Published : 12 Feb 2019 10:40 AM
Last Updated : 12 Feb 2019 10:40 AM
இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியில், தேசிய அளவில் சாதித்துள்ளனர் நீலகிரி வீரர்கள். தேசிய சப்-ஜூனியர் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து, மாவட்டத்துக்கே பெருமை தேடித் தந்துள்ளனர் ஹாக்கி வீரர்கள். மலை மாவட்டமான நீலகிரியில் விளையாட்டு ஆர்வலர்கள் ஏராளம். கடந்த காலங்களில் கால்பந்து, வாலிபால், ஹாக்கி என பல விளையாட்டுகளில் சிறந்த வீரர்களை இந்த மாவட்டம் உருவாக்கியுள்ளது. இதனால், ஆண்டுதோறும் மாநில அளவிலான போட்டிகள் நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெறும். குறிப்பாக, கால்பந்து விளையாட்டில் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘சந்தோஷ் டிராஃபி’ உதகையில் நடத்தப்படும்.
இதேபோல, தேசிய விளையாட்டான ஹாக்கிப் போட்டிகளில், குன்னூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் சிறந்து விளங்குவர். இதனால், குன்னூரில் தற்போதும் ஹாக்கி விளையாட்டுப் பயிற்சியில் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.
`ஹாக்கி நீல்கிரிஸ்` என்ற அமைப்பு மூலம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், தேசிய அளவிலான, 14 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான ஹாக்கிப் போட்டியில் முதல்முறையாக 2-வது இடத்தை நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த `ஹாக்கி நீல்கிரிஸ்` அணி வென்று சாதனைபடைத்துள்ளது.
தேசிய அளவில் 14 வயதுக்கு உட்பட்ட, 30-வது கே.டி.சிங் பாபு நினைவுக் கோப்பை ஹாக்கிப் போட்டி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அண்மையில் நடைபெற்றது. இதில், அசாம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்பட 16 மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்றன. தமிழகத்திலிருந்து 3 அணிகள் கலந்துகொண்டனர். நாக்அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த `ஹாக்கி நீல்கிரிஸ்` அணியினர் அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டியில் உத்தரப் பிரதேச அணியுடன் விளையாடினர். இதில், `ஹாக்கி நீல்கிரீஸ்` அணி இரண்டாவது இடத்தைப் பெற்றது.
கடந்த 30 ஆண்டுகளாக தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் முதல்முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி நீல்கிரிஸ் அணி, இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டி முடிந்து திரும்பிய இந்த அணியினருக்கு, குன்னூரில் நீலகிரி மாவட்ட ஹாக்கி சங்கம் சார்பாகவும், பொதுமக்கள் சார்பாகவும் பேண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
உதகை கிரெசன்ட் பள்ளியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர்கள் வி.கிருத்திக் பாலாஜி, ஆர்.பி.கெவின் மற்றும் ஏ.எம்.பிரேம்குமார் ஆகியோர் தமிழக அணியில் விளையாடியுள்ளனர்.
"மாணவர் ஆர்.பி.கெவின் 4-ம் ஆண்டாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார்" என கிரெசன்ட் பள்ளித் தாளாளர் உமர் பாரூக் பெருமிதத்துடன் கூறினார், "தமிழக அணியில் கிரெசன்ட் பள்ளி மாணவர்கள் வி.கிருத்திக் பாலாஜி, ஆர்.பி.கெவின் மற்றும் ஏ.எம்.பிரேம்குமார் தொடர்ந்து இடம் பிடித்து வருகின்றனர். கிருத்திக் பாலாஜி `ரைட் எக்ஸ்`, ஆர்.பி.கெவின் `லெப்ட் இன்` மற்றும் பிரேம்குமார் `டிபன்ஸ்` ஆடி வருகின்றனர். ஆர்.பி.கெவின் நான்காம் முறையாக தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர், இப்போட்டியில் 14 கோல்கள் அடித்துள்ளார். சீனியர் அணி வீரர்களுடனும் அவர் விளையாடி வருகிறார்.
தேசிய விளையாட்டில் எங்கள் பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது பெருமையளிக்கிறது" என்றார்.
செயற்கை இழை மைதானம் அமைக்கப்படுமா?
ஹாக்கி விளையாட்டில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்ட வீரர்களுக்கு செயற்கை இழை (சிந்தடிக்) மைதானம் இன்றியமையாதது என 'ஹாக்கி நீல்கிரிஸ்' சங்கத் தலைவர் அனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். "போட்டியில் தமிழக அணி மற்றும் ஹாக்கி நீல்கிரிஸ் அணிகள் இடம் பெற்றன. இதில், தமிழக அணி முதல் சுற்றிலேயே வெளியேற, ஹாக்கி நீல்கிரிஸ் அணி சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. ஹாக்கி நீல்கிரிஸ் அணியின் அனைத்து வீரர்களும் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். கோல்கீப்பர் மட்டும் தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவர்.நீலகிரி மாவட்டத்தில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அவர்கள் தேசிய அளவில் சாதிக்கும்
திறன் படைத்தவர்கள். தமிழக அணியில் பெரும்பாலும் நீலகிரி மாவட்ட மாணவர்களே இடம் பிடித்துள்ளனர். பல மாணவர்கள், தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கும் விளையாட்டு விடுதிகளில் தங்கிப் பயிற்சி பெற்று வருகின்றனர். இவர்களின் திறமை மேலும் மேம்பட, செயற்கை இழை மைதானம் கட்டாயம் தேவை. தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகள் செயற்கை இழை மைதானங்களிலேயே நடக்கின்றன.
நீலகிரி மாவட்ட வீரர்கள் ராமநாதபுரம் சென்று பயிற்சி பெற்ற பின்னர், போட்டிகளில் பங்கேற்கும் சூழல் உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து கட்டமைப்புகளும் உள்ள நிலையில், செயற்கை இழை மைதானம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை இழை மைதானம் அமைக்கப்பட்டால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் திறனை வீரர்கள் பெறுவார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT