Published : 31 Mar 2019 10:23 AM
Last Updated : 31 Mar 2019 10:23 AM
கடந்த 22 ஆண்டுகளாக சர்வே பணிகளுடன் கிடப்பில் போடப்பட்டுள்ளது கிருஷ்ணகிரி ரயில் திட்டம் பணிகள். ஆனால், மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணகிரி ரயில்வே திட்டம் குறித்து கூறப்படும் தேர்தல் உறுதிமொழி, வாக்காளர்களை கவருமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1905-ம் ஆண்டு திருப்பத்தூரில் தொடங்கி பர்கூர் வழியாக கிருஷ்ணகிரி வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது. 1936 வரை ரயில் போக்குவரத்து தொடர்ந்தது. 1942-ம் ஆண்டு போதிய வருமானம் இல்லை என தெரிவித்து ரயில் இயக்கம் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1996-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இருந்து ரயில்வே திட்ட கோரிக்கை வேட்பாளர்களின் வாக்குறுதிப் பட்டியலில் இடம்பெற்று வருகிறது.
1996-ல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற தமாகா நரசிம்மன், 1998-ல் வெற்றி பெற்ற அதிமுக கே.பி.முனுசாமி, 1999-ல் வெற்றி பெற்ற திமுக வெற்றிச்செல்வன், 2004, 2009-ல் வெற்றி பெற்ற திமுக இ.ஜி.சுகவனம் மற்றும் 2014-ல் வெற்றி பெற்ற அதிமுக அசோக்குமார் என அனைவரும் ரயில்வே திட்டம் கொண்டு வருவேன் என்கிற உறுதிமொழியுடன் வெற்றி பெற்றனர். அனைவரும் மத்திய அரசிடம் முறையிட்டு, பல்வேறு முயற்சிகள் எடுத்தும், சர்வே பணிகளுடன் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடர்பாக கிருஷ்ணகிரி ரயில் மற்றும் பேருந்து பயணிகள் சங்கத்தினருக்கு புள்ளி விவரங்களுடன் சென்னை ரயில்வே துறையில் இருந்து விளக்க கடிதம் ஒன்று வந்தது. அதில் ஜோலார்பேட்டை - கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு கடந்த 1997-ம் ஆண்டு சேட்டிலைட் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் முடிவில் 104.20 கி.மீ ரயில் பாதை அமைக்க ரூ.226.42 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. ஆனால் வருவாய் இழப்பு ஏற்படும் என காரணம் தெரிவித்து, ஆய்வு முடிவுகளை ஆக்ஸ்ட் 2001-ல் கிடப்பில் போட்டது ரயில்வே திட்டக் கமிஷன். இதனைத் தொடர்ந்து 2004-05-ம் ஆண்டில் ஜோலார்பேட்டை, கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், கிருஷ்ணகிரியில் இருந்து தருமபுரியை இணைக்கும் வகையில் சர்வே செய்யப்பட்டது. அதன் முடிவில் 159.20 கி.மீ தூரம் ரயில் பாதை அமைக்க ரூ.410.718 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. இதுவும் வரு வாய் இழப்பு ஏற்படும் எனக்கூறி, 2007-ம் ஆண்டு மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
பின்னர், திருப்பத்தூரில் இருந்து பர்கூர், கிருஷ்ணகிரி வழியாக சூளகிரி வரை ரயில் பாதை அமைக்க சர்வே பணிகள் கடந்த 2008-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டன. சர்வே முடிவில் 101 கி.மீ தூரம் அமைக்க ரூ.558.24 கோடி திட்ட மதிப்பீடு கூறப்பட்டது. இதில் ஆண்டிற்கு 0.608 சதவீத வருவாய் கிடைக்கும் என்பதால், இதன் முடிவும் 2009-ல் கிடப்பில் போடப்பட்டது. 2010-ம் ஆண்டு மீண்டும் சர்வே மேற்கொள்ளப்பட்டு ரூ.687.92 கோடிக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2011-ம் ஆண்டு கிடப்பில் போட்டது திட்டகமிஷன்.
வருவாய் அறிக்கை
இதனையறிந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சிறு, குறுந்தொழில்கள் சங்கத்தின் நிர்வாகி ஏகம்பவாணன் தலைமையிலான குழுவினர், மாவட்டத்தில் இருந்து அரிசி, புளி, கிரானைட், ஓசூரில் இருந்து உற்பத்தி ஆகும் பொருட்கள் ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய்கள் குறித்து புள்ளிவிவரங்கள், வணிகவரித்துறை மூலம் செலுத்தப்படும் வரி விவரங்கள் குறித்து நீண்ட அறிக்கை தயார் செய்தனர்.
இத்திட்டம் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகளும், ரயில்வேக்கு கிடைக்கும் வருவாய்கள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன், ரயில்வே துறை, உள்துறை அமைச்சருக்கும் மனு செய்தனர். இதற்கு அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பிய பதில் கடிதத்தில், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும், இதற்கு தேவையான நிலத்தையும், திட்டப்பணிக்கான செலவில் 50 சதவீதம் பங்கையும் மாநில (தமிழக)அரசு ஏற்றுக் கொண்டால், இத்திட்டம் உடனடியாக பரிசீலனை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது.
மீண்டும் சர்வே
இதன் பின்னரும் 2015-16-ம் ஆண்டு மீண்டும் சர்வே பணி மேற்கொள்ளப் பட்டது. பின்னர், அதுவும் கிடப்பில் போட்டது ரயில்வே திட்டக் கமிஷன். இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் தேர்வு செய்யப்பட்ட எம்பி.க்கள் தமிழக அரசிடம் அழுத்தமாக, விவரமாக தெரிவிக்கவில்லை. பல்வேறு சர்வே முடிவுகளும், திட்ட அறிக்கையும் தயாராக உள்ள நிலையில், கிருஷ்ணகிரிக்கான ரயில்வே திட்டம் தமிழக அரசு முன் வந்தால் மட்டுமே நிறைவேறும். தற்போது களத்தில் உள்ள வேட்பாளர்கள் ரயில்வே திட்டம் தொடர்பான கோரிக்கையை முன்வைத்து வாக்குகள் சேகரித்து வருவது வாக்காளர்களிடம் எடுபடுமா என்ற கேள்வி குறி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT