Published : 13 Feb 2019 09:10 PM
Last Updated : 13 Feb 2019 09:10 PM
ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டம் நடக்கும் சூழலில், போராட்டம் சட்டவிரோதம்- 21ம் தேதி நேரில் வாருங்கள் என முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநராக ராஜ்நிவாஸ் முன்பு முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், காங்கிரஸ் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணி கட்சியினரும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 7ம் தேதி கடிதம் மூலம் 39 கோரிக்கைகளை முன்வைத்து, மக்கள் நல்வாழ்வுக்காக அனைத்து கோரிக்கையையும் நிறைவேற்ற நிபந்தனையின்றி அனுமதி தர வேண்டும் என கடிதம் ஆளுநருக்கு முதல்வர் அனுப்பியிருந்தார். அதை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பகல் 1.30 முதல் தர்ணாவில் இருப்பதால் ஐஏஎஸ் அதிகாரிகள் தொடங்கி பலரும் ராஜ்நிவாஸ் வாயில் அருகே வந்து முதல்வர், அமைச்சர்களிடம் கோப்புகளை காண்பித்தனர். கோப்புகளை பார்த்து விவாதித்து தங்கள் கையொப்பங்களை அனைவரும் இட்டனர். ராஜ்நிவாஸ் வாயிலில் தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் அலுவலகம் போல் கோப்புகளை பார்த்தப்படி இருந்னர்.
ராஜ்நிவாஸுக்கு இரு வாயில்கள் உள்ளன. பின்வாயிலில் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் காங்கிரஸார் மேற்கொண்டனர். சங்கு ஊதியப்படியும், தாரை தப்பட்டையுடன் கிரண்பேடி வெளியேறு கோஷத்துடன் ராஜ்நிவாஸ் சுற்றி போராட்டங்கள் நடந்தப்படி இருந்தன.
தர்ணா இரவெங்கும் தொடரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டதால் மின்விளக்கு அமைத்தல் உட்பட பல பணிகள் நடந்தன.
வருகிறதா துணைராணுவப்படை?:
ராஜ்நிவாஸ் முன்பு தர்ணா போராட்டமும், சுற்றியும் தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் கிரண்பேடி வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் முக்கிய திருமண வரவேற்பு நிகழ்வுக்கு செல்வதாக இருந்ததும் வெளியே வரமுடியாததால் பங்கேற்கவில்லை என்று ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் துணை ராணுவப்படையை ராஜ்நிவாஸ் தரப்பில் அழைத்துள்ளதாக தெரிகிறது. துணைராணுவப்படை வந்தாலும் போராட்டம் தொடரும் என்று மாநிலத்தலைவர் நமச்சிவாயம் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து இன்று இரவு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன் விவரம்: கடந்த 7ம் தேதி பல வித கோரிக்கைகளுடன் கடிதம் அனுப்பியுள்ளீர்கள். அக்கடித்துக்கு பதில் தருவதற்குள் தர்ணா போராட்டம் நடத்துவது சட்டவிரோதமானது.இவ்விஷயம் தொடர்பாக பேச வரும் 21ம் தேதி காலை 10 மணிக்கு ராஜ்நிவாஸ் வாருங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT