Published : 31 Mar 2019 06:12 AM
Last Updated : 31 Mar 2019 06:12 AM
வேலைக்கு விடுமுறை எடுத்துமக்களவைத் தேர்தல், சட்டப் பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கை செல்வதால் விவசாயம், நெசவு மற்றும் கட்டுமானப் பணிகள் பாதித்துள்ளதாக சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு பொதுத்தேர்தலும், 18 சட்டப்பேரவைதொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ள நிலையில் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளனர்.
கட்சித் தலைவர்கள் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாகவும் பிரச்சாரம் செய்வதுடன் பொதுக்கூட்டம் மூலமாகவும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். வேட்பாளர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு தேசிய கட்சிகள், மாநில கட்சிகள், பெரிய கட்சிகள், சிறிய கட்சிகள் என கட்சி பேதம் இல்லாமல் ஆட்களை அழைத்து வந்து தங்களது பலத்தை நிரூபிக்க முற்படுகின்றனர். அதற்காக பல்வேறு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன. அதனால் விவசாய வேலை செய்வோர், நெசவு வேலைக்குச் செல்வோர், கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் என பலதரப்பட்ட தொழிலாளர்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆர்வத்துடன் செல்வதைக் காண முடிகிறது. இதன்காரணமாக விவசாயப் பணிகள், நெசவு வேலைகள், கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்று சம்பந்தப்பட்டவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மஞ்சள் அறுவடை
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி கூறும்போது, “கீழ்பவானி, கொடிவேரி, காலிங்கராயன் ஆகிய பாசனப் பகுதிகளில் சுமார் 40,000 ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது மஞ்சள் பயிர் அறுவடைக்காலம். வயலில் தண்ணீர் இருக்கும்போதே அறுவடை செய்தாக வேண்டும். இல்லாவிட்டால், வெப்பம் தாங்காமல் மஞ்சள் வெந்துவிடும்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்துக்கு விவசாயத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் சென்றுவிடுவதால் மஞ்சள் அறுவடைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆண்கள் 7 மணி நேர வேலைக்கு ரூ.500-ம், பெண்கள் 7 மணி நேர வேலைக்கு ரூ.250-ம் கூலி பெறுகின்றனர்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு சில மணி நேரம் சென்றால் ரூ.150 முதல் ரூ.500 வரை கிடைப்பதால், பல பகுதிகளில் மஞ்சள் அறுவடைப் பணிகள் முடங்கியுள்ளன” என்றார்.
குடும்பத்துடன் பிக்னிக்
இதுகுறித்து விசைத்தறி உரிமையாளர் ராமசாமி கூறும்போது, “விசைத்தறி நெசவு வேலைக்கு கணவன், மனைவி என இருவருக்கும் முன்பணமாக ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை வழங்கியுள்ளோம். ஒருவர் காலை 6 மணிக்கு நெசவு வேலைக்கு வந்து மாலை 6 மணி வரை வேலை செய்தால் ரூ.500 கூலி வழங்கப்படும். தற்போது தேர்தல் பிரச்சாரத்துக்கு அவர்கள் குடும்பத்துடன் பிக்னிக் போல சென்றுவிடுகின்றனர். அதனால் நெசவு வேலை பெரிதும் பாதிக்கப்பட்டு, குறித்த நேரத்தில் துணிகளை நெய்து கொடுக்க முடியவில்லை” என்றார்.
“கட்டுமானப் பணிகளைப் பொறுத்தவரை ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் வெளிமாநில தொழிலாளர்கள் தவிர, மற்ற தொழிலாளர்களில் பெரும்பாலானோர் பிரச்சாரத்துக்கு செல்வதால், ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து பெண் தொழிலாளர்கள் கூறும்போது, “தேர்தல் பிரச்சாரத்துக்கு வேனில் அழைத்துப் போய் பிரச்சாரம் முடிந்ததும் வேனில் வீட்டுக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். நேரத்துக்கு சாப்பாடு, குடிநீர், நொறுக்குத் தீனிகள் என அனைத்தும் கொடுக்கின்றனர். ஒவ்வொரு வீட்டில் இருந்து எத்தனை பேர் செல்கிறோமோ அத்தனை பேருக்கும் சன்மானமும் கிடைக்கிறது. மொத்தத்தில் இலவசமாக சுற்றுலா போய்வருவது போல இருக்கிறது.
சன்மானம் அதிகம்
வெயிலில் போய்வருவது மட்டுமே சிரமமாக இருக்கிறது. மற்றபடி வேலைக்கு போய் கிடைக்கும் கூலியைவிட சன்மானம் அதிகமாகக் கிடைப்பது மகிழ்ச்சிதான்” என்றனர்.
“பிரச்சாரத்துக்கு வாகன ஏற்பாடு, பிரியாணி சாப்பாடு என பெரும்பாலான கட்சிகள் பண பலத்தோடு அசத்துவதால், காலை, மாலை, இரவு என எல்லா வேளைகளிலும், எந்தக் கட்சி பிரச்சாரத்துக்கும் செல்வதற்கு அந்தந்த கட்சி வேஷ்டிகள், சேலைகளுடன் மக்களும் தயாராகத்தான் இருக்கின்றனர். இன்னும் 17 நாட்கள் இப்படித்தான்” என்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT