Published : 12 Mar 2019 08:11 PM
Last Updated : 12 Mar 2019 08:11 PM
திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தங்களுக்கு தனிச்சின்னம் கேட்டு டெல்லியில் முகாமிட்டுள்ள நிலையில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடாததால் திமுக அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணியில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் மக்கள் நலக்கூட்டணியிலிருந்து விலகி, திமுக தோழமைக்கட்சியாக முதலில் இணைந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டக்களங்களில் ஒன்றாக இருக்கும் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
அதன் பின்னர் இடதுசாரிகள், மதிமுக என பல கட்சிகள் வந்தது. கூட்டணியாக இல்லாமல் திமுகவுடன் கொள்கை அணியாக விடுதலைச் சிறுத்தைகள் விளங்கியது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிய வேளையில் பாமக திமுக கூட்டணிக்கு வருவதாக தகவல் வெளியானது.
இதனால் திமுக கூட்டணியில் விடுதலைச்சிறுத்தைகள் தொடருமா? என்கிற கேள்வி எழுந்தது. இந்நிலையில் கூட்டணி இறுதிப்படுத்தப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கேட்ட 2 தொகுதிகள் திமுக ஒதுக்கியது.
இதில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சொந்தச் சின்னத்தில் நிற்பதா? உதயசூரியன் சின்னத்தில் நிற்பதா? என்கிற கேள்வி எழுந்தது.
திமுக தரப்பில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கும்போதே உதயசூரியன் சின்னத்தில் நின்றால் நன்றாக இருக்கும் என கேட்டதாகவும் அதை பரிசீலிப்பாதாக திருமாவளவன் கூறியதாக தகவல் வெளியானது.
தங்களது சின்னமான மோதிரம் சின்னத்தை கேட்டு தேர்தல் ஆணையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விண்ணப்பித்தது. ஆனால் தமிழ்நாடு இளைஞர் கட்சி எனும் புதியகட்சி 39 தொகுதிகளில் நிற்பதற்காக மோதிரம் சின்னத்தைக்கேட்க 2 தொகுதிகள் மட்டும் நிற்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கேட்டதால் அதிக இடங்களில் நிற்க கேட்ட கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
இதனால் மோதிரம் சின்னமும் இல்லாத நிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் தள்ளப்பட்டதால் புதிதாக சின்னத்தை வாங்கி அதை மக்கள் மத்தியில் கொண்டுச்சென்று போட்டியில் வெல்லவேண்டிய நிர்பந்தம் உள்ளதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய நெருக்கடி உண்டாகியுள்ளது.
இதனால் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றிபெறலாமே சின்னமும் மக்களுக்கு பழகிப்போன சின்னம், வீணாக வெற்றிவாய்ப்பை சின்னம் விவகாரத்தில் தவறவிடலாமா? என்ற கேள்வி திமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஆனால் இதுகுறித்த கேள்விக்கு விடுதலைச்சிறுத்தைகள் தரப்பில் நியாயமான விளக்கம் அளிக்கப்படுகிறது. கால் நூற்றாண்டுக்காலம் தமிழகத்தில் தனிச்சின்னத்தில் போட்டியிட்ட கட்சி தற்போது அதை விடுத்து உதய சூரியன் சின்னத்தில் நிற்பது சரியாக இருக்காது என தெரிவிக்கின்றனர்.
2006-ம் ஆண்டுக்குப்பின் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வரும் தங்கள் கட்சியின் தனித்துவம் போய்விடும், அங்கீகாரம் இல்லாமல் போய்விடும் என கூறுகின்றனர். மேலும் கட்சி இத்தனை ஆண்டுகள் தனிச்சின்னத்தில் நின்றுவிட்டு இன்று அதன் தலைவர் திருமாவளவனே உதயசூரியன் சின்னத்தில் நிற்பது சரியாக இருக்காது என்கிற வாதமும் வைக்கப்படுகிறது.
மேலும் உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றால் நாளை ஒவ்வொரு விஷயத்திலும் திமுக கொறடாவின் அனுமதியும், திமுகவின் எண்ணப்படியும் செயல்படும் நிலை ஏற்படும் அதனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுயத்தன்மை பாதிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
மேலும் நாளை நடப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. வருங்காலங்களில் வரும் தேர்தல்களில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாற தற்போது தனித்து நின்று வாங்கும் வாக்குகள் முக்கியம் என தெரிவிக்கின்றனர்.
தற்போதுள்ள நிலையில் பாஜக வீழ்த்தப்பட வேண்டும், 40 தொகுதிகளிலும் வெற்றிப்பெறவேண்டும் என்கிற முனைப்பில் உள்ளவர்கள் சின்னத்தை முக்கிய நோக்கமாக கருதலாமா? என்கிற கேள்வி திமுக தரப்பில் சிலர் எழுப்புகின்றனர்.
அதே நேரம், வேண்டுமானால் திருமாவளவன் போன்ற தலைவர்கள் அவர்களது சின்னத்தில் நிற்கட்டும் இன்னொரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாமே என்கிற வாதமும் திமுகவினரால் வைக்கப்படுகிறது.
இதற்கு விடுதலைச்சிறுத்தைகள் தரப்பிலும் சிலர் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தங்களுக்காக ஒரு சின்னத்தை வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
ஆகவே தனிச்சின்னம் புதிய சின்னம் கிடைத்தாலும் அதில் நிற்பதில் விடுதலைச் சிறுத்தைகள் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த முடிவால் திமுக தரப்பில் அதிருப்தி உள்ளதாக கூறப்படுகிறது.
40 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக அணி வீழ்த்தப்படவேண்டும், தங்களது பிரதான எதிரியான பாமக வீழ்த்தப்படவேண்டும் என நினைக்கும் விசிகேவினர், இந்த விவகாரத்தில் விட்டுக்கொடுத்தால் வெற்றிப்பெறலாம் அல்லவா? என திமுக தரப்பில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால அரசியலா? தற்போதைய தேர்தல் வெற்றியா? என்கிற இரண்டுக்கெட்டான் நிலையில் திருமாவளவன் நிலை உள்ளது என்பதே நிதர்சனம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT