Published : 04 Feb 2019 10:32 AM
Last Updated : 04 Feb 2019 10:32 AM
கிருஷ்ணகிரியில் கத்தரிக்காய் மகசூல் அதிகரித்திருப்பதால், கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காய்கறிகள், மலர்கள் சாகுபடியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி அணையின் மேற்புறத்தில் உள்ள விவசாயிகள் முள்ளங்கி, வெண்டை, கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடியில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும் கத்திரிக்காய்கள் உள்ளூர் மட்டுமின்றி ராயக்கோட்டை, ஓசூர் காய்கறி சந்தைகள் மூலம் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு செல்கிறது.
தரமான காய்கள் உற்பத்தி
இதுகுறித்து பெத்தாளப் பள்ளியைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை அணை பாசனத்தின் கீழ் அவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் சாகுபடி செய்யப்படும் முதல் ரக கத்திரிக்காய் அட்டை பெட்டிகளில் அடைக்கப்பட்டு பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இடைதரகர்கள் மூலம் ஏற்றுமதியான கத்திரிக்காய்க்கு கொள்முதல் தொகை சரியாக கிடைக்காததால், சிங்கப்பூர் ஏற்றுமதியை விவசாயிகள் கைவிட்டனர். இதனால், உள்ளூர் சந்தைக்கு மட்டுமே அனுப்பி வருகிறோம். தற்போது கத்தரிக்காய் மகசூல் அதிகரித்துள்ளது.
சந்தைக்கு பயணம்
இங்கு விளைவிக்கப்படும் கத்திரிக்காய்கள் சுமார் 65 முதல் 70 கிலோ கொண்ட மூட்டைகளாக கட்டப்பட்டு, சரக்கு வாகனம் மூலம் ராயக்கோட்டை காய்கறி சந்தைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து இடைதரகர்கள் மூலம் கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது.
விவசாயிகளிடம் இருந்து இடைத்தரகர்கள் கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை கொள்முதல் செய்கின்றனர். ரூ.20-க்கும் மேல் கொள்முதல் செய்தால் மட்டுமே ஒரளவுக்கு லாபம் ஈட்ட முடியும். கத்திரி நடவு செய்யப்பட்டு, 45 முதல் 60 நாட்களில் காய்கள் விட தொடங்கும். பராமரிப்பும், பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த மருந்து செலவுகள் அதிகரிக்கிறது. ஒவ்வொரு வாரமும் குறைந்தது ரூ.5 ஆயிரத்துக்கு மருந்துகள் தெளிக்க வேண்டியது உள்ளது.
இச்செலவை குறைக் கவும், இயற்கை காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க இயற்கை முறையில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்த, வேளாண், தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி, அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT