Published : 05 Feb 2019 04:11 PM
Last Updated : 05 Feb 2019 04:11 PM
திருநங்கைகளும் அரசியலுக்கு வரவேண்டும். பிற கட்சிகளும் காங்கிரசைப்போல் திருநங்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலர் அப்சராஅறிவுறுத்தினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக திருநங்கை அப்சராவை கடந்த சில வாரங்களுக்கு முன் நியமனம் செய்தார். இதையடுத்து பதவியேற்ற பின் முதன் முறையாக புதுச்சேரி வந்த அப்சராவை புதுச்சேரியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் ஆரத்தி எடுத்தும், பூங்கொத்து கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அப்சரா புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி, அமைச்சரும் காங்கிரஸ் மாநிலத் தலைவருமான நமச்சிவாயம், அமைச்சர் கந்தசாமி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அப்சரா கூறியதாவது:
"திருநங்கைகளிடம் சக்தி, பண்பு, கலாச்சாரம் உள்ளது. பிற கட்சிகளும் காங்கிரசைப்போல் திருநங்கைகளுக்கு இடம் கொடுக்க வேண்டும். திருநங்கைகள் வீடுகள் இன்றியும், உரிய மருத்துவ வசதி கிடைக்காமலும் பாதிக்கப்பட்டுள்ளோம். அவை கிடைக்க சட்டம் கொண்டுவர வேண்டும். திருநங்கைகளும் அரசியலுக்கு வரவேண்டும். திருநங்கை வெற்றி பெற்றால் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டும் என்று பேராசைப்படவில்லை. ராகுல் அங்கீகாரமும், ஆதரவும் கொடுத்திருப்பதே பெருமைதான். அமைச்சர் பதவி கொடுத்தாலும் சந்தோஷப்படுவோம்.
திருநங்கைகள் பெற்றோரால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர். அவர்களுக்கு மூத்த திருநங்கைகள்தான் பாதுகாப்பு தருகின்றனர். இந்நிலையில் மத்திய பாஜக அரசு இரண்டு திருநங்கைகள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழக்கூடாது என்ற வகையில் சட்ட மசோதா கொண்டுவந்திருப்பதை எதிர்க்கிறோம்.
கல்வியிலும், சுகாதாரத்திலும் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பெண்களை இழிவாக பேசும் பாஜக அரசை விரட்டும் நேரம் வந்துவிட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பாஜக ஆட்சியில் 4 மடங்கு அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT