Published : 17 Feb 2019 07:53 AM
Last Updated : 17 Feb 2019 07:53 AM
சென்னை கல்லூரிச் சாலை பின்புறம் கூவம் ஆற்றில் சீரமைக்கப்பட்ட பகுதியில் ரூ.9 கோடியே 82 லட்சத்தில் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைப்பயிற்சி பாதை மற்றும் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்கப்படவுள்ளது.
சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மூலம் ஆவடி அருகேயுள்ள பருத்திப்பட்டு அணையில் இருந்து கூவம் முகத்துவாரம் வரை 27.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கூவம் ஆற்றுப் பகுதிகளை சீரமைப்பதற்காக ரூ.604 கோடியே 77 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த கூவம் நதி சுற்றுச்சூழல் சீரமைப்புத் திட்டத்துக்கு 2015-ம்ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
கூவம் நதியில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க மாற்று ஏற்பாடுகள் செய்தல், திடக்கழிவு மேலாண்மை, நதியின் வெள்ளநீர் கொள்ளளவை அதிகரித்தல், கூவம் நதிக்கரையில் வாழும் மக்களுக்கு மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு செய்தல், பல்லுயிர் பெருக்கத்தை மீட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும்.
இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:சேத்துப்பட்டு ஸ்பர் டேங்க் சாலையில் உள்ள கூவம் ஆற்றின் மறுகரையில் (கல்லூரிச் சாலை பின்புறம்) முதல்கட்டமாக 1.5 கிமீ நீளத்தில் கரை வலுப்படுத்தப்பட்டு, சுமார் 10 அடி அகலத்தில் நடைப்பயிற்சி பாதை அமைக்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட பகுதியில் பூங்கா அமைக்கப்படவுள்ளது.
இதற்கான திட்டத்தை சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை வடிவமைத்துக் கொடுத்துள்ளது. இதனை சென்னை மாநகராட்சி செயல்படுத்தவுள்ளது. சுற்றுச்சுவர் கட்டி முடித்ததும், நடைப்பயிற்சி பாதை, பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கும்.
கல்லூரிச் சாலை பாலத்தில் இருந்து மன்றோ பாலம் வரை ரூ.9 கோடியே 82 லட்சத்தில்மேற்கூரையுடன் கூடிய நடைப்பயிற்சி பாதை, பொதுமக்கள் அமர்வதற்காக இருக்கை, மரத்தாலான தகவல் பலகை, நாட்டு மரங்கள், செடிகள், குடிநீர் வசதி,அறிவிப்புப் பலகை, சூரியசக்திமின்விளக்குகள், வண்ணத்துப்பூச்சி பூங்கா ஆகியன அமைக்கப்படுகின்றன.
இதுபோல கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்படும்போது, நடைப்பயிற்சி பாதையும், பூங்காக்களும் அமைக்கப்படவுள்ளன என்றார்.
சென்னையில் கூவம் ஆற்று கரையோரப் பகுதிகளில் ஆக்கிரமித்து 14,000 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. இவற்றில் இதுவரை9,500 வீடுகள் அகற்றப்பட்டுவிட்டன. இங்கு குடியிருந்தவர்கள் பெரும்பாக்கம், நாவலூரில் கட்டப்பட்டுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளுக்கு மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெறவிருப்பதால் கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வுகளும், தேர்தலும் முடிந்த பிறகு பல்லவன் நகர், அம்மா நகர், ராதாகிருஷ்ணன் நகர், சத்யசாயி நகர், பாடிக்குப்பம், சத்யவாணிமுத்து நகர் உள்ளிட்ட 10 இடங்களில் கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 5,500 வீடுகள் அகற்றப்பட்டு சீரமைப்புப் பணிகள் நடைபெறும். அடுத்த சில ஆண்டுகளில் கூவம் நதி புதுப்பொலிவு பெறும் என்று எதிர்பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT