Published : 07 Feb 2019 06:46 PM
Last Updated : 07 Feb 2019 06:46 PM

சந்தியா தலையைத் தேடும் போலீஸார்: கிடைப்பது சாத்தியமா?- ஓர் அலசல்

தினமும் பல ஆயிரம் டன் கணக்கில் குப்பை கொட்டப்படும் இடத்தில் சந்தியாவின் தலை கிடைப்பது சாத்தியமா? குப்பையில் வீசப்படும் உடல்களை மாநகராட்சி ஊழியர்கள் கண்டுபிடிக்க முடியாதா என்பது குறித்து ஓர் அலசல்.

கடந்த 21-ம் தேதி பெருங்குடி குப்பைமேட்டில் கிடந்த ஒரு கை, இரண்டு கால்களை மட்டுமே வைத்துக்கொண்டு போலீஸார் துப்பு துலக்க முடியாமல் திணறி வந்தனர். ஒருவழியாக போலீஸாரின் தீவிர விசாரணையில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே  வீட்டுக்கு அழைத்து சந்தியாவை அடித்துக் கொன்றது தெரியவந்தது.

பாலகிருஷ்ணனைப் பிடித்த போலீஸார் சந்தியாவின் உடல் பாகங்கள் குறித்துக் கேட்டபோது மூன்று துண்டுகளாக வெட்டி ஒரு கை, தலை ஒரு பாகம், ஒரு கை, இரண்டு கால்கள் ஒரு பாகம், உடலின் மற்ற பகுதிகள் ஒரு பாகம் என மூன்று பாகங்களாகப் பிரித்து இரண்டு பாகங்களை குப்பைத்தொட்டியிலும் ஒரு பாகத்தை ஈக்காட்டுத்தாங்கல் அடையாறு ஆற்றிலும் வீசியுள்ளார்.

இதில் கை, கால்கள் கிடைத்தன.  உடல் பாகங்களை அடையாறு ஆற்றிலிருந்து எடுத்துத் தந்தார். தலையும், ஒரு கையும் குப்பைத்தொட்டியில் போட்டது பெருங்குடிக்குச் சென்றுள்ளது. தற்போது அதைத்தான் போலீஸார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து பெருங்குடி குப்பைக் கிடங்கைப் பற்றி அறிந்த மாநகராட்சி ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

சந்தியாவின் தலையைத் தேடுகிறார்களே.  கிடைப்பது சாத்தியமா?

சென்னையில் இரண்டு இடங்களில் குப்பைக் கிடங்குகள் உள்ளன. ஒரு நாளைக்கு பல ஆயிரம் டன் குப்பை சேகரிக்கப்பட்டு இங்கே கொட்டப்படுகிறது. சென்னையில் பெருங்குடி, கொடுங்கையூர் என இரண்டு இடங்களில் குப்பைக் கிடங்குகள் உள்ளன.

மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளன. அதில் 1 முதல் 8 வரை பெருங்குடி மண்டலமும், 9 முதல் 15 வரை பெருங்குடியிலும் கொட்டப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மண்டலக் குப்பையையும் தனித்தனியாகக் கொட்டுவார்கள். சந்தியா தலை உள்ள மண்டலம் எண் 10 ஆகும்.

இங்கு 10-வது மண்டலத்தில் மட்டுமே ஒரு நாளைக்கு சுமார் ஆயிரக்கணக்கான டன் குப்பை கொண்டுவந்து கொட்டப்படுகிறது. சம்பவம் நடந்த பிறகு குப்பை இங்கு கொண்டுவரப்பட்ட நாளை இன்றுடன் சேர்த்தால் 18 நாட்கள் ஆகின்றன.

மேலும் மேலும் குப்பை கொட்டப்படும் இடத்தில் தலை கிடைப்பது மிகவும் கடினம்.

குப்பைத்தொட்டியில் போட்ட உடல் பாகங்களைச் சேகரிக்கும் ஊழியர்கள் கவனிக்க மாட்டார்களா?

வாய்ப்பே இல்லை. ஒரு தெருவில் 3 குப்பைத்தொட்டிகள் இருக்கும். இப்போதெல்லாம் பொதுமக்கள் குப்பையைப் பெரிய கவரில் கட்டி தூக்கி போட்டுவிட்டுச் செல்கின்றனர். சிலர் இறந்துபோன விலங்குகளை பார்சலாகக் கட்டி பிளாஸ்டிக் பையில் சுற்றி போட்டுவிட்டுச் செல்கின்றனர்.

குப்பை லாரிகளும் அதை அப்படியே தொட்டியுடன் கவிழ்த்து சேகரித்து எடுத்துச் செல்கின்றன. குப்பைக் கிடங்கிலும் அப்படியே கொட்டப்படுகிறது. ஆகவே எங்குமே பிரித்துப் பார்க்கவோ, கவனிக்கப்படவோ வாய்ப்பில்லை.

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனியாகப் பிரிப்பதாகக் கூறுகிறார்களே?

அதெல்லாம் ரிக்‌ஷாவில் வந்து குப்பை சேகரிப்பவர்கள் மட்டுமே செய்கிறார்கள். இது குப்பைத்தொட்டியில் நேரடியாக போட்டுச் செல்வது. அதை லாரியில் அப்படியே வாரிப்போட்டு கொண்டு சென்றுவிடுவார்கள். ஆகவே கவனிக்க வாய்ப்பில்லை.

அப்படியானால் தலை கிடைக்க வாய்ப்பில்லையா?

வைக்கோல்போரில் ஊசியைத் தேடும் கதைதான். அவர் கூற்றுப்படி குப்பைத்தொட்டியில் போட்டதாகச் சொல்கிறார். அதுவே உண்மையா எனத் தெரியவில்லை. தினமும் ஆயிரக்கணக்கான டன் குப்பை மேலும் மேலும் கொட்டப்பட்டு கிடக்கும் இடத்தில் பொக்லைன் வைத்துக் கிளறித் தேடுவார்கள். ஆனால் ஏற்கெனவே சொன்னதுபோன்று 100-க்கு 90 சதவீதம் வாய்ப்பு குறைவுதான்.


இவ்வாறு மாநகராட்சி ஊழியர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x