Published : 08 Feb 2019 09:11 AM
Last Updated : 08 Feb 2019 09:11 AM
இலவச கட்டாயக் கல்வி சட்டத்திருத்தப்படி நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்பு களில் தேர்ச்சி பெறாதவர்களை அதே வகுப்பில் நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு கல்வியாளர்களும் ஆசிரியர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் புதிய பாடத்திட்டம், தேர்வு முறை மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற் கிடையே இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்வதில் மாற்றங்களைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி 5, 8-ம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது.
அப்போது 8-ம் வகுப்பு வரை எல்லா மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்வதால் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, புதிய சட்டத்திருத்தப்படி 5, 8-ம் வகுப்புக்கான ஆண்டு இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங் களில் உடனடி தேர்வு நடத்த வேண்டும். அந்த தேர்விலும் மாணவர்கள் தோல்வியடைந்தால் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண் டும். இந்த நடைமுறையை அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் 24 மாநிலங்கள் ஆதரவு தெரிவித்து சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளன.
மத்திய அரசின், இந்த இலவச கட்டாயக் கல்வி சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களின் கற்றல் திறன் குறைவதால் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிகிறது. அடிப்படை கற்றலிலுள்ள குறைபாட்டை அப்போதே நிவர்த்தி செய்யாமல் அடுத்த வகுப்புக்கு கடத்தி விடுவதால் உயர்நிலை வகுப்பில் மாணவர்கள் பெரிதும் திணறுகின்றனர். அடுத்த ஆண்டு பொதுத்தேர்வை சந்திக்க வுள்ள 9-ம் வகுப்பு மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தாமல், ஆரம்ப கல்வி கற்றுத் தரும் சூழல்களே நிலவுகின்றன. தமிழகத்தில் தேசிய கற்றல் அடைவுத் தேர்வில் 60 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. பிரிட்ஜ் கோர்ஸ் உட்பட பல சிறப்பு பயிற்சிகளை வழங்கினாலும் மாணவர்களின் கற்றல் முறையில் முன்னேற்றமில்லை. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதுடன் மாணவர் களின் எதிர்காலத்துக்கும் சிக்கல் ஏற்படுகிறது. இதையடுத்து நடப்பு கல்வியாண்டு முதல் 5, 8-ம் வகுப்புகளி்ல் ஆண்டு இறுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மே மற் றும் ஜூன் மாதங்களில் மறு தேர்வுகள் நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறாதவர்கள் அதே வகுப்பில் தொடர்ந்து படிக்க வேண் டும். இதற்கான அரசாணை விரைவில் வெளி யிடப்படும்’’என்றனர்.
இதற்கு ஆசிரியர்களும் கல்வியாளர் களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு கூறும்போது, ‘‘மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவித்தார். ஆனால், அவர் வழி வந்த அதிமுக ஆட்சியில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல. மாணவர்கள் சரியாக படிக்கவில்லை எனில் அதற்கான காரணத்தை கண்டறிந்து சரிசெய்ய வேண்டும். மாணவர் சேர்க்கை சரிவதற்கு பள்ளிகளில் போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாததுதான் முக்கிய காரணம். மாணவர்கள் படிப்பதற்கான தகுந்த சூழலை உருவாக்குவதே அரசின் கடமை. அதை விடுத்து சட்டத்திருத்தம் கொண்டு வருவது மாணவர்கள் நலனை பாதிக்கும். இது மாணவர்கள் இடைநிற்றல் உயர்தலுக்கு வழிவகுப்பதுடன், பெண் குழந்தைகள் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்’’என்றார்.
தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா. தாஸ் கூறும்போது, ‘‘அரசுப் பள்ளி மாணவர்கள் எல்லோரும் ஒரே சூழலில் இருந்து வருவதில்லை. பொருளாதாரம் மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்கள்தான் இங்கு அதிகம் படிக்கின்றனர். குடும்பச் சூழல் உட்பட பல இன்னல்களுக்கு இடையேதான் அந்தக் குழந்தைகள் படிக்க வேண்டியுள்ளது. 8-ம் வகுப்பு வரையான கட்டாயத் தேர்ச்சி்யை தடை செய்தால் மாணவர்களுக்கு கூடுதல் மனஉளைச்சல் ஏற்படுவதுடன், இடைநிற்றல் அதிகரிக்கும். தேவையான வசதிகளை செய்து கொடுத்து அக்கறை செலுத்திதான் மாணவர்களை படிக்க வைக்க வேண்டும். சட்டத்தை கொண்டு வந்து அதிகாரம் செலுத்தினால் மட்டும் மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இது விரலில் ஏற்பட்ட காயத்துக்கு காலை வெட்டுவது போலாகிவிடும். மத்திய, மாநில அரசுகளின் சமீபகால நடவடிக்கைகள் இலவச கல்வியை முழுவதும் முடக்குவதற்கான செயல்களாகவே உள்ளன. இதனால் கல்வித்துறையில் தனியார் நிறுவனங்கள் கை ஓங்கி, எளிய மக்களுக்கு கல்வி எட்டாக் கனியாகிவிடும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT