Published : 06 Mar 2019 07:20 PM
Last Updated : 06 Mar 2019 07:20 PM

காலையில் பேச்சுவார்த்தைக்கு ஸ்டாலினை அணுகிய தேமுதிக நிர்வாகிகள்: புதிய தகவல்

தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தையை அதிமுகவுடன் தொடங்குவதற்கு முன்னரே காலையில் ஸ்டாலினை தொடர்புகொண்ட தேமுதிக நிர்வாகிகள் பேசியதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை, துரைமுருகனுடன் செல்போனில் பேசவில்லை என சுதீஷ் மறுப்பு தெரிவித்தாலும் திமுக தரப்பில் அவர் பேசினார் என தெரிவிக்கின்றனர்.

தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும்போதே இன்று காலையில் திமுக தலைவர் ஸ்டாலினை தேமுதிக சார்பில் அணுகியதாக திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது வந்த தகவல், விருதுநகர் கிளம்பும் அவசரத்தில் இருந்த திமுக தலைவர் ஸ்டாலினை காலையில் தொடர்புகொண்டு தேமுதிகவின் நிர்வாகிகள் பேசினார்கள், நான் ஊருக்குச் செல்கிறேன் எதுவாக இருந்தாலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைக் குழுவுடன் பேசுங்கள் என  ஸ்டாலின் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதன்பின்னர் ஸ்டாலின், பேச்சுவார்த்தைக்குழு தலைவர் துரைமுருகனை தொடர்புகொண்டு தேமுதிக பேச்சுவார்த்தைக்கு வருகிறார்கள், அவர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன நிலையில் இருக்கிறார்கள் என கேட்டு வையுங்கள் நான் ஊரிலிருந்து திரும்பியவுடன் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து துரைமுருகன் பேச்சுவார்த்தைக்குழு உறுப்பினர்களை அழைத்து வீட்டில் காத்திருந்துள்ளார். அவரை அதன்பின்னரே தேமுதிக நிர்வாகிகள் 3 பேர் சந்தித்துள்ளனர். அவர்களிடம் ஸ்டாலின் கூறியபடி முதலில் உங்கள் முடிவுதான் என்ன?, உங்கள் நிலைப்பாடு என்ன? உறுதியாக ஒருபக்கம் நில்லுங்கள்.

நீங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது உங்கள் தலைவர் விஜயகாந்துக்கு தெரியுமா? என அடுக்கடுக்காக துரைமுருகன் கேள்வி எழுப்பியதாக அவரே பேட்டியில் தெரிவித்தார். அவர்கள் தடுமாற்றத்தை கண்ட துரைமுருகன் உங்கள் கவுரவத்துக்கு ஏற்றப்படி கொடுக்க எங்களிடம் தொகுதி இல்லை என்று தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

கூட்டணி குறித்து ஸ்டாலினிடம் பேசி, அவர் துரைமுருகனை கைகாட்ட அதன்பின்னர் துரைமுருகனின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் இடமில்லை என தெரிந்ததும் சுதீஷ் மீண்டும் பின்வாங்கி அதிமுகவுடன்தான் கூட்டணிப்பற்றி பேசி வருகிறோம் என கூறியதாக திமுக தரப்பில் தெரிவிக்கின்றனர்.

இன்று நடைபெற்ற சம்பவம் திமுகவைப் பயன்படுத்தப்பார்த்ததில், திமுக கொடுத்த பதிலால் தேமுதிகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x