Published : 21 Mar 2019 09:45 AM
Last Updated : 21 Mar 2019 09:45 AM
ஒவ்வொரு தொழிலும் நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. கட்டுமானத் தொழிலும் அதற்கு விதிவிலக்கல்ல. இடநெருக்கடி, கட்டிடக் கழிவுகள், ஆட்கள் பற்றாக்குறை, காலதாமதம் என கட்டுமானத் தொழில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண உதவுகிறது `ப்ரீகாஸ்ட்’ தொழில்நுட்பம். பல நாடுகளில் மிகுந்த பிரபலமாகியுள்ள இந்த கட்டுமானத் தொழில்நுட்பம் இந்தியாவிலும் காலூன்றத் தொடங்குகிறது. ரெடிமேடாக தண்ணீர்த் தொட்டி, பேருந்து நிறுத்தம் போன்றவைகளை தயாரித்து வந்த தொழிற்சாலை கட்டுமானர் அடுத்த கட்டமாய் ரெடிமேட் வீடுகள் மீதும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.
நிறைய பேர் அறிந்திராத, அதேசமயம், நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டிய இந்த தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தும் கோவை `வேலன் கான்காஸ்ட்' நிறுவன உரிமையாளர் கே.எம்.வேலுமணியை (48) சந்தித்தோம்.
"பூர்வீகம் காரமடை. பெற்றோர் முருகேசன், முத்துலட்சுமி. அப்பா பள்ளி உதவி தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். புஜங்கனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில 10-ம் வகுப்பு முடிச்சிட்டு, மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் பாலிடெக்னிக்குல சிவில் இன்ஜினீயரிங் டிப்ளமோ படிச்சேன். படிக்கும்போதே கட்டுமானத் தொழில்லயும், கான்கிரீட் தொழில்நுட்பத்துலேயும் எனக்கு ஆர்வம் அதிகம். நல்லா படிச்சி, நிறைய மார்க் வாங்கினேன். இப்பவரைக்கும், நிறைய கல்லூரிகளுக்குப் போய் கான்கிரீட் தொழில்நுட்பம் தொடர்பான செமினாரும் நடத்தறேன்.
கல்லூரிப் படிப்பு முடிஞ்ச பின்னால, சிவில் இன்ஜினீயரிங் கம்பெனிகள்ல வேலை செஞ்சேன். நிறைய ப்ராஜெக்ட் ஒர்க் செஞ்சேன். அதேசமயம், கான்கிரீட் கட்டிடம் சம்பந்தமாக ஆராய்ச்சிகளும் செஞ்சேன். 1998-ல மூகாம்பிகை கன்ஸ்ட்ரக்சன்னு தனியா கம்பெனி தொடங்கினேன். தொழிற்சாலை கட்டுமானங்கள்ல அதிக கவனம் செலுத்தினோம். ஜவுளி ஆலை, காகித ஆலை, கல்லூரிக் கட்டிடம்னு நிறைய கட்டிடங்கள் கட்டினோம்.
2010-ல ப்ரீகாஸ்ட் கான்கிரீட்-ல கவனம் செலுத்தத் தொடங்கினேன். பொதுவா, ஒரு இடத்துல கட்டிடம் கட்டும்போது, அங்கேயே முழு வேலையும் நடக்கும். ஆனா, இதுல வேற ஒரு இடத்துல கட்டுமானங்களை தயாரிச்சி, கிரேன், லாரி மூலம் கொண்டுபோய், எங்க தேவையோ அங்க கட்டிடத்தை அமைக்கறதுதான் ப்ரீகாஸ்ட் கன்ஸ்ட்ரக்சன். ஜெர்மனி, ஜப்பான், துபாய் நாடுகள்ல இது ரொம்ப பிரபலமான கட்டுமான முறை.
துபாய்ல நடந்த சர்வதேச கட்டுமான கண்காட்சிகளுக்கு தவறாம போய், இது தொடர்பாக நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். கான்கிரீட் தொழில்நுட்பத்துல 1940-லேயே ஜப்பான் ரொம்ப அட்வான்ஸா இருந்தாங்க. 1960-ல அவங்க அறிமுகம் செஞ்ச தொழில்நுட்பம் 2000-க்கு மேலதான் இந்தியாவுக்கு வந்ததுன்னா பாத்துக்கோங்க. அதேமாதிரி, 1960-ல ஜப்பான் கண்டுபிடிச்ச செல்ஃப் காம்ப்பேக்டிங் கான்கிரீட் முறையை ஜெர்மனி 1975-80லதான் பயன்படுத்தினாங்க. ஆனா, ஒண்ணு தெரியுமா. கட்டிடக் கலையில இந்தியாதான் உலகத்துக்கே முன்னோடி. உதாரணம், கல்லணை. அசோகர் காலத்துல கட்டுமானத் தொழில்நுட்பம் சிறப்பாக இருந்துருக்கு. நடுவுல நாம இந்த தொழில்நுட்பத்தையெல்லாம் விட்டுட்டோம்.
2010-ல ப்ரீகாஸ்ட் கான்கிரீட் டெக்னாலஜி தொடர்பான ஆராய்ச்சிகளைத் தொடங்கினேன். என்னென்ன செய்யலாம், எப்படி செய்யலாம்னு நிறைய திட்டமிட்டேன். 2012-ல 8,400 லிட்டர் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தண்ணீர்த் தொட்டியை உருவாக்கினோம். இதுக்கான மோல்டு எல்லாம் உள்ளூரிலேயே உருவாக்கினோம். இதே மாதிரி, செப்டிக் டேங்க், சாக்கடைக் கால்வாய், டாய்லெட், தொழிற்சாலை சுவர், வயர்களை கொண்டுபோகும் பாதைனு (டிரென்ச்) நிறைய உருவாக்கத் தொடங்கினோம்.
வழக்கமான கட்டுமானத்தைவிட, இந்த வகையான கட்டுமானங்கள் பல மடங்கு உறுதியாக இருக்கும். அதேபோல, வழக்கமான கட்டுமானங்களை இடிச்சிட்டா, மீண்டும் பயன்படுத்த முடியாது. உதாரணமா, சாலையோரம் இருக்கற பேருந்து நிறுத்தத்தை, ரோடு விரிவாக்கம் செஞ்சா இடிச்சிடறாங்க. இந்தக் கட்டிட கழிவை பக்கத்துல இருக்கற குளத்துல கொட்டிடறாங்க. இதனால, நீர்நிலை பாதிக்கப்படுது. அதேசமயம், ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டிடத்தை, அப்படியே வேறு இடத்துக்கு மாத்தலாம். இடிச்சாலும்கூட 90 சதவீதத்தை மறுபயன்பாட்டுக்கு உபயோகிக்கலாம். ப்ரீகாஸ்ட் கான்கிரீட் பேருந்து நிறுத்தம் தொடர்பாக ஆர்க்கிடெக்ட் அருண் உமாசங்கரோட ஆலோசனை செஞ்சி, புதுவிதமாக வடிவமைச்சோம்.
2016 இறுதியில திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே முதல் ரெடிமேடு பேருந்து நிறுத்தத்தை நிறுவினோம். இதுக்கு நிறைய வரவேற்பு இருந்தது.
அதேபோல, பொது இடங்கள்ல பிளாஸ்டிக் தண்ணீர்த் தொட்டி அமைப்பாங்க. நாங்க, கான்கிரீட் தண்ணீர்த் தொட்டியை அமைச்சிக் கொடுத்தோம். பிளாஸ்டிக் தொட்டியோட லைஃப் 3, 4 வருஷம்தான். ஆனா, கான்கிரீட் தொட்டி 100 வருஷத்துக்கு அப்படியே இருக்கும்.
பிளாஸ்டிக் தொட்டியைவிட கொஞ்சம்தான் விலை அதிகம். சுத்தம் செய்வதும் ரொம்ப சுலபம். பிளாஸ்டிக்ல இருக்கற தண்ணீரைவிட, கான்கிரீட் தொட்டியில சேமித்து வைக்குற தண்ணீர் ஆரோக்கியமானதாக இருக்கும். தண்ணீர்த் தொட்டிக்கு கிடச்ச வரவேற்பு காரணமாக, 25 இடங்கள்ல அமைச்சிக் கொடுத்தோம்.
அதேபோல, திருச்சி மாநகராட்சிக்கு பேருந்து நிறுத்தம் அமைக்கற ஒப்பந்தங்களை, வெவ்வேறு ஒப்பந்ததாரர்கள்கிட்ட பிரிச்சிக் கொடுத்தாங்க. முதல்ல சாம்பிள் செய்ய சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு மாசத்துல சாம்பிள் பேருந்து நிறுத்தங்களை கொடுத்துடுவோம். திருச்சியில நாங்க பேருந்து நிறுத்தம் அமைப்பதை பார்த்து, மற்ற மாவட்டங்களிலும் விசாரிக்கிறாங்க.
அடுத்ததா, எங்களோட கவனத்தை ப்ரீகாஸ்ட் கான்கிரீட் வீடு கட்டறதுல திருப்பியிருக்கோம். உக்கடம் பகுதியில ரூ.5 லட்சம் மதிப்புல ரெடிமேடு வீடு தயாரிச்சிக்கிட்டிருக்கிறோம். குறைந்தது 400 சதுர அடியில இருந்து, 1000 சதுர அடி வரைக்கும் வீடு தயார் செய்ய முயற்சி செஞ்சிகிட்டிருக்கோம். இதை மிதக்கும் வீடுனு சொல்லலாம். ஒரு இடத்துல வீட்டை முழுமையாக உருவாக்கி, லாரி, கிரேனை வெச்சி கொண்டுபோய், மணல், களிமண் பூமின்னு எங்க வேண்ணா நிறுவிடலாம். வழக்கமான வீட்டைக் காட்டிலும் பல மடங்கு உறுதியாவும், தரமாகவும் இருக்கும். டிசைனும் தேவைப்படற மாதிரி செஞ்சிக்கலாம்.
சுமார் 8 மாதத்துல உருவாக்க வேண்டிய ஃபேக்டரிய, நாங்க 2 மாதத்திலேயே உருவாக்கிடுவோம். அதேபோல, எங்களுக்கு ஆர்டர் கொடுத்த 20 நாள்ல வீட்டை அமைத்துக் கொடுத்துடுவோம். செலவும் வழக்கமான கட்டிடத்துக்கு ஆகறதைவிட, குறைவாகத்தான் இருக்கும். உயர் தரமான கான்கிரீட் வீடுங்கறதால, வீட்டோட வலிமை பலமடங்கு அதிகமாக இருக்கும். ரெடிமிக்ஸ் கான்கிரீட் உருவாக்கும்போது 100 சதவீதம் சுத்தமான கலவையாக இருக்கும். தேவைப்பட்டா வீட்டை அப்படியே கழட்டி, வேறு இடத்துல கொண்டுபோய் நிறுவலாம்.
ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானங்களுக்காக, கோவை நீலாம்பூர்ல தனி ஃபேக்டரி அமைச்சிருக்கோம். துபாய்ல 80 சதவீத கட்டிடங்களும், ஜெர்மனியில பெரும் பாலான கட்டிடங்களும் இந்த முறையிலதான் உருவாக்கறாங்க.
கட்டுமானப் பணிக்குத் தேவையான இட நெருக்கடி, ஆட்கள் பற்றாக்குறை, காலதாமதம்னு எந்தப் பிரச்சினையும் இதுல இருக்காது. இது தொடர்பாக அரசு மற்றும் மக்கள்கிட்ட விழிப்புணர்வு வந்தா, எளிமையான இந்த கட்டுமான முறை பரவலாகும். கட்டுமானத் தொழிலோட எதிர்காலம், ப்ரீகாஸ்ட் கான்கிரீட் கட்டுமானம் என்றால் அது மிகையில்லை" என்றார் வேலுமணி நம்பிக்கையுடன்.
(இவரைத் தொடர்புகொள்ள: velanconcast@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT