Published : 01 Feb 2019 11:25 AM
Last Updated : 01 Feb 2019 11:25 AM
மதுரையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிக்காக ஜன.19-ல் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அடிக்கல்நாட்டினார்.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் முதல் பணியாக பெரியார் பஸ்நிலையம் இடிக்கப்பட்டு அதில் பெங்களூரு மெஜஸ்டிக் பஸ்நிலைய வடிவமைப்பில் 6 அடுக்கு ஹைடெக் பஸ்நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிக்காக ஜன.17-ல் பெரியார் பஸ்நிலையம் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்தது. ஆனால், தற்காலிக பஸ்நிலையங்கள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் பெரியார் பஸ்நிலையத்தை மூடுவது தள்ளிப் போனது.
இந்நிலையில் நேற்று மதியம் ஒரு வழியாக பழமையான பெரியார் பஸ்நிலையம் மூடப்பட்டது. இதுவரை மாநகர பஸ்கள் ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் உள்ளே வருவதும், செல்வதுமாக தூங்கா நகரின் அடையாளமாக இந்த பஸ்நிலையம் மக்கள் மனதில் நின்றது. மூடப்பட்ட சில நிமிடங்களிலேயே பஸ்கள், பயணிகள் இன்றி பஸ்நிலையம் வெறிச்சோடியது.
இந்த பஸ்நிலையம் ஒரு வரலாறுதான், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இந்த இடத்தில் பஸ்நிலையம் செயல்பட்டது. ஆரம்பத்தில் சென்ட்ரல் பஸ் நிலையம் என்ற பெயரில் செயல்பட்டது. அப்போது தனியார் பஸ்களே இயக்கப்பட்டதால் பஸ்நிலையங்களைக் கட்டுவதில் அப்போதிருந்த அரசு ஆர்வம் காட்டவில்லை.
தமிழகத்தில் 1971-ம் ஆண்டு திமுக ஆட்சியில், முதல்வராக இருந்த கருணாநிதிதான் தனியார் பஸ்களை அரசுடைமையாக்கி, புதிய போக்குரவத்துக் கழகங்களை உருவாக்கினார்.
1981-ம் ஆண்டு மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபோது சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், மையப் பேருந்து நிலையமாக மாற்றப்பட்டது. அதற்குப் பின் பெரியார் பேருந்து நிலையமாக மாறியது.
மதுரை நகரில் நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில் அண்ணா பஸ்நிலையம், காம்ப்ளக்ஸ் பஸ்நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் மற்றும் ஒருங்கிணைந்த மாட்டுத்தாவணி பஸ்நிலையங்கள் தொடங்கப்பட்டதாலும் மாநகர பஸ் போக்குவரத்தில் பெரியார் பஸ்நிலையம் முக்கியத்துவம் வாய்ந்ததாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
பெரியார் பஸ்நிலையத்தை இடித்தால் அங்கு கடை வைத்து பிழைப்பு நடத்திய வியாபாரிகள் மற்றும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் அதிகாரிகளே திணறினர். அந்தளவுக்கு நகரின் போக்கு வரத்தையும், பெரியார் பஸ் நிலையத்தையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை. மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவதாக இருக்கட்டும், திருமலைநாயக்கர், ரயில்நிலை யம், மதுரை பஜார் வீதிகளுக்கு பெரியார் பஸ்நிலையம் வந்துதான் செல்ல வேண்டியுள்ளது.
மதுரை நகரின் மையத்தில் அமைந்துள்ளதால் மக்களின் அன்றாட வாழ்வில் சுமைதாங்கியா கவும், அடையாளமாகவும் இருந்த பெரியார் பஸ்நிலையம் நேற்று மூடப்பட்டதோடு ஹைடெக் பேருந்து நிலையமாக மாற்று வதற்காக இடிக்கும் பணியும் தொடங்கியது.
இதைப் பார்த்த மக்கள், பெரியார் பஸ் நிலையத்தின் அடையாளத்தை அசைபோட்டவாறே அதைக் கடந்து செல்கின்றனர்.
விரைவாக முடிக்காவிட்டால் சிக்கல்
சமூக ஆர்வலர் ஹக்கீம் கூறுகையில், ‘‘பெரியார் பஸ்நிலையத்தை இடித்துவிட்டு காலத்துக்கு ஏற்ப பெரியார் பஸ்நிலையம் கட்டுவது வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த பஸ்நிலையத்தை கட்டுவதற்கு 18 மாதங்களாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் கட்டி முடிக்க வேண்டும்.
ஏற்கெனவே தற்காலிக பஸ்நிலையங்களாக அறிவிக்கப்பட்ட இடங்கள் போக கோரிப்பாளையம், சிம்மக்கல், காளவாசல் சந்திப்பு பகுதிகளில் நிரந்தரமாக நெரிசல் உண்டு. தற்காலிக பஸ்நிலையங்களில் பஸ்கள் நிறுத்தத் தொடங்கியுள்ளதால் சாலைகளில் இன்னும் நெரிசல் அதிகரித்துள்ளது.
மக்கள், வாகன ஓட்டிகள், புதிய பஸ்நிலையம் கட்டி முடிக்கும் வரை சாலைகளை கடந்து செல்ல மிகுந்த சிரமத்துக்குள்ளாவர்.
பெரியார் பஸ்நிலையப் பகுதியை நகரின் 30 முதல் 40 சதவீதம் பேர் தினமும் கடந்து செல்கின்றனர். அதனால், மக்களின் சிரமத்தைப் போக்க நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பணியை முடிக்க வேண்டும், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT