Published : 17 Mar 2019 12:19 PM
Last Updated : 17 Mar 2019 12:19 PM
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவி அவர். சமீபகாலமாக படிப்பில் பெரிதாக நாட்டம் இல்லை. வகுப்பில் தோழிகளிடமும் மனம்விட்டுப் பேசாமல் இருந்துள்ளார். இதையறிந்த வகுப்பாசிரியை, பள்ளியின் தலைமை ஆசிரியையான ஸ்ரீதேவியிடம் விஷயத்தை கொண்டுசெல்கிறார். மனதில் இருப்பதை வகுப்பு ஆசிரியை, பள்ளித் தோழிகளிடம் வெளிப்படுத்தாத அந்த மாணவி, தலைமை ஆசிரியையிடம் தன் நிலையை தெரியப்படுத்துகிறார்!
தந்தையை இழந்த நிலையில் தாய் மற்றும் உறவினர்கள் தனக்கு திருமண ஏற்பாடுகளை தடபுடலாக செய்து வருவதாகக் கூறி, மனமுடைந்து அழுதபடி கண் கலங்குகிறார். படிக்கவே விருப்பம் என்றும், வீட்டில் தந்தை இல்லாததால் குடும்பச் சூழ்நிலையை காரணம்காட்டி திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்வதாக அந்த மாணவி சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி, கடந்த நவம்பர் மாதம் சைல்டுலைனில் புகார் அளிக்கிறார்.
குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தப்படுகிறது. மாவட்ட சமூகநலத் துறையினர் மற்றும் சைல்டுலைனை சேர்ந்தவர்கள், மாணவியின் தாய்க்கு தக்க அறிவுரைகள் கூறியும், எச்சரித்தும் அனுப்புகின்றனர். இந்த சம்பவத்துக்கு பின் அம்மாணவி படிப்பில் தீவிர கவனம் செலுத்தியதுடன், தற்போது பிளஸ் 2 தேர்வையும் மன மகிழ்வுடன் எழுதி வருகிறார் !
கல்விப் பணி என்பது காலை 9.30 மணிக்குத் தொடங்கி மாலை 4.20 வரை வகுப்புக்குள்ளோ அல்லது பள்ளிக்குள்ளோ முடிந்துவிடுகிற விஷயம் அல்ல.
கல்வி, சக மனிதர்கள் மீதான நேசத்தையும், சமூகத்தை எதிர்கொள்ளக்கூடிய துணிவையும், தன்னம்பிக்கையையும் தொடர்ச்சியாக கற்றுத்தர வேண்டும். இதனை தன் பணியின் பெரும்பகுதியாகக் கருதி உழைக்கிறார் ஆசிரியை ஸ்ரீதேவி.
வணிகவியல் ஆசிரியை...
2002-ல் புஞ்சை புளியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிக்கு சேர்ந்த ஸ்ரீதேவி, அங்கு ஒன்றரை ஆண்டுகள் பணி செய்துவிட்டு, காரமடை அரசு மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடங்களை எடுக்கத் தொடங்கினார். அங்கு 15 ஆண்டுகள் பணி. இந்தக் காலகட்டத்தில் அவரது பாடத்தில் பல மாணவிகளை முழு மதிப்பெண் பெறவைத்துள்ளார். அதேபோல, ஆண்டுதோறும் தேர்வெழுதும் அனைத்து மாணவிகளையும் தேர்ச்சி அடையச் செய்துள்ளார். இவர் கற்றுத் தரும் பாடங்களில் ஒட்டுமொத்த சராசரி மதிப்பெண் 140-க்கு மேல் என்பதுதான், இவரின் அபரிமிதமான உழைப்புக்கு எடுத்துக்காட்டு. 10-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகள் பலரும், இந்த ஆசிரியைக்காக பிளஸ் 1 பாடப் பிரிவில் வணிகவியல் பாடத்தை விரும்பி எடுத்துப் படித்ததும், இவரது உழைப்புக்கான அங்கீகாரமாகவே சொல்கிறார்கள் சக ஆசிரியைகள்.
8 மாதங்களில் ஏற்பட்ட மாற்றம்!
பதவி உயர்வு பெற்று கடந்த ஜூன் 14-ம் தேதி ஊத்துக்குளி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியையாக மாற்றலானார். 8 மாதங்களில் எண்ணிலடங்கா பெண் குழந்தைகளின் இதயத்தில் இடம்பிடித்துவிட்டார். எப்படி இந்த மாற்றங்கள் நிகழ்ந்தன?
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளில் ஒன்று. பெரும்பாலும் தொழிலாளர்களாக வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருப்பவர்களின் பெண் வாரிசுகள் படிக்கும் பள்ளி இது. அதை நன்கு உணர்ந்து, `பெண்ணுக்கு கல்வி ஏன் அவசியம்?’ எனும் கேள்வியோடு மாணவிகளை அணுகுகிறார் ஸ்ரீதேவி.
வணிகவியல், கணக்குப் பதிவியல் பாடப் புத்தகம் மட்டுமின்றி, வாழ்க்கைப் பாடத்தையும் தன்னுடைய பாடமாகவே சொல்லித்தருகிறார். இவரின் உழைப்புக்கு கைமேல் பலன் கிடைக்கிறது. பெற்றோரிடம் அல்லது தோழியிடம் பேசவோ, சொல்லவோ தயங்குகிற விஷயங்களை, கூச்சமின்றி பெண் குழந்தைகள் இவரிடம் பகிர்ந்து கொள்வதுதான் பள்ளியில் பணியாற்றும் பல ஆசிரியைகளின் ஆச்சர்யத்துக்கு முக்கியக் காரணம்.
“10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் பெண் குழந்தைகளைக் கையாள்வது என்பது, உண்மையிலேயே சிக்கலான விஷயம்தான். அவர்களின் எண்ணத்துக்கு ஏற்ப செயல்பட்டு, தேவையை அறிந்துகொள்ள வேண்டிய கடமை நமக்கு உள்ளது” என்கிறார் ஆசிரியை ஸ்ரீதேவி. மேலும், “பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே, சமூகம் முழுமையான கல்வி உயர்வை அடையமுடியும் என்பதில் எனக்குத் தீவிர நம்பிக்கை உண்டு. மாணவி ஒருவர் பள்ளிக்கு வராமல் விட்டுவிட்டால், அவரது பெற்றோரை வகுப்பாசிரியர் செல்போனில் தொடர்புகொண்டு, விளக்கம் கேட்பார். அதேபோல, நான்கைந்து நாட்கள் ஒரு மாணவி பள்ளிக்கு வரமுடியவில்லை என்றாலோ, அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றாலோ, மதிய உணவு இடைவேளையின்போது, இருசக்கர வாகனத்தில் மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று, விசாரித்துவிடுவேன். இதனால் பள்ளிக்கு முறையாக வராமல் இருந்த மாணவிகள்கூட, தற்போது தொடர்ச்சியாக பள்ளிக்கு வருகிறார்கள்.
அதேபோல, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கிறார்கள். தாய், தந்தை வேலைக்கு செல்லும் வீடுகளில் உள்ள சில குழந்தைகள், அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்த நிலையில் அவர்களை கண்காணித்து, வீட்டுக்கு சென்றேன்.
அவர்களிடம் தற்போது மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. `நாங்க ஸ்கூலுக்கு போகாட்டி, டீச்சர் வீட்டுக்கு வந்துடுவாங்க’
என்றுகூறி, பல குழந்தைகள் சரியாக பள்ளிக்கு வருவது மகிழ்ச்சியளிக்கிறது” என்றபடி சிரித்தார்.
பெண் குழந்தைகள் நன்றாக கல்வி பயில வேண்டுமென்ற விதை எப்போது விழுந்தது என்று கேட்டால், “அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணிக்குச் சேரும் முன்பே, தனியார் பள்ளியில் வேலைபார்த்த அனுபவம்தான் காரணம்” என்ற பதிலைத் தருகிறார்.
மேலும், “சொற்ப வருவாயில் தனியார் பள்ளியில் உழைத்தோம். மனதுக்குப் பிடித்த ஆசிரியை பணி என்பதுடன், அரசுப் பள்ளியில் சேர்ந்ததும் அந்த ஆற்றல் பன்மடங்கானது. வாங்கும் சம்பளத்துக்கு மனசாட்சியுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான்” என்கிறார் ஸ்ரீதேவி மிகுந்த பொறுப்புடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT