Published : 13 Feb 2019 10:42 AM
Last Updated : 13 Feb 2019 10:42 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ரூ.325 கோடியில் ‘ஹைடெக்' அறுவை சிகிச்சை அரங்கம் அமைக்க பாரம்பரியக் கட்டிடங்களை இடிக்க முடிவெடுக் கப்பட்டுள்ளது.
இதற்கு மருத்துவர்கள், பொதுமக்கள் மத்தியில் மீண்டும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தற்போது ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் ரூ.325 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய 26 அறுவைச் சிகிச்சை அரங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக செவிலியர் தங்கும் விடுதி எதிரே உள்ள ஆடிட்டோரியம், அதன் அருகே உள்ள 1, 2 மற்றும் 3 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சலவைக் கூடம் ஆகிய கட்டிடங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டது.
பின்னர் டீன், மருத்துவர்கள் கார் நிறுத்துமிடம், கண் மருத்துவப்பிரிவு, மருந்து வார்டு பகுதிகளை இடித்துவிட்டு கட்ட மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. இந்தக் கட்டிடங்கள் மிகவும் பழமையான கல் கட்டிடம் ஆகும். தொடக்கக் காலத்தில் இருந்தே இந்தக் கட்டிடங்கள் உள்ளன. உறுதியாக உள்ள இக் கட்டிடங்களை இடிக்க பொதுமக்கள், மருத்துவர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், அம்முடிவு கைவிடப்பட்டது. இந்நிலையில் பாரம்பரியக் கட்டிடங்களை இடித்துவிட்டு மருத்துவமனையின் முன் பகுதியில் கட்ட மீண்டும் முடிவு செய்யப் பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது: புதிதாக கட்டவிருக்கும் அறுவைசிகிச்சை வளாகத்தில் நவீன வசதிகளுடன் 26 அறுவை சிகிச்சை அரங்குகள், 600 பேர் அமரும் வசதி உடைய அரங்கு, அதி நவீன கிருமி நீக்கி அறை, அதிநவீன சலவையகம், மயக்கவியல் துறை, சிடி மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் மற்றும் கார் பார்க்கிங் அமைய உள்ளது.
இந்த புதிய கட்டிடம் 7 தளங்களுடன் அமைகிறது. முதலில் பாரம்பரியக் கட்டிடங்களை இடிக்க எதிர்ப்பு கிளம்பியதால் கைவிடப்பட்டது. நேற்று முன்தினம் சுகாதாரத்துறையைச் சேர்ந்த, இந்த திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காமாட்சி தலைமையிலான மூவர் குழு வந்தது. அக்குழு மருத்துவமனை முன் பகுதியில் கட்ட முடிவு செய்தது.
மருத்துவமனையின் முன் பகுதியில் கட்டினால்தான் பார்வையாக இருக்கும் என்று குழு தெரிவித்தது. இதனால், அந்த இடத்திலேயே நவீன அறுவைசிகிச்சை அரங்கம் கட்டப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே கட்டுவதற்கு திட்டமிடப்பட்ட ஆடிட்டோரியம், 1, 2 மற்றும் 3 அறுவை சிகிச்சை அரங்கு கட்டிடங்கள் கல் கட்டிடம் கிடையாது. செங்கற்களைக் கொண்டு கட்டிய கட்டிடம். இந்தக் கட்டிடத்தை இடித்துவிட்டுக் கட்டலாம். ஆனால், எதற்காக உறுதித்தன்மையுடன் உள்ள பாரம்பரிய கல் கட்டிடங்களை இடித்துவிட்டு கட்ட குழு முடிவு செய்தது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து டீன் வனிதாவிடம் கேட்ட போது, ‘‘நோயாளிகள் எளிதாக வந்து செல்ல வசதியாக நவீன அறுவைசிகிச்சை அரங்கு மருத்துவமனையின் முன்பதியில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. சில முக்கியக் கட்டிடங்களை இடித்துவிட்டுத்தான் கட்ட வேண்டி உள்ளது. வேறு வழியில்லை, மருத்துவமனையின் பின்பகுதியில் இவ்வளவு பெரிய கட்டி டத்தைக் கட்ட இயலாது,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT