Published : 01 Sep 2014 10:00 AM
Last Updated : 01 Sep 2014 10:00 AM

வன்னியர் சங்க பிரமுகர் வெட்டிக் கொலை: அதிமுகவினர் 7 பேர் மீது போலீஸ் வழக்கு - சிதம்பரம் அருகே பதற்றம்; போலீஸ் குவிப்பு

சிதம்பரம் அருகே சனிக்கிழமை நள்ளிரவு வன்னியர் சங்கத் தலைவர் இளம்பரிதி என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டச் சம்பவம் தொடர்பாக புதுச்சத்திரம் போலீஸார் அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றிய வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் இளம்பரிதி(35). இவர் சிதம்பரம் அருகேவுள்ள வேலங்கிப்பட்டு கிராமத்தில் வசித்து வருகிறார். இளம்பரிதிக்கும் அதே ஊரைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கத்திற்கும் கோயில் திருவிழா வரவு செலவு கணக்குத் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இளம்பரிதி மற்றும் அவரது நண்பர் பழனி (38)ஆகியோர் சனிக்கிழமை நள்ளிரவு பைக்கில் வேலங்கிப்பட்டிற்கு வந்துகொண்டிருந்தனர்.

அப்போது வேலங்கிப்பட்டு எல்லையில் ஒரு கும்பல் இருவரையும் வழிமறித்து அரிவாள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடிவிட்டது. கும்பல் தாக்கியதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த இளம்பரிதி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட பழனி கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் புதுச்சத்திரம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று இளம்பரிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைச் சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீஸார் வேலங்கிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக மாவட்ட கவுன்சிலர் செல்வரங்கம் மற்றும் அக்கட்சியை சேர்ந்த சகாதேவன், முகுந்தன், பாலமுருகன், சுப்பிரமணியன், தட்சிணாமூர்த்தி, திருஞானம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான 7 பேரையும் பிடிக்க போலீஸார் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர்.

வன்னியர் சங்கத் தலைவர் கொலை செய்யப்பட்டதால் வேலங்கிப்பட்டு பகுதியில் பதற்ற நிலை நிலவுகிறது. இதனையடுத்து கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x