Published : 20 Mar 2019 11:18 AM
Last Updated : 20 Mar 2019 11:18 AM

சிட்டுக்குருவிக்கென்ன தட்டுப்பாடு?

காக்கை குருவி எங்கள் ஜாதி; நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்று ஜெயபேரிகை கொட்டினார் மகாகவி பாரதியார். இதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை` என்று இருப்பதைப் பகிர்ந்து உண்டு, பல உயிர்களையும் பாதுகாப்பது முதன்மையான அறம் என்றார் வள்ளுவர். மனிதர்களைச் சார்ந்து இருக்கும் சின்னஞ்சிறு பறவையான சிட்டுக்குருவிகளை நாம் மறந்ததால், அவற்றின் எண்ணிக்கை இன்று வெகுவாகக் குறைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி, சிட்டுக்குருவிகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் கோவை இளைஞர் பாண்டியராஜனை, உலக சிட்டுக்குருவிகள் தினமான இன்று (மார்ச் 20) பாராட்டுவதில் பெருமிதம் கொள்ளலாம்.

கோவை போத்தனூரைச் சேர்ந்த இவர், படித்தது 5-ம் வகுப்புதான். உக்கடம் பேருந்து நிலையத்தில் இவர் அமைத்த மரக் கூடுகளில் 200-க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் பாதுகாப்பாய் வசிக்கின்றன. “சக மனிதர்கள் மீதே அக்கறை குறைந்து வரும் இந்நாளில், சிட்டுக்குருவிகள் மீது அப்படியென்ன பாசம்?” என்ற கேள்வியுடன் அவரை தேடிச் சென்றோம்.

“அப்பா பாஸ்கர், ரயில்வேயில வேலை செஞ்சாரு. என்னோட சின்ன வயசுலேயே, உடம்பு சரியில்லாம இறந்துட்டாரு. அம்மா சுசிலாதான், குழந்தைங்க 5 பேரை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. நான்தான் மூத்த பையன். போத்தனூர் சித்தன்னபுரம் அரசுப் பள்ளியில 5-வது வரைக்கும் படிச்சேன். குடும்பச் சூழல்னால அதுக்குமேல படிக்க முடியலை. ஒரு லேத் பட்டறையில வேலைக்கு சேர்ந்தேன்.

சின்ன வயசுல கூட இருந்த பசங்க, சுருக்குபோட்டு ஓணான், ஒடக்கான் பிடிப்பாங்க. `ஏன்டா, அதுங்களை தொந்தரவு செய்யறீங்க?’னு அப்பவே சண்டைக்குப் போவேன். கறிக் கடையில கோழி அறுக்கறதைப் பார்க்க கஷ்டமா இருக்கும். இப்படி, பிராணிங்க, பறவைங்க மேல ஆர்வம் வந்துச்சு. எங்க வீட்டுக்குப் பின்னாடி நிறைய சிட்டுக்குருவிங்க வரும். அம்மா அரிசி காய வைப்பாங்க. அதை சிட்டுக்குருவிங்க சாப்புடறதை பாத்துக்கிட்டே இருப்பேன்.

ஒரு கட்டத்துல சிட்டுக்குருவிங்க வர்றது குறைஞ்சு போச்சு. கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சி, ஒரு கட்டத்துல சிட்டுக்குருவியையே பாக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுக்குநடுவுல, 1998-ல சொந்தமா லேத் பட்டறை ஆரம்பிச்சேன்.

சிட்டுக்குருவிகள் குறைந்து போனதுக்கு என்ன காரணம்னு தேட ஆரம்பிச்சேன். இணையதளத்துல எல்லாம் தேடினேன். பொதுவா, சிட்டுக்குருவிங்க இருப்பிடத்துக்காகவும், உணவுக்காகவும் மனிதர்களை சார்ந்து இருந்தது தெரியவந்தது.  நம்மோட வாழ்வியல் மாற்றம்தான், நம்மகிட்ட இருந்து குருவிகளைப் பிரிச்சது. இடைவெளியோ, சந்தோ இல்லாத கான்கிரீட் கட்டிடங்களோட வருகை, சிட்டுக்குருவிகளை இடம்பெயரச் செஞ்சது. உணவுப் பற்றாக்குறையும் குருவிங்களோட எண்ணிக்கையை வெகுவாக குறைச்சது. அதனால, சிட்டுக்குருவிங்களை பராமரிக்கறது நம்ம பொறுப்புதான்னு உணர்ந்தேன்.

குருவிக்கான மரக்கூடுகள்!

2012-ல முதல்கட்டமா, `ஷூ’ வைக்குற அட்டை பெட்டியில குருவிக்கூடு செஞ்சேன். ஆனா, அது நீண்டநாளைக்கு தாங்கலை. 2013-ல மரப்பெட்டியில கூடுகள் செய்ய ஆரம்பிச்சேன். இன்டர்நெட்டுல பாத்து கூடு செய்யதைப்பத்தி தெரிஞ்சிக்கிட்டேன். முக்கால் அடி உயரம், அரை அடி அகலம்னு மரத்துல கூடு செஞ்சேன். குருவிங்க உள்ள போக 32 மில்லிமீட்டர் அளவுல ஓட்டைபோட்டேன். அதைவிட பெரிய ஓட்டையாக இருந்தா, அணில் உள்ளேபுகுந்து, குட்டிக் குருவிங்களை சாப்பிட்டுடும். அதேமாதிரி, மற்ற பறவைகளும் உள்ள புகுந்துடும்.

முதல்ல எங்க வீடு, லேத் பட்டறையில கூடுங்களை அமைச்சேன். குருவிங்க வர ஆரம்பிச்சது. தொடர்ந்து, உக்கடம் பேருந்து நிலையம், நிறைய கடைகள், மற்ற பேருந்து நிலையங்கள், வீடுங்கனு நிறைய இடங்கள்ல குருவிக்கூடு செஞ்சி கொடுத்தேன். இதுக்கு சில நண்பர்களும் உதவினாங்க. ஒரு தனியார் நிறுவனம் நிறைய கூடு செய்ய உதவி செஞ்சது. இந்த விஷயம் நாளிதழ், யுடியூப்னு போனதால, வெளியூர்கள்ல இருந்தெல்லாம்கூட குருவிக்கூடு கேட்டாங்க. கோவை, சென்னை, மதுரை, ஈரோடு, திருப்பூர்னு தமிழ்நாட்டுல மட்டுமில்லா, கர்நாடகா, ஒடிசானு வெளி மாநிலங் களுக்கும் மரக்கூடுங்களை அனுப்பி வெச்சேன். கூடுங்களை இலவசமாக அனுப்பிடுவேன். டிரான்ஸ்போர்ட் செலவு மட்டும் அவங்களுது.

பாதுகாப்பு அமைப்பு தொடக்கம்!

2013-ல சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கினேன். மாணவர்கள், ஆட்டோ டிரைவர், லேத் பட்டறைத் தொழிலாளினு நிறைய பேர் இணைஞ்சாங்க. உக்கடம் பேருந்து நிலையத்துல நிறைய இடங்கள்ல மரக்கூடு அமைச்சோம். தண்ணிக்காக ரெண்டு சிறிய கான்கிரீட் தொட்டிங்களும் வெச்சோம். இங்க பாதுகாப்புப் பணியில ஈடுபட்டிருக்கற போலீஸ்காரங்க, குருவிங்களுக்கு தண்ணியும், சாப்பாடும் வெச்சி, கண்ணும் கருத்துமா பாத்துக்கிறாங்க.

தொடர்ந்து, சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பது தொடர்பா பள்ளி, கல்லூரிகள்ல பேசினேன். 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரிகள்ல மாணவர்கள்கிட்ட பேசியிருக்கேன். சிட்டுக்குருவிங்க பாதுகாப்பு மட்டுமில்லாம, பல்லுயிர் பெருக்கம், பாம்புகள் பாதுகாப்பு, நீர்நிலை பாதுகாப்பு, இயற்கையை பாதுகாக்க வேண்டியதோட அவசியம், மரங்களோட முக்கியத்துவம்னு நிறைய விழிப்புணர்வு கருத்துகளைச் சொல்லியிருக்கோம்.

இயற்கை, சூழல் பாதுகாப்பு...

கோயம்புத்தூர்ல உள்ள 10-க்கும் மேற்பட்ட கோயில்கள்ல வில்வம், வேம்பு, அரசு, நாகலிங்கம், இலுப்பை, மகிழம், வன்னி மரங்களை நட்டுவெச்சிருக்கோம். கௌமார  மடத்தோட மடாதிபதி மூலமா, வடவள்ளி முருகன் கோயில்ல 27 நட்சத்திரங்களை குறிக்கும் வகையில, 27 மரக்கன்றுகளை நட்டுவெச்சோம்.

அடிப்படையில நான் மார்க்சியவாதி. ஆனாலும், மரக்கன்றுகளை நடுவதுல இடத்தையெல்லாம் பாக்கறதில்லை. கோவை-பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டினப்ப, கண்ணீர் விட்டு அழுதேன். நிறைய அமைப்புகளோட சேர்ந்து போராடினோம். இதனால், கொஞ்சம் மரங்களை காப்பாத்த முடிஞ்சது. குறிப்பாக, பொங்காளியம்மன் கோயில்கிட்ட இருக்கும் ஆலமரத்தைப் பாதுகாக்க போராடினோம்.

