Published : 12 Mar 2019 08:23 AM
Last Updated : 12 Mar 2019 08:23 AM
அனைத்து நோய்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என தமிழக போலீஸார் வலியுறுத்தியுள்ளனர். திருமண மான போலீஸாரின் பெற்றோர்களையும் காப்பீட்டில் பயனடையச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
விபத்து, உடல் நலக்குறைவு உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகள் வாழ்க்கையை எப்போது வேண்டுமானாலும் நிலை குலையச் செய்து விடும். எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்த்து அதை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 1 லட்சம் போலீஸாருக்கு தனியார் நிறுவனம் மூலம் மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக போலீஸாரின் சம்பளத்தில் மாதம்தோறும் ரூ.180 பிடித்தம் செய்யப்படுகிறது. ஆனால், காப்பீட்டின் மூலம் குறிப்பிட்ட சில நோய்களுக்கு மட்டுமே சிகிச்சை பெற முடியும் எனவும், பல நோய்களுக்கு சிகிச்சை பெற இயலாது எனவும் போலீஸார் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கிடையில், காப்பீட்டிலிருந்து தங்களை விடுவிக்கும்படி பலர் சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரனிடம் மனு அளித்துள்ளனர்.
எலும்பு முறிவு, புற்றுநோய், சாதாரண காய்ச்சல் முதல் வைரஸ் காய்ச்சல் வரை, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல நோய்களுக்கு சிகிச்சை பெற முடியாது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருமணமான காவலரின் பெற்றோர்கள் மருத்துவக் காப்பீட்டில் சிகிச்சை பெற அனுமதி கிடையாது.
2017-ல் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணி செய்து வந்த பெண் தலைமைக் காவலர் சங்கீதா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 16.07.2017-ல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது அவருக்கு மருத்துவ காப்பீடு பயனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை அரசு பொதுமருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இறுதியில் உயிரிழந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிக்குமார். இவர் வெரிகோஸ் நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ரூ.1.4 லட்சம் செலவானது. அதை காப்பீடு நிறுவனம் கொடுக்க மறுத்தது. இதனால், கோபம் அடைந்த ரவிக்குமார் தனது சம்பளத்தில் இனி காப்பீட்டுத் தொகையை பிடித்தம் செய்ய வேண்டாம் என டிஜிபியிடம் மனு அளித்தார். இதேபோல் விழுப்புரம் மாவட்டம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவில் பணிபுரியும் காவலர் மகேஷ் என்பவரும் டிஜிபியிடம் மனு அளித்துள்ளார்.
கடந்த மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவில் பணி செய்து வரும் பெண் தலைமைக் காவலர் ஒருவருக்கு கர்ப்பப்பையில் பிரச்சினை ஏற்பட்டு ரூ.89,000 செலவானது. இதில், ரூ.27,000-ஐ மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது.
காவலர்களின் எதிர்பார்ப்புகள்
அனைத்து தனியார் மருத்துவமனைகளி லும் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் காவலர்களுக்கும் அதற்கான தொகை முழுவதையும் காப்பீடு நிறுவனம் வழங்க வேண்டும்,
திருமணமானால் பெற்றோருக்கு சிகிச்சை இல்லையென்ற விதியை மாற்றி, பெற்றோருக்கும் மருத்துவ காப்பீடு அளிக்க வேண்டும், அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தால் அதற்கான முழுத் தொகையையும் காப்பீடு நிறுவனமே அளிக்க வேண்டும் என காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிகார துஷ்பிரயோகம்
இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “போலீஸா ருக்கு எந்த வகையான மருத்துவக் காப்பீட்டைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை போலீஸ் உயர் அதிகாரிகளே நிர்ணயம் செய்கின்றனர். இதில், வேறு எந்த போலீஸாரும் கேள்வி கேட்க முடியாது.
எனவே, அனைத்து நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வகையில் காப்பீடு இருக்க வேண்டும். இல்லை என்றால் எங்களிடமிருந்து பணத்தைப் பிடித்தம் செய்யாமல் நாங்களே தேர்வு செய்யும்படி மருத்துவ காப்பீடு இருக்க வேண்டும்.
எங்களது அனுமதி இல்லாமல் உயர் அதிகாரிகள் எங்களது பணத்தை பிடித்தம் செய்வது என்பது அதிகார துஷ்பிரயோகம். மேலும் நாங்கள் காப்பீட்டில் இணைய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அதை ஏற்று எங்களது சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
அடையாள அட்டை
காப்பீடு நிறுவனத்தின் மூலம் சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு அடையாள அட்டை வழங்கப்படும். ஆனால், இந்த அட்டை பல போலீஸாருக்கு வழங்கப்படாமல் இருந்தது. இதனாலும், மருத்துவச் செலவு செய்த பணத்தை திரும்பப் பெற முடியாமல் பல போலீஸார் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT