Published : 03 Mar 2019 10:19 AM
Last Updated : 03 Mar 2019 10:19 AM

நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் மாற்றம்- மக்களவைத் தேர்தலில் கை கொடுக்குமா?

நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளர் மாற்றப்பட்டது மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கை கொடுக்குமா? என்ற கேள்வி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் உதகை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக புத்திசந்திரன் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் பதவி வழங்கினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. மேலும், நீலகிரி மாவட்டச் செயலாளராகவும் நியமித்தார். சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக கே.ஆர்.அர்ஜுணன் நியமிக்கப்பட்டார்.

இவருக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியும் வழங்கப்பட்டது. இவர் தலைமைக்கு காட்டிய விசுவாசம், கோத்தகிரியில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை வைத்தே திறந்து வைத்தது உள்ளிட்டவற்றால் செல்வாக்கு அதிகரித்து, மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து ஏறுமுகமாக இருந்த அர்ஜுணனுக்கு, மாவட்ட மகளிர் அணி தலைவர் பதவி நியமனம் வினையானது. இந்த விவகாரம் புகைந்து வந்த நிலையில், 2013-ம் ஆண்டு கே.ஆர்.அர்ஜுணனின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த பாலநந்தகுமார் நியமிக்கப்பட்டார்.

இளம் வயதிலேயே மாவட்டச் செயலாளராக உயர்ந்த பாலநந்தகுமாரின் பதவியை, 10 நாட்களில் பறித்து ஜெயலலிதா அதிர்ச்சி அளித்தார். பின்னர், பர்லியாறு ஊராட்சித் தலைவராக இருந்த எஸ்.கலைசெல்வன், மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர், தற்போது டிடிவி தினகரனின் அமமுகவின் மாவட்டச் செயலாளராக உள்ளார். இந்நிலையில், 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலகிரி மாவட்டச் செயலாளராக மீண்டும் கே.ஆர்.அர்ஜுணன் நியமிக்கப்பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக கருதப்பட்ட இவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா அணியில் இருந்து வந்தார்.

பின்னர், அதிமுக இரு அணிகள் இணைப்புக்குப் பின்பு, முதல்வர் பழனிசாமி மற்றும் கட்சி ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆகியோர், இவரை மாவட்டச் செயலாளராக தொடர செய்தனர். இருவரையும் மகிழ்விக்கும் வண்ணம், 2017 டிசம்பர் மாதம் உதகையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்தார். இவரது பதவி காலத்தில், முதல்வர் பழனிசாமி மூன்று முறை உதகை வந்து அரசு விழாக்களில் பங்கேற்றார். மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை கே.ஆர்.அர்ஜுணன் செய்து வந்த நிலையில், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதமாகவே மாவட்டச் செயலாளராக புத்திசந்திரன் நியமிக்கப்படுவார் என, அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர். 2013-ம் ஆண்டு அமைச்சர் பதவி பறிப்பு, கட்சி பதவி பறிப்புக்கு பின்னர் கட்சியில் புத்திசந்திரனின் செயல்பாடு முற்றிலும் குறைந்தது. நீலகிரி அதிமுகவில் தனி அணியாக செயல்பட்டு வந்தார். கூட்டுறவு சங்கத் தேர்தல்களிலும் அர்ஜுணன் ஆதரவாளர்களுக்கு எதிராக, தனது அணி ஆட்களை போட்டியிட செய்தார்.

இந்நிலையில், 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மாவட்டச் செயலாளராக புத்திசந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சராக இருந்த காலகட்டத்தில், எஸ்.பி.வேலுமணியுடன் நெருக்கமாக இருந்தார். அந்த நட்பின் விளைவாக, தற்போது மாவட்டச் செயலாளர் பதவி கிடைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்த புத்திசந்திரனுக்கு, மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ள காலம், மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய காலம். இந்த காலக்கட்டத்தில் மாவட்டச் செயலாளர் மாற்றம், அதிமுக கூட்டணிக்கு தேர்தலில் கை கொடுக்குமா? என்பதே தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்வி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x