சிங்காநல்லூர் குளத்துல, க்யூப் அமைப்போட சேர்ந்து, பல்லுயிர் பெருக்கம், மரங்கள் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு முயற்சிகளை எடுத்தோம். நிறைய பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். மியாவாக்கி முறையில மரக்கன்றுகளை நட்டுவெச்சோம்” என்றார் பாண்டியராஜன் பெருமிதத்துடன்.

“சிட்டுக்குருவிகளை மட்டும் பாதுகாத்தால் போதுமா?” என்று கேட்டோம். “அப்படி இல்லீங்க. பறவைகள், உயிரினங்கள், இயற்கைனு எல்லாத்தையுமே பாதுகாக்கணும். இயற்கை, பறவை, விலங்குகள் இல்லாம மனிதர்கள் இல்லை. அதேசமயம், மனிதர்கள் இல்லாம அதுங்களால இருக்க முடியும். மனித குலத்தைப் பாதுகாக்கணுமுன்னா இதையெல்லாம் பாதுகாக்க வேண்டியது அவசியம். ஏற்கெனவே, காடுகளோட பரப்பு குறைஞ்சிக்கிட்டே வருது. இந்த நிலையை மாத்தனும்.

ப்ராஜெக்ட் ஸ்பேரோ!

நம்மாழ்வாரோட வானகம் அமைப்புல, இயற்கை வாழ்வியல் பயிற்சி எடுத்துக்கிட்டேன். அவர் முன்னாடி பேசியிருக்கேன் அப்படீங்கறதே பெரிய விஷயம்.  2004-ல திருமணம். ஆரம்பத்துல என்னோட செயல்பாடுகள்ல மனைவி அனிதாவுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது.

‘குடும்பத்தைப் பாக்காம, குருவிங்க, இயற்கைனு போறீங்களே’னு கேட்டாங்க. ஆனா, கொஞ்சம் கொஞ்சமாக என்னோட சேவை, அவங்களுக்குப் புரிஞ்சது. இப்ப, என்னோட பணிகளுக்கு ரொம்ப ஊக்கம் கொடுக்கறாங்க. 2018-ல கோவை மாநகராட்சி, சிட்டுக்குருவி பாதுகாப்பு அமைப்பு, க்யூப் அமைப்பு, மகேந்திரா பம்ஸ் நிறுவனம் எல்லோம் சேர்ந்து, சிட்டுக்குருவிகள் பாதுகாப்புத் திட்டத்தை (ப்ராஜெக்ட் ஸ்பேரோ) தொடங்கினோம். மரக்கூடு செஞ்சி கொடுக்கறது, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்னு, நண்பர்கள் சலீம், ஆனந்தகுமார், வினோத் கூட எங்களோட பயணம் தொடருது. நிச்சயம் சிட்டுக்குருவிங்களை மீட்போம்னு நம்பிக்கை இருக்கு” என்றார் பாண்டியராஜன் உறுதியுடன்.

சிட்டுக்குருவி தினம் உருவாக காரணமான `முகமது திலாவர்’

சிட்டுக்குருவிகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு இவற்றுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்ந்தவர் முகமது திலாவர். நாசிக்கைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரான இவர், சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதற்காக `நேச்சர் ஃபார்எவர் சொசைட்டி` அமைப்பைத் தொடங்கினார்.

அவர் முதலில் சிட்டுக்குருவிகள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். பல்வேறு நாடுகளிலும் மொத்தம் 52 ஆயிரம் இடங்களில் சிட்டுக்குருவிகள் வசிப்பதற்கான வாழ்விடங்கள், உணவிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சிட்டுக்குருவிகளுக்கென தனியாக ஒரு தினம் வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் சபையிடம் வலியுறுத்தினார். இதையடுத்து, 2010-ம் ஆண்டில் மார்ச் 20-ம் தேதியை சிட்டுக்குருவி தினமாக அறிவித்தது ஐ.நா. சபை. டெல்லி மாநில அரசு 2012-ல் சிட்டுக்குருவியை டெல்லி மாநிலப் பறவையாக அறிவித்தது. 2008-ல் டைம் இதழ் `சுற்றுச்சூழல் நாயகன்’ என்ற விருதை, உலகின் தலைசிறந்த சுற்றுச்சூழலியலாளர்களில் ஒருவரான முகமது திலாவருக்கு வழங்கியது.

படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x