Published : 14 Feb 2019 05:20 PM
Last Updated : 14 Feb 2019 05:20 PM

பெருகி வரும் சைபர் குற்றங்கள்: காவல்துறை ஏடிஜிபி தலைமையில் ‘சைபர் பிரிவு’ விரைவில் அமைப்பு?

சைபர் சார்ந்த குற்றச்செயல்கள் பெருகி வருவதும், சைபர் கிரைம் சார்ந்த புலனாய்வு தேவையை ஒட்டி ‘சைபர் பிரிவு’ என காவல்துறையில் ஏடிஜிபி தலைமையில் தனிப்பிரிவு உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உலக அளவிலான விஞ்ஞான வளர்ச்சியின் விரிவாக்கத்தில் ஆதிகாலத்தில் கைலி கட்டி வரிபனியன் போட்டு வாயில் பீடியுடன் திரிந்த குற்றவாளிகளும் அப்டேட் ஆகி எங்கோ மூலையில் ஒளிந்துக்கொண்டு சாதாரணமாக குற்றச்செயல்களை செயல்படுத்தும் அளவுக்கு கோட்டு சூட்டு போட்ட அறிவார்ந்த திருடர்களாகி விட்டார்கள்.

திருட்டு, குற்றச்செயல்கள் இன்று கணினி வழிச் சார்ந்ததாக, அறிவியல் பூர்வமாக நடக்கத் துவங்கிவிட்டது. கத்தியைக்காட்டித்தான் உங்கள் பணத்தை கொள்ளையடிக்கவேண்டும் என்பதல்ல கனிவாக போனில் பேசி எங்கிருந்தோ உங்கள் டேட்டாக்களை பெற்று ஒரு நொடியில் உங்கள் பணத்தை வழித்தெடுக்கும் நவீன திருடர்கள் உருவாகிவிட்டனர்.

உங்கள் டெபிட், கிரடிட் கார்டுகளை ஏடிஎம்மிலோ அல்லது ஷாப்பிங் மாலிலோ, ஹோட்டலிலோ தேய்க்கும்போது அதில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி டேட்டாக்களை சேகரித்து டூப்ளிகேட் கார்டு மூலம் பணத்தை திருடிவிடுகின்றனர். போனில் பேசி ஆதார் எண் பதிவு செய்யவேண்டும் எனக்கூறி தகவலைப்பெற்று ஒன்டைம் பாஸ்வார்டை அனுப்பி பேங்க் அக்கவுண்டில் உள்ள பணத்தை வழித்தெடுத்து விடுகிறார்கள்.

பெரிய நிறுவனத்தின் அனைத்து மெயில் உள்ளிட்ட முக்கிய விஷயங்களை ஹாக் செய்து தகவலை திருடுகின்றனர். பேஸ்புக்கில், ட்விட்டரில் ஆபாச படங்களை போடுவது, சிலரின் வீடியோ புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடுவது, வீடியோ பைரசி, திருட்டு விசிடி, வலைதளங்களில் பிரபலங்கள் போல் பொய்யான அக்கவுண்ட் ஆரம்பித்து சமூக பிரச்சினைகளை தோற்றுவிப்பது என சைபர் சார்ந்த குற்றச்செயல்கள் நாள்தோறும் வெவ்வேறு வடிவங்களில் வந்துக்கொண்டுத்தான் இருக்கின்றன.

இதுபோன்ற புகார்களில் 60 சதவிகிதத்துக்கு மேல் கண்டுபிடிக்கமுடியாமல் உள்ளது. சென்னை உட்பட தமிழகம் முழுதும் நான் பேங்க் மேனேஜர் பேசுகிறேன், உங்கள் ஏடிஎம் கார்டு பிளாக் ஆகிவிட்டது 16 டிஜிட் நம்பர் சொல்லுங்க சார் என்று ஏமாற்றும் மோசடி பேர்வழியிடம் கடந்த 6,7 வருடங்களாக போலீஸார் லட்சக்கணக்கானோர் ஏமாந்துள்ளனர், ஏமாந்தும் வருகின்றனர். இன்றுவரை அந்த நபர் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

நாளையே அந்த நபர் யாரையாவது ஒருவரை ஏமாற்றிக்கொண்டுத்தான் இருப்பார். இதுபோன்ற குற்றங்களை கண்டுபிடிக்க சென்னையில் மத்திய குற்றப்பிரிவில் சைபர் பிரிவு போலீஸாரும், மாவட்ட அளவிலும், மாநில அளவில் சிபிசிஐடியில் சைபர் பிரிவும் உள்ளது.  

ஆனால் இவைகளை வழக்கமான போலீஸார் கையாள்வதால் நாளுக்கு நாள் அதிகரிக்கும் சைபர் குற்றங்களை கண்காணித்து பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது என்பதை உணர்ந்துள்ள காவல் உயர் அதிகாரிகள் இதற்காக ஏடிஜிபி அந்தஸ்த்தில் உயர் அதிகாரி தலைமையில் தனிப்பிரிவை உருவாக்க உத்தேசித்துள்ளனர்.

தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, சிபிசிஐடி, பொருளாதார குற்றப்பிரிவு, ரயில்வே, கடலோர காவல்படை, கடலோர காவல் குழுமம், அமலாக்கம், சிறைத்துறை, கமாண்டோ, குற்றப்பிரிவு, காவலர் நலன், நிர்வாகம், தலைமையிடம், போக்குவரத்து, ஹோம்கார்டு, ஆயுதப்படை, உளவுத்துறை, சிவில் சப்ளை, போக்குவரத்து கழகம், காவலர் வீட்டுவசதி, சீருடைப்பணியாளர், அகதிமுகாம், அதிரடிப்படை, மின் வாரிய விஜிலன்ஸ், மனித உரிமை, லஞ்ச ஒழிப்புத்துறை என அந்தந்த பிரிவு சார்ந்த டிஜிபி மற்றும் ஏடிஜிபி தலைமையில் துறைகள் உள்ளது.

நாளுக்கு நாள் நவீனமாகும் காவல்துறையில் சைபர்பிரிவுக்காக தனிப்பிரிவு அதற்கு டிஜிபி அல்லது ஏடிஜிபி அளவிலான உயர் அதிகாரி தலைமை ஏற்கும்போது இன்னொரு மைல்கல்லை அடையும் என்பது நிச்சயம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது. விரைவில் காவல்துறையில் ஏடிஜிபி அந்தஸ்த்துள்ள அதிகாரி தலைமையில் சைபர் பிரிவு உருவாக்கப்படும் அறிவிப்பு வெளியாகும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு தனித்துறை உருவாகும்போது அதற்கு கீழ் அதிகாரிகள், மாவட்டந்தோறும் அதற்கென அலுவலகங்கள், அதில் நிபுணத்துவம் உள்ள போலீஸார் கொண்ட தனிப்பிரிவாக குற்ற வழக்குகளை கையாளுவதில் சைபர் பிரிவு வருங்காலத்தில் முக்கிய பிரிவாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x