Published : 05 Mar 2019 10:22 AM
Last Updated : 05 Mar 2019 10:22 AM

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் கட்சி பதவி பறிப்பு: ஒருங்கிணைத்து செல்லாதது காரணமா?

உடுமலை புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டதற்கு, கட்சியினரை ஒருங்கிணைத்து செல்லாததே காரணம் எனக் கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் நீக்கப்பட்டு, பொள்ளாச்சி வி.ஜெயராமன் நியமிக்கப்பட்டார். கே.ராதாகிருஷ்ணனுக்கு அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, அமைச்சரின் ஆதரவாளர்கள் சிலர், சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்.

இதுதொடர்பாக உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த அதிமுகவினர் சிலர் கூறியதாவது:

பொள்ளாச்சி வி.ஜெயராமன் பல தேர்தல் களை பார்த்தவர். இடைத்தேர்தல்களில் வேலை செய்தவர். மாநில தேர்தல் பிரிவுச் செயலாளராக சிறப்பாக பணிபுரிந்தவர். இதனால், அவரது அனுபவம் மக்களவைத் தேர்தலில் கட்சிக்கு கைகொடுக்கும் என தலைமை நினைத்துள்ளது. அதன்படி, ஜெயராமனுக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இருவரும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அணுகுமுறை என்பது வேறாகதான் உள்ளது.

பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரனைகூட அனுசரித்து செல்லாமல் இருப்பது, கட்சி மாறி வந்தவர்களுக்கு பதவி வழங்கியது, கட்சியின் சீனியர்களை அரவணைத்து செல்லாதது என, அமைச்சரின் கட்சிப் பதவி பறிப்புக்கான காரணங்கள் ஏராளம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சென்று மீண்டும் திரும்பி வந்த ஹக்கீமுக்கு, அமைச்சர் ராதாகிருஷ்ணனின் சிபாரிசால் அமைப்புசாரா ஓட்டுநர் அணியின் மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. இப்படி பல்வேறு விஷயங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

மக்களவைத் தேர்தலில், பொள்ளாச்சி தொகுதிக்கு தற்போதைய எம்.பி. சி.மகேந்திரன் மீண்டும் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில், இவரது வெற்றிக்கு அமைச்சர் ராதாகிருஷ்ணன் எந்த அளவுக்கு இறங்கி வேலை செய்வார் என்பது சந்தேகமாகவே இருந்தது. ஆனால், புறநகர் மாவட்ட செயலாளர் பதவி மாற்றம் என்பது மகிழ்ச்சியான விஷயமே. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், புறநகர் மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள பொள்ளாச்சி வி.ஜெயராமன், புறநகர் பகுதியில் ஒன்றியச் செயலாளர்களை உற்சாகமாக சந்தித்து வருகிறார். 2014 மக்களவைத் தேர்தலின்போது புறநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்த ராதாகிருஷ்ணனை நீக்கிவிட்டு, அப்போதும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கு இதே பதவியை வழங்கியவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தரப்பில் பேசியபோது, 'பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் உள்ளார். திருப்பூர் புறநகர் மாவட்டத்திலுள்ள ஊர் என்பது, கோவையில் இருந்து 200 கி.மீ. தொலைவில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒருவரை நியமிக்கப்படும்போதுதான், கட்சிப் பணியாற்ற முடியும். இன்றைக்கு அனைவரும் வந்து சென்னை தலைமை கழகத்தில் மனு அளித்தனர். அனைவரும் கட்சியில்தான் உள்ளோம். சீனியர், ஜூனியர் என்று யாரையும் பார்ப்பதில்லை. இருவரது சமூகமும் ஒன்றாக இருந்தாலும் அரசியல் என்பது வேறுதானே' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x