Published : 18 Feb 2019 07:49 AM
Last Updated : 18 Feb 2019 07:49 AM
சென்னையில் பண்டைய கால அரிய வகை இசைக் கருவிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள ‘சங்கீத வாத்யாலயா’ கண்காட்சிக் கூடத்தை டெல்லிக்கு மாற்ற திட்டமிட்டிருப்பது, சென்னை இசை ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதை டெல்லிக்கு மாற்றக் கூடாது என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சென்னையில் உள்ள இசைக் கருவிகள் கண்காட்சிக் கூடம் ‘சங்கீத வாத்யாலயா’. பண்டைய அரிய வகை இசைக் கருவிகளைப் பாதுகாத்து, பொதுமக்களின் பார்வைக்கு வைக்கும் நோக்கில் 1956-ல்தொடங்கப்பட்டது. சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் சாம்பமூர்த்தி என்ற இசை வித்வான் தொடங்கிய இந்த கண்காட்சிக் கூடத்தை நாட்டின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத் திறந்து வைத்தார்.
பிறகு, பல்வேறு காரணங்களால் பெரம்பூர் மில்லர்ஸ் சாலைக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன்கோயில் தெருவுக்கு இடம் மாறியது. கடந்த 2000-ல் அங்கிருந்து இடம்பெயர்ந்து அண்ணாசாலை, டிவிஎஸ் பேருந்து நிலையம் அருகே வந்தது. தற்போது வரை அங்குதான் இந்தக் கண்காட்சிக் கூடம் செயல்பட்டு வருகிறது.
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வில் யாழ், மகர யாழ், மச்ச யாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ், வீணை, தம்புரா, மிருதங்கம், தவில், நாதஸ்வரம், தபேலா, 19-ம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட நடைபயிற்சி ஊன்றுகோல் வடிவிலான வயலின் மற்றும் கிடார் என 100-க்கும் மேற்பட்ட இசைக் கருவிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை சிட்டிகா, பலா மற்றும் பல அரிய வகை மரங்களால் செய்யப்பட்டவை ஆகும்.
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கைவினைப் பொருட்கள் மேம்பாட்டு ஆணையர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இந்த கூடம் செயல்படுகிறது. இசை ஆர்வலர்களுக்கு தகவல் களஞ்சியமாக விளங்கிவரும் இந்த கண்காட்சிக் கூடம் திடீரென டெல்லிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இசை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இசை ஆர்வலர்கள் கூறியதாவது:நாட்டிலேயே இசைக்காக ஒரு மாதம் திருவிழா நடப்பது சென்னையில் மட்டும்தான். நாட்டின் கலை, கலாச்சார தலைநகராகவே சென்னை விளங்குகிறது. சென்னையில் மார்கழி மாதம் நடக்கும் இசைக் கச்சேரிகளைக் கண்டு ரசிக்க உள்நாடு மட்டுமின்றி, வௌிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர்.
அப்போது இசையை மட்டுமல்லாது, இசை தொடர்பான பிற விஷயங்களையும் அறிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வகையில், வெளி மாநிலத்தினர், வெளிநாட்டினர் பலரும் ‘சங்கீத வாத்யாலயா’வுக்குச் சென்று பண்டைய கால இசைக் கருவிகளை பார்த்து ரசிக்கின்றனர். அவை பற்றிய சுவாரஸ்ய தகவல்களையும் தெரிந்துகொள்கின்றனர்.
இசை பற்றி படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், இசை கற்பவர்களுக்கு இந்த கண்காட்சிக் கூடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்தச் சூழலில், கண்காட்சிக் கூடத்தை டெல்லிக்கு மாற்றுவது, இசை ஆர்வலர்கள், இளம் தலைமுறையினருக்கு பேரிழப்பாக அமயும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தென்னிந்திய கைவினைப் பொருட்கள் தொழில் சங்கத்தின் தலைவர் பி.சுப்ரமணியன் கூறும்போது, ‘‘சென்னையில் ‘சங்கீத வாத்யாலயா’ கண்காட்சிக் கூடம் அமைந்திருப்பது, தமிழகத்துக்கு மட்டுமின்றி தென்னிந்தியாவுக்கே பெருமையாக உள்ளது. நமது கலாச்சார சான்றாகவும் இது அமைந்துள்ளது. டெல்லி பிரகதி மைதானத்தில் இந்த இசைக் கருவிகளை கண்காட்சியாக வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்குப் பதிலாக, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இதற்கென இடவசதி ஏற்படுத்தி அங்கு மாற்றலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT