Published : 27 Feb 2019 11:07 AM
Last Updated : 27 Feb 2019 11:07 AM
மலர்களிலே சிறந்தது மல்லிகை என்பார்கள். மல்லிகையின் மணத்துக்கு மயங்காதவர்களே இல்லை. சீசனில் மட்டுமே மல்லிகை விளையும். இந்த நிலையில், ஆண்டு முழுவதும் விளைச்சல் தரும் ‘ஜாஸ்மினம் நிட்டிடம்’ என்ற மல்லிகை ரகத்தைப் பயிரிட விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளது, கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்.இந்தியாவில் வணிகரீதியாக மல்லிகை சாகுபடி தனித்த இடத்தைப் பிடித்துள்ளது.
நறுமணம் மிக்க பயிர் என்பதால், வர்த்தக ரீதியில் மல்லிகைக்கு முக்கியத்துவம் உண்டு. எனவே, பூந்தோட்டம் அமைக்க விரும்புவோர் மல்லிகைத் தோட்டம் அமைப்பதற்கே முன்னுரிமை அளிக்கின்றனர்.
மல்லிகையின் தாயகம், வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலங்களான ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களாகும். “மல்லிகை மலர் சாகுபடியில் தமிழகம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. உதிரி மலர்களாகவும், சரங்களாகவும், மாலையாகவும் மல்லிகை பயன்படுத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி, மல்லிகையில் இருந்து வாசம் மிக்க திரவம் எடுக்கப்பட்டு, அதன் மூலம் அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. மல்லிகையின் நறுமணம், மனிதர்களுக்கு உற்சாகமூட்டக்கூடியதாக உள்ளது. அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மன உளைச்சல், படபடப்பால் சக்தியை இழத்தல் போன்ற உடல் உபாதைகளை சரிசெய்யும் ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மல்லிகை, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இலங்கை, சீனா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளும் மல்லிகை உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன” என்கிறார் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மலரியல் மற்றும் நிலம் எழிலூட்டும் துறை பேராசிரியர் பெ.மணிமாறன்.
பேராசிரியர் ம.கங்கா கூறும்போது, “மல்லிகை மொட்டாக இருக்கும்போது இளஞ்சிவப்பு நிறத்திலும், மலர்ந்த பின்பு வெள்ளை நிறமாக மாறி, இதழ்கள் விரிந்து நல்ல மணத்துடனும் இருக்கும். மொட்டு சுமார் 4 செ.மீ. வரை வளரும்.
தோட்ட வடிவமைப்பில் இதன் பங்கு முக்கியமானது. இது பிச்சிப் பூவைக் காட்டிலும் நீளமான காம்புகளையும், மொட்டுகளையும் கொண்டது. மேலும், நீண்ட நேரம் வாடாமலும் இருக்கும் தன்மைகொண்டது. நன்கு மலர்ந்த பூக்கள், வாசனைத் திரவியம் எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றன.
மல்லிகையில் சுமார் 120 சிற்றினங்கள் உள்ளன. அவற்றில் குண்டுமல்லி, பிச்சி, முல்லை போன்ற 3 சிற்றினங்கள் மட்டுமே வணிக ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளன. மலர் உற்பத்தியில் இந்த ரகங்களே அதிகம் உள்ளன. இவை, டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை விளைச்சல் தருவதில்லை.
ஜாஸ்மினம் நிட்டிடம்
ஆனால், வணிக ரீதியான சிற்றினமான ‘ஜாஸ்மினம் நிட்டிடம்’ ஆண்டுமுழுவதும் விளைச்சல் தரக்கூடியது. இந்த ரகம், மல்லிகைத் தோட்டம் அமைக்க உகந்தது. மலர்ச் சரங்கள் தொடுக்கவும், மாலைகள் கட்டவும், பிற மலர்களுடன் சேர்த்து மாலைகள் கட்டவும்
இது ஏற்றது. மற்ற ரகங்களான குண்டுமல்லி, பிச்சி, முல்லை போன்றவை விளைச்சல் தராத காலங்களில், இந்த ரகத்தை உதிரி மலராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து இயற்கையாக காத்துக்கொள்ள வல்லது ஜாஸ்மின் நிட்டிடம்” என்றார்.
சாகுபடி முறைகள்
மலரியல் துறைத் தலைவர் ம.கண்ணன் கூறும்போது, “வெப்ப மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் உள்ள, நல்ல வளமான வண்டல் மண்ணில் செழித்து வளரக்கூடியது ஜாஸ்மின் நிட்டிடம். பொதுவாக ஜூன் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இதை சாகுபடி செய்யலாம்.
இந்த ரகத்தின் கடினத் தண்டு மற்றும் மத்திய தண்டின் குச்சிகளை 15-20 செ.மீ. நீளம் என்ற அளவில் தேர்வு செய்து, அவற்றை இன்டோல் பியூட்ரிக் அமிலத்தை 2,000 பி.பி.எம். என்ற அளவில் கலந்து, குச்சிகளின் அடிப்பகுதியை இரு நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் அதை பயிர்ப் பெருக்கத்துக்கான இடுபொருட்கள் அடங்கிய பைகளில் நட்டு, வேர்விடும் வரை வைத்திருக்க வேண்டும்.
நன்கு வேர் பிடித்த, ஒரு வயதான செடிகளை 2x1.5 மீ. என்ற இடைவெளியில் 30x30x30 செ.மீ. என்ற அளவில் குழியெடுத்து நடவு செய்ய வேண்டும். சுமாராக ஒரு ஹெக்டேரில் 3,333 செடிகளை நடவு செய்யலாம். பின்னர், தேவையான அளவு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப வாரம் ஒருமுறை தண்ணீர்பாய்ச்ச வேண்டும்.
தொழு உரம் அல்லது மண்புழு உரத்தை செடிக்கு 10 கிலோ என்ற அளவில் இட வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகளை செடிக்கு 60:120:120 கிராம் என்ற அளவில் இட வேண்டும். நவம்பர், டிசம்பர் மற்றும் ஜூன், ஜூலை மாதங்களில் செடிகளைக் கவாத்து செய்த பிறகு, சத்துகளை இட வேண்டும். மாதத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை களையெடுக்க வேண்டும். பின்னர், நிலப்பரப்பில் இருந்து 45 செ.மீ. உயரத்தில் மாத இறுதியில் காவாத்து செய்ய வேண்டும். அப்போது, நோயுற்ற குச்சிகள் மற்றும் இடைஞ்சலான தண்டுப் பகுதிகளை வெட்டி, நன்கு சூரிய ஒளி படுமாறு பராமரிக்க வேண்டும்.
பூச்சித் தாக்குதல்
இந்த ரகம் நோய்த் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளக்கூடியது என்றாலும், புழு தாக்குதல் உண்டு. இவற்றால் பாதிக்கப்பட்ட மொட்டுகளில் சிறு துளைகள் காணப்படும். மொட்டுகளை உண்டு, மலரின் வெளிப்பகுதியில் வளை போன்ற கூட்டை உருவாக்கி, அதன் தரத்தை புழுக்கள் குறைக்கின்றன.
இளம் புழுக்கள் பச்சை நிறத்திலும், அதன் தலைப்பகுதி கருஞ்சிவப்பு நிறத்திலும், முதிர்ச்சியடைந்த புழுக்கள் காவி நிறக்கோடுகளுடனும் காணப்படும். பாதித்த செடிகளில் மாலத்தியான் 50 இ.சி. மருந்தை 2 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து, புழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.
இது ஆண்டு முழுவதும் விளைச்சல் கொடுக்கும் என்பதால், நன்கு முதிர்ந்த மொட்டுகள் விரியும் முன்பு, காலை 9 மணிக்குள் அறுவடை செய்ய வேண்டும். இரண்டு வயதுடைய செடியில் இருந்து ஹெக்டேருக்கு 4-5 டன் மொட்டுகள் என்ற அளவில் ஆண்டு விளைச்சல் பெறலாம். அறுவடைக்குப் பின்னர் 12 மணி நேரம் வரை மொட்டுகள் விரியாமல் இருக்கும். அவற்றை 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பாதுகாக்கும்போது, 120 மணி நேரம் வரை வாடாமல் பாதுகாக்க முடியும்.
வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு, மலர் மொட்டுகளை, 4 சதவீதம் போரிக் அமில கரைசலில் நனைத்து, 200 மைக்ரான் தடிமன் உள்ள பாலித்தீன் பைகளுக்குள் வைத்து, 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைத்து பராமரித்தால், 174 மணி நேரம் வரை மொட்டுகள் வாடாமல் இருக்கும்”
என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT