Last Updated : 06 Mar, 2019 07:57 AM

 

Published : 06 Mar 2019 07:57 AM
Last Updated : 06 Mar 2019 07:57 AM

தொழில்நுட்பரீதியாக ராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்த மத்திய அரசு தீவிரம்: இஸ்ரோ மூலம் 3 செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது

செயற்கைக்கோள் வசதிகள் மூலம் தொழில்நுட்பரீதியாக ராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இஸ்ரோ உதவியில் 3 செயற்கைக்கோள்களை இந்த ஆண்டுக்குள் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நம்நாட்டுக்கு முக்கிய தேவையான தொலைத்தொடர்பு, தொலையுணர்வு, வழிகாட்டுதல் செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. மேலும், வணிக ரீதியாகவும் வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துகிறது.

இதற்கிடையே நாட்டின் பாதுகாப்பு கருதி ராணுவ நடவடிக்கைகளை தொழில்நுட்பரீதியாக மேம்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இஸ்ரோ உதவியின் மூலம் இந்த ஆண்டுக்குள் 4 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. அதில்ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம்நவீன ‘மைக்ரோசாட் - ஆர்’ செயற்கைக்கோள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து மார்ச் இறுதியில் ‘எமிசாட்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியதாவது:இந்திய எல்லைப் பகுதிகள், அண்டை நாடுகளின் செயல்பாடுகள், கடல் மற்றும் நிலப்பரப்புகளை கண்காணித்தல் உட்பட ராணுவப் பணிகளுக்கு ஜிசாட்-7ஏ, ஹைசிஸ் மற்றும் கார்டோசாட், ஐஆர்என்என்எஸ் வகை என 14 செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும், சர்ஜிக்கல் ஸ்டிரைக் உட்பட முக்கிய ராணுவ நடவடிக்கைகளுக்கு பெரும்பாலும் கார்டோசாட் வகை செயற்கைக்கோள்களே பயன்படுகின்றன. மேலும், இஸ்ரோவின் உதவியை ராணுவம் நாட வேண்டியுள்ளதால் கால தாமதம் ஏற்படுகிறது. வல்லரசு நாடுகளைப் போல ராணுவ செயல்பாடுகளுக்கு பிரத்யேக செயற்கைக்கோள்கள் இருக்க வேண்டும் என் மத்திய அரசு விரும்புகிறது. அந்தவகையில் முழுவதும் ராணுவப் பயன்பாட்டுக்காக செயற்கைக்கோள்களைத் தயாரித்துவிண்ணில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக இந்தஆண்டு 4 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடிவானது. அதில் நாட்டின் எல்லை கண்காணிப்புக்கு ‘மைக்ரோசாட் - ஆர்’ என்ற இமேஜிங்செயற்கைக்கோள் கடந்த ஜனவரியில் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத் தப்பட்டது.

தொடர்ந்து நவீன மின்னணு செயற்கைக்கோளான ‘எமிசாட்’ மார்ச் இறுதியில் பிஎஸ்எல்எவி ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. இது உளவுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இதுதவிர 2 சிறிய அளவிலான மைக்ரோ செயற்கைக்கோள்கள், புதிய வகை எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இவை எல்லாம் உள்நாட்டு டிஆர்டிஓ மையத்தின் (Defence Research and Development Organization) நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும்.

இந்நிலையில் நமது செயற்கைக்கோள்கள் உதவியின் மூலம் அருகே உள்ள 12 தெற்காசிய நாடுகளின் நிலப் பரப்புகளை நம்மால் எளிதாகக் கண்காணிக்க முடியும். உதாரணமாக மொத்தம் 8.81 லட்சம் சதுர கி.மீட்டர் பரப்பளவு கொண்ட பாகிஸ்தானின் 7.8 லட்சம் சதுர கி.மீட்டர் பரப்பை மிக துல்லியமாகக் கண்காணிக்கலாம்.

இதர நாடுகளின் நிலப்பரப்பை 10 மீட்டர் இடைவெளி அளவில் படம் எடுக்கவும் முடியும். தொடர்ந்து அடுத்தடுத்து விண்ணில் ஏவப்பட உள்ள செயற்கைகோள்கள் மூலம் இந்தச் சேவையின் பலன்கள் பலமடங்கு அதிகரிக்கும். மேலும், நம்நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் உதவியாக இருக் கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராக்கெட் ஏவுதலில் புதிய சாதனை

பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் எமிசாட்டுடன், வணிகரீதியாக 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் செலுத்த முடிவாகியுள்ளது. உலகில் முதல்முறையாக 3 வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பிஎஸ்எல்வி ராக்கெட் புறப்பட்டு 763 கி.மீட்டரை அடைந்ததும் 420 கிலோ எடையுடைய எமிசாட்டும், 505 கிமீ தொலைவில் 250 கிலோ எடையுடைய 28 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்படும்.

அதன்பின் ராக்கெட் இறுதிநிலையான பிஎஸ் 4 இயந்திரம் உந்தித் தள்ளப்பட்டு, சோதனை முயற்சியில் அதில் வைக்கப்பட்டுள்ள மாணவர் கண்டுபிடிப்பு சாதனம் 485 கி.மீட்டர் துாரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் வழக்கத்துக்கு மாறாக இந்த முறை பிஎஸ் 4 இயந்திரம், சூரிய மின்தகடுகள் (சோலார் பேனல்கள்) மூலம் இயக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x