Last Updated : 19 Feb, 2019 09:58 AM

 

Published : 19 Feb 2019 09:58 AM
Last Updated : 19 Feb 2019 09:58 AM

கொட்டைப் பாக்கும்... கொழுந்து வெத்தலையும்...!

ஒரு காலத்தில் வெற்றிலை போடும் பழக்கம் அதிக அளவில் இருந்தது. இன்னமும் விருந்துகளின்போது வெற்றிலையும்-பாக்கும் கட்டாயம் உண்டு. அப்போதெல்லாம் வெற்றிலைப் போட்டுக் கொள்வது ஒரு மரியாதை. விருந்தினரின் மரியாதையை ஏற்றுக் கொண்டதாக கொள்வர். திருமணத்துக்கு அழைக்கும்போதுகூட வெற்றிலை, பாக்குவைத்தே அழைப்பார்கள். பல சம்பிரதாயங்களில் வெற்றிலை-பாக்குக்கு இடமுண்டு.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள மலையடிவாரப் பகுதியான கல்லாரில், சுமார் 2,000  ஏக்கர் பரப்பில் பாக்கு மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. கல்லார் பகுதியில் ஆண்டு முழுவதும் சீரான தட்பவெப்ப நிலை நீடிப்பதாலும், ஆங்காங்கே நீரூற்றுகள் இருப்பதாலும் இப்பகுதியில் பாக்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

இங்கு விளையும் மங்களா, மொகித், சிமோகா, மற்றும் நாட்டுப் பாக்கு ரகங்கள், உள்நாட்டுப் பயன்பாட்டுக்கு அனுப்புவது மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இப்பகுதியில் போதுமான அளவு மழை இல்லாததால்,  அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் பாக்குத்  தோட்டங்களில் விளைச்சல் பெருமளவு குறைந்தது.

கொத்துக் கொத்தாய்...

இந்த நிலையில், கடந்த ஆண்டு போதியஅளவு மழைப்பொழிவு இருந்ததால், தற்போது பாக்கு மரங்களில் காய்கள் கொத்துக்கொத்தாய் காய்த்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய விளைச்சல் இல்லாமல் வருவாய் இழப்பை சந்தித்து வரும் பாக்கு விவசாயிகள்,  தற்போது தொடங்கியுள்ள பாக்கு சீசனில் விளைச்சல் அதிகரித்த காரணத்தால், பெரிதும் மகிழ்ச்சி யடைந்துள்ளனர்.

இதனால், கல்லார் பகுதி பாக்குத் தோப்புகளில் பாக்கு குலைகளை அறுத்தெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  கிளைகளின்றி,  நீண்ட குச்சியைப்போல சுமார் 100 முதல் 200  அடி வரை உயரமாக வளர்ந்து காட்சியளிக்கும் பாக்கு மரங்களில் ஏறும் தொழிலார்கள், பாக்கு குலைகளை அறுத்து கீழே வீசுகின்றனர்.  ஒரு மரத்தின் உச்சியில் இருந்து,  அருகில் உள்ள மற்றொரு மரத்துக்குத்  தாவித் தாவிப் பய ணிக்கின்றனர். வளையும் தன்மையுடைய பாக்கு மரத்தை மேலிருந்தே வளைத்து, அடுத்த மரத்துக்குச் செல்கின்றனர்.

அறுக்கப்படும் பாக்கு குலை மேலிருந்து கீழே சிதறி விழும். பாக்குப் பழங்களை பிற பெண் தொழிலாளர்கள் சேகரித்து, தரம் பிரித்து,  மூட்டை கட்டி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

விளைச்சல் கைகூடி வந்தாலும், சீசன் காலங்களில் யானை, காட்டுப்பன்றி மற்றும் குரங்குகளிடமிருந்து பாக்கு மரங்களைக் காப்பது பெரும் சிக்கலாக உள்ளதாக தெரிவிக்கும் பாக்கு விவசாயிகள், வன விலங்குகள் ஊடுருவலால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், ஊடுருவலைத்  தடுக்க  வனத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x