பிடித்து கேட்பதாகவும், இங்கு சுதீஷ் அல்லது பிரேமலதாவை நிறுத்த முயற்சிப்பதாகவும் அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே, மதுரை தொகுதியை பாஜக கேட்டு வந்தது. அதற்கு அதிமுக, மற்றொரு முக்கியமான தொகுதியை விட்டுக் கொடுத்து அவர்களை ஒரு வழியாக சமாளித்தது. தற்போது தேமுதிக, மதுரையை கேட்டு ஒற்றைக் காலில் நிற்பதால் அதிமுக கட்சி மேலிடம் திரிசங்கு நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவுக்கு மதுரை முக்கியத் தொகுதி என்பதோடு, இந்த மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 8 தொகுதிகளை அதிமுக கடந்த தேர்தலில் கைப்பற்றி செல்வாக்குடன் உள்ளது. இந்த சூழ்நிலையில் மதுரையை விட்டுக்கொடுக்க அதிமுக தயாராக இல்லை. ஆனால், மதுரை கிடைக்காமல் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதனால், மதுரை மாவட்ட அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் எக்காரணம் கொண்டும் மதுரையை கூட்டணி கட்சிக்கு தாரை வார்க்க சம்மதிக்க மாட்டார்கள். அதே நேரம், கட்சியின் எதிர்கால நலன் கருதி ஒரு முடிவு எடுத்துவிட்டால், அதற்கு கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT