Published : 31 Jan 2014 07:19 PM
Last Updated : 31 Jan 2014 07:19 PM
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்களுக்காக தனியாக அமைச்சகம் உருவாக்கப்படும் என மக்களவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
இலங்கை கடற்படையினர் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி சிறைப்பிடிப்பதைக் கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மீனவரணி சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் கடல் தாமரைப் போராட்டம் பாம்பனில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் நடைபெற்றது.
பாஜக தேசிய பொது செயலாளர் முரளீதர் ராவ், மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், தேசிய செயலர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில், மக்களவை எதிர்கட்சித் தலைவரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ் பேசியது:
''இந்த ஆண்டு சாகித்ய அகாடமி விருது, தமிழக மீனவ சமுதாயத்தைச் சார்ந்த ஜோ.டி.குருஸ் பெற்றிருக்கிறார். அவருக்கு முதலாவதாக எனது பாராட்டினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம் இந்திய நாடு நீண்ட கடற்கரைகளைப் பெற்ற நாடு. நம் நாட்டில் குட்டைகளில், ஆறுகளில், கடல்களில் மீன் பிடிக்கும் மீனவர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு பிரச்சினைகளும் தனித்தனியாக உள்ளது. அவற்றை நாம் தனித்தனியாக அணுக வேண்டும். அதே சமயம் இந்த மீனவர்கள் அனைவரும் வறுமையில் வாடுகிறார்கள். கல்வியிலும் பின்தங்கி இருக்கின்றார்கள்.
குஜராத் மாநில மீனவர்கள், பாகிஸ்தான் மீனவர்களால் சிறைப்பிடிக்கப்படுகிறார்கள். அதுபோல தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் இதுவரையிலும் 600-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
நான் இலங்கைக்கு இந்தியப் பிரதிநிதிகள் கூட்டாக சென்றபோது, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவிடம் இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டேன். அவரும் இலங்கை கடற்படையிடம் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்று அறிவுறுத்துகிறேன் என்றால். ஆனால் அவர் அதை கடைப்பிடிக்கவில்லை.
இந்தக் கூட்டத்தில் கணவனை இழந்த விதவைப் பெண்களை நான் பார்கின்றேன். மகனை இழந்த தாய்மார்களைப் பார்க்கின்றேன். நேற்று கூட 38 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தாக அறிகிறேன்.
இந்திய முழுவதும் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை பற்றி அறிய பாஜக சார்பில் பல்வேறு குழுக்களை அமைத்து அவற்றை அறிக்கையாக பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் முயற்சியில் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் உள்ள அந்த அறிக்கையை பொன். ராதாகிருஷ்ணன் தமிழில் வெளியிட வேண்டும்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் மீன்வளத்துறை உருவாக்கி, அதற்கு தனி அமைச்சர் நியமிக்கப்படுவார்.
இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினையை தமிழக முதல்வரால் தீர்க்க முடியாது. இந்தியப் பிரதமரால்தான் தீர்க்க முடியும். எனவே வலிமையான பாரதத்தை உருவாக்க பாஜகவை வரும் மக்களவை தேர்தலில் வாக்களியுங்கள்" என்றார்.
பின்னர் மக்களைவை எதிர்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் மகனை இழந்த, கணவனை இழந்த மீனவத் தாய்மார்களை சந்தித்து ஆறுதல் கூறினார். கடல் தாமரைப் போராட்டத்தில் 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT