Last Updated : 14 Feb, 2019 11:17 AM

 

Published : 14 Feb 2019 11:17 AM
Last Updated : 14 Feb 2019 11:17 AM

16 மணி நேரத்துக்குப் பிறகு மத்திய அதிவிரைவு படை உதவியுடன் ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வந்த கிரண்பேடி; நாராயணசாமி தலைமையில் இரண்டாவது நாளாகத் தொடரும் போராட்டம்

16 மணி நேரத்துக்குப் பிறகு மத்திய அதிவிரைவுப் படையின் உதவியோடு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ராஜ்நிவாஸிலிருந்து வெளியே வந்து சென்னை புறப்பட்டுச் சென்றார். இரவு முழுக்க ராஜ்நிவாஸ் வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைக் கண்டித்து முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸ் முன்பு நேற்று (புதன்கிழமை) மதியம் 1.30 மணி முதல் தர்ணாவில் ஈடுபடத் தொடங்கினர். இதனால் ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. ஆளுநர் மாளிகையைச் சுற்றி தொண்டர்கள் சூழ்ந்து நின்றனர். கிரண்பேடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி வந்தனர்.

இதையடுத்து நேற்று இரவு ஆளுநர் கிரண்பேடி வாட்ஸ் அப்பில், "முதல்வர் தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடப்பதால் எனது தனிச் செயலர் ஸ்ரீதரன் மகள் திருமண நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை. ஒருவரும் உள்ளே வரவும், யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ராஜ்நிவாஸிலிருந்து முதல்வரின் போராட்டம் சட்ட விரோதம் என்றும் வரும் 21-ம் தேதி ராஜ்நிவாஸில் சந்திக்கலாம் என்றும் கிரண்பேடி கடிதம் அனுப்பினார். அதற்கு ஆளுநரைக் குற்றம் சாட்டி, ஏன் இப்போது பேச வரவில்லை என்று முதல்வரும் பதில் கடிதம் அனுப்பினார். அதைத்தொடர்ந்து ராஜ்நிவாஸ் வெளியே சாலையிலேயே படுத்து முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உறங்கினர்.

போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணைநிலை ஆளுநரின் மத்திய அதி விரைவு படையின் 4 கம்பெனிகள் புதுச்சேரி வந்துள்ளன. இவர்கள் காலை 7 மணி முதல் ஆளுநர் மாளிகையைச் சுற்றி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மத்திய அதிவிரைவுப் படையினர் ஆளுநர் மாளிகையின் நுழைவாயில் முன்பு அரணாக நின்றனர். இதனை அடுத்து சில நிமிடங்களில் துணைநிலை ஆளுநர் கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். சுமார் 16 மணி நேரத்துக்குப் பிறகு ராஜ்நிவாஸில் இருந்து ஆளுநர் வெளியே வந்தார்.

எங்கு செல்கிறார் என்று விசாரித்தபோது அவர் வாட்ஸ் அப்பில், "சென்னையில் நடக்கும் விழாவுக்குச் செல்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

ராஜ்நிவாஸ் தரப்பில் கூறுகையில், ''சென்னையில் இரண்டு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்கும் துணை நிலை ஆளுநர் இன்று மாலை 5 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். அங்கு 20 ஆம் தேதி மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அவர் 20 ஆம் தேதி இரவு புதுச்சேரி திரும்புகிறார்'' என்று தெரிவிக்கப்பட்டது.

ஆளுநரின் இந்தப் பயணம் குறித்து முதல்வர் நாராயணசாமி கேட்டபோது, "எங்களின் போராட்டத்துக்குப் பயந்துதான் கிரண்பேடி புறப்பட்டுச் சென்றார். அவர் திரும்ப வரும் வரை போராட்டம் தொடரும்" என்று கூறினார்.

ஆளுநருக்கு எதிராக நடைபெறும் போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்து இருப்பதாக முதல்வர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x