Published : 15 Mar 2019 10:21 AM
Last Updated : 15 Mar 2019 10:21 AM
மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ எனக் கூறி, மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக அரசும், தன்னார்வலர்கள், சூழலியல் ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். மரங்கள் வெறும் நிழல் தருவது மட்டுமின்றி, பறவைகளின் வாழ்விடமாகவும், பிராணவாயு உற்பத்தி செய்யும் மையமாகவும் விளங்குகின்றன. எனவேதான், வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒருபுறம் மரங்கள் வெட்டப்பட்டாலும், அவற்றை வளர்ப்பதன் அவசியம் குறித்து தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில், நாமக்கல் மாவட்டம் மோகனுார் அருகேயுள்ள நா.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் க.தங்கவேல், ‘தன் பங்கேற்பு மரம் வளர்ப்புத் திட்டம்’ என்ற திட்டத்தை தொடங்கி, பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் மரம் வளர்ப்பின் அவசியம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, சிறப்பாக பராமரித்து வருகிறார். அவரை சந்தித்தோம்.
500 மரக்கன்றுகள்...
“2012-ல் நா.புதுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சேர்ந்தேன். பணியில் சேர்ந்தது முதல் இதுவரை பள்ளி வளாகத்தில் 500 மரக்கன்றுகளை, ஆசிரியர்கள், மாணவர்கள் உதவியுடன் நட்டுள்ளேன். இதில், 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நன்கு வளர்ந்துள்ளன.
அப்துல் கலாம் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாள், காந்தி பிறந்த நாள் போன்ற முக்கிய நாட்களில், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளோம். அவ்வாறு நடப்படும் மரக்கன்றுகளை மாணவர்கள் சேதப்படுத்தாமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரங்களின் பெயர் மற்றும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வுப் பதாகைகள் இரும்புக் கூண்டின் மீது வைக்கப் படுகிறது.
மேலும், மரம் வளர்ப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், எனது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் புத்தர் ஓவியம் வரைந்துள்ளேன். நிழல் தரும் மரங்கள் மட்டுமின்றி, நெல்லி, நாவல், முருங்கை, புளி, வாழை போன்ற பயன்தரும் மரங்களும் பள்ளி வளாகத்தில் நடப்பட்டுள்ளன. குறிப்பாக, நமது மண்ணின் தன்மைக்கேற்ற நாட்டு மரங்கள் நடப்படுகின்றன.
சத்துணவுக்குப் பயன்படும் காய், கீரை!
முருங்கை மரத்தில் கிடைக்கும் காய், கீரை உள்ளிட்டவை சத்துணவுக்கு பயன்படுத்தப்படுகிறது. மரங்களை வளர்ப்பதில் மாணவர்களின் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக 2015-ல் ‘தன் பங்கேற்பு மரம் வளர்ப்புத் திட்டம்’ எனும் திட்டம் தொடங்கப்பட்டு, மாணவர்களிடம் ரூ.10-ம், ஆசிரியர்களிடம் ரூ.500-ம் நிதி திரட்டப்பட்டது.
தானாக முன்வந்து நிதி அளித்தவர்களிடம் மட்டும் இந்த தொகை வாங்கப்பட்டது.
இந்த நிதி மூலம் பள்ளி வளாகத்தில் நடப்படும் மரக்கன்றுகளின் பாதுகாப்புக்காக இரும்பு கம்பிவேலி, மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக டியூப், குடம், மண்வெட்டி உள்ளிட்டவை வாங்கப் பட்டன.
பள்ளியில் மரம் வளர்ப்பு செயல்பாடுகள் குறித்த காட்சிகள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதைப் பார்த்த, சென்னையில் வசிக்கும் இதே கிராமத்தைச் சேர்ந்த வீரய்யா எனும் தொழிலதிபர், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் இறைக்க ரூ.15 ஆயிரம் மதிப்பில் மின் மோட்டார் அமைத்துக் கொடுத்தார்.
இதன் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்களும் மரங்களுக்கு தண்ணீ்ர் ஊற்றும் பணியில் ஈடுபடுகின்றனர்.
மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவர்கள் மத்தியில் ஆர்வம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த, முதலில் வகுப்புக்கு ஒரு மரம் வழங்கப்பட்டது. அந்த மரத்தை சிறப்பாகப் பராமரிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இது வெற்றியடைந்ததால், ஒரு மாணவருக்கு ஒரு மரக்கன்று வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
எதிர்காலத்தில் பள்ளி வளாகத்தை மரக்கன்றுகளால் பசுஞ்சோலையாக மாற்ற வேண்டுமென்பதே நோக்கம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT