Published : 14 Mar 2019 12:15 PM
Last Updated : 14 Mar 2019 12:15 PM
ட்விட்டர் இந்தியா நடத்தியுள்ள ஆய்வில் தமிழகத்தில் 98% இளைஞர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த ஆர்வத்துடன் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
#Powerof18 இளைஞர்கள் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சி என்ற கருத்தியல் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
இந்த ஆய்வின் முடிவில் தமிழகத்தில் 98% இளைஞர்கள் தங்கள் வாக்குரிமையை செயல்படுத்த ஆர்வத்துடன் இருப்பது தெரியவந்துள்ளது.
நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் இளம் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர். 18-லிருந்து 19 வரையிலான இளம் வாக்காளர்கள் 8.98 லட்சம் பேர் உள்ளனர். ஜனவரி 31 நிலவரப்படி தமிழக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை இது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை சேர ஊக்குவிக்கும் பிரச்சாரம் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சத்யபர்தா சாஹூ கூறும்போது, "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்னும் நாங்கள் இளைஞர்களை ஊக்குவித்து வருகிறோம். அதனால் தேர்தலுக்கு முன்னதாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நம்புகிறேன். பூத் அலுவலர்கள் வாயிலாக வாக்காளர்களை அடையாள அட்டை பெற ஊக்குவித்து வருகிறோம்" என்றார்.
இளைஞர்களை ஈர்த்த ஆணையம்:
2016 தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் மீம்ஸ், காணொளிகள், சமூக வலைதளங்கள் வாயிலாக முதல் முறை வாக்காளர்களை ஊக்குவித்தது. வாக்காளர் அடையாள அட்டையைப் பெறுவது மட்டுமல்லாமல் வாக்களிப்பதையும் ஊக்குவித்தது.
இளம் வாக்காளர்களின் பங்களிப்பு குறித்து OPN விளம்பர நிறுவனத்தின் கொள்கை தலைவர் பாலா மணியன் பேசும்போது, "கடந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரத்தில் இருந்த இளம் வாக்காளர்கள் எண்ணிக்கைக்கும் களத்திற்கு வந்து வாக்களித்த இளைஞர்களின் எண்ணிக்கைக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது.
இத்தனைக்கும் தேர்தல் ஆணையம் இளைஞர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதில் அதிக மெனக்கிடல் காட்டியது. அதனால்தான் அந்த பிரச்சாரத்தை முன்னெடுத்தது.
ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள், 90-ஸ் கிட்ஸ் மீம்ஸ், பிரபலங்களின் வீடியோ என பல உத்திகளை தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் ஆணையம் பின்பற்றி பிரச்சாரம் செய்தது.
ஆனால், தங்களது பிரச்சாரம் போதனையாக இருக்கக் கூடாது அவர்களை ஊக்குவிப்பதாக இருக்க வேண்டும் என்பதால் இளைஞர்கள் பாதையிலேயே சமூக வலைதளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியது" என்றார்.
கடந்த தேர்தலுக்கு முன் இத்தகைய முன்னெடுப்புகள் இருந்த நிலையில், வரவிருக்கும் மக்களவை தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் இன்னும் பரபரப்பாக தனது வாக்காளர் ஊக்குவிப்பு பிரச்சாரத்தைத் தொடங்கவில்லை என்றுதான் கூறவேண்டும்.
தமிழகத்தில் ஒரே நாளில் மக்களவை தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வரவுள்ள நிலையில் முதல் முறை வாக்காளர்களுக்கு ஒரே நாளில் இரு தேர்தலுக்கு வாக்களிக்கும் அரிய வாய்ப்பைப் பெறவிருக்கின்றனர். இதனால், ஊக்குவிப்பு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் இன்னும் வேகமெடுக்கச் செய்ய வேண்டும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி கூறும்போது, இந்த தேர்தலுக்கும் முதன்முறை வாக்காளர்களை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT