Published : 24 Sep 2014 08:58 AM
Last Updated : 24 Sep 2014 08:58 AM
சென்னை துறைமுகத்தில் கன் டெய்னர்களை சோதனை செய் வதற்காக ரூ.10 கோடி செலவில் நவீன மொபைல் கன்டெய்னர் ஸ்கேனர் கருவியை சுங்கத்துறை நிறுவியுள்ளது.
இதன் மூலம், கன்டெய்னர்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்பட்டால் எளிதில் கண்டு பிடித்து தடுக்க முடியும். நம்நாட்டில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ள மூன்றாவது துறைமுகம் என்ற பெருமையை சென்னை துறைமுகம் பெற்றுள்ளது.
சென்னை துறைமுகத்தில் மாதம் ஒன்றுக்கு 1.10 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்படுகின்றன. சில சமயங் களில் இந்தக் கன்டெய்னர்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதுபோன்ற கன்டெய்னர்களை சோதனை செய்ய கருவிகள் இல்லாததால் ஊழியர்களே சோதனை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால், கால விரயம் ஏற்படுகிறது. இக்குறையை போக்கும் வகையில் சுங்கத் துறை சார்பில் சென்னை துறைமுகத்தில் நவீன மொபைல் ஸ்கேனர் கருவி நிறுவப்பட்டுள்ளது.
இக்கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து, சென்னை சுங்கத்துறை ஏற்றுமதி ஆணையர் மாயன் குமார் ‘தி இந்து’ நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்களை சோதனை செய்வதற்காக நடமாடும் காமா கதிர்வீச்சு கண்காணிப்பு கருவி (Gamma Radiographic Detection System - GaRDS) நிறுவப்பட் டுள்ளது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.10 கோடி மதிப்பிலான இந்தக் கருவி ஒரு வாகனத்துடன் இணைக் கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் உள்ளே ஒரு கண்காணிப்பு அறை உள்ளது.
கன்டெய்னரை சோதனை செய்யும்போது, இந்த கருவியில் உள்ள காமா கதிர்கள் கன்டெய்னருக்குள் ஊடுருவிச் சென்று அதில் உள்ள பொருட்களை படம் பிடிக்கும். இதை வாகனத்தின் கண்காணிப்பு அறையில் உள்ள திரையில் பார்க்கலாம். இதன் மூலம், கன்டெய்னரில் ஏதேனும் தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளதா என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும்.
இக்கருவியை வாங்குவதற்கு முன்பு, கன்டெய்னர்களில் ஏதேனும் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தால், அதை ஊழியர்களே சோதனைசெய்ய வேண்டியிருந்தது. இதற்கு பல மணி நேரம் ஆனது. தற்போது, இக்கருவி பொருத்தப்பட்டுள்ளதன் மூலம், நிமிடத்துக்கு 3 லாரிகள் வரை சோதனை செய்யப்படுகின்றன.
தற்போது, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கன்டெய்னர்கள் மட்டுமே மொபைல் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகின்றன. கன்டெய்னர்களை சோதனை செய்வதற்காக துறைமுகத்துக்கு உள்ளே 20 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடத்தை நீண்ட கால அடிப்படையில், சுங்கத் துறை குத்தகைக்கு எடுத்துள்ளது.
கடந்த 19-ம் தேதி முதல் இக்கருவி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. எனி னும், அக்.1-ம் தேதி முதல் முழுவீச் சில் அனைத்து கன்டெய்னர்களும் இக்கருவியின் மூலம் சோதனை செய்யப்படும். ஏற்கெனவே, மும்பை மற்றும் தூத்துக்குடி துறைமுகங் களில் இக்கருவி நிறுவப்பட்டுள்ளது. மூன்றாவதாக சென்னை துறை முகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு மாயன் குமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT