Last Updated : 07 Feb, 2019 10:32 AM

 

Published : 07 Feb 2019 10:32 AM
Last Updated : 07 Feb 2019 10:32 AM

4 மாதங்களுக்கு முன் நிரம்பி வழிந்த நிலை மாறி வறண்டு போனது அமராவதி அணை

4 மாதங்களுக்கு முன் நிரம்பி வழிந்த நிலையில் இருந்த அமராவதி அணை தற்போது வறண்டு பாலைவனமாக மாறியுள்ளது விவசாயிகளை வேதனையடையச் செய்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணையின் உயரம் 90 அடி. 4 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. இதன் மூலம் திருப்பூர், கரூர் மாவட்டங்களில் உள்ள 55,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாம்பாறு, தேனாறு, சின்னாறு ஆகியவை அமராவதி அணைக்கு முக்கிய நீராதாரமாக உள்ளன. கடந்த ஆண்டு ஜூன் முதல் பெய்த பருவமழையால் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் தொடர்ச்சியாக பலமுறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. அதனால் அணையில் இருந்து உபரி நீர் ஆற்றிலும், பாசன வாய்க்கால்களிலும் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் 4 மாதங்களில் அணையில் இருந்த நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு தற்போது வறண்ட நிலையில் பாலவனம் போல காட்சியளிக்கிறது. இதனால் 2 வது போகம் நெல்சாகுபடி செய்த விவசாயிகளுக்கும், தாராபுரம் மற்றும் கரூர் மாவட்ட பகுதிகளில் நடப்பாண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பழைய ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது: கல்லாபுரம், ராமகுளம், குமரலிங்கம், கணியூர், கடத்தூர், சோழமாதேவி, மடத்துக்குளம் பகுதிகளில் பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 5000 ஏக்கர் பரப்பில் 2-ம்போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணையின் நீர் மட்டம் சரிந்திருப்பது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சுற்றுக்கு நீர் கிடைத்தால் கூட அதை கொண்டு சமாளித்து விடலாம். ஆனால் அந்த நிலையும் கைகூடுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது’ என்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது: தென்மேற்குபருவமழையின் தீவிரத்தால் கடந்த ஜூன் மாதம் அணை அதன் முழு கொள்ளளவான 90 அடியை எட்டியது. அதனால் ஜூன் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி முதல் விநாடிக்கு 3600 கன அடி வீதம் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. அதனால் ஜூலை 16-ம் தேதி மீண்டும் அணை அதன் முழு கொள்ளளவை எட்டியது. பின் உடனடியாக ஆற்றில் விநாடிக்கு 6000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு வரும் நீர் வரத்து குறையும் வரை தொடர்ச்சியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும் பாசனத்தேவைக்காக பிரதான கால்வாய், பழைய ஆயக்கட்டு பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இறுதியாக அக்டோபர் மாதம் அணையில் இருந்து விநாடிக்கு 10,000 கன அடி வீதம் ஆற்றிலும், பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று அணையில் இருந்து பாசனத்தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 4 மாதங்களாக அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதனால் தற்போது அணையின் நீர் மட்டம் 25 அடியாக உள்ளது. இந்த அளவு கிடைமட்ட நீராக கணக்கில் கொள்ளப்படும். இதில் பெரும்பகுதி சேறு நிறைந்ததாக இருக்கும். இதனால் அணையில் உள்ள நீர்வாழ் உயிரினங்களின் தேவைக்காக தண்ணீர் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அடுத்த பருவமழைக் காலத்தில் தான் அணைக்கு நீர் வரத்து கிடைக்கும்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x