Published : 26 Feb 2019 10:57 AM
Last Updated : 26 Feb 2019 10:57 AM
இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற பாசனத் திட்டம் என்றும், அறிவியலும், பொறியியலும் இணைந்த மகத்தான பாசனத் திட்டம் என்றும் வல்லுநர்களால் போற்றப்படும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், 60 ஆண்டுகள் கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது ஆனைமலையாறு மற்றும் நல்லாறு பாசனத் திட்டம்.
பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில் சுமார் 4.50 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த திட்டம் 50 டிஎம்சி தண்ணீர் வரவை எதிர்பார்த்து, கடந்த 1958-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மகத்தான திட்டமாகும். ஆனைமலை குன்றுகளில் உற்பத்தியாகி மேற்கு நோக்கிப் பாய்ந்த நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு, பெருவாரிப்பள்ளம் ஆகிய ஆறுகள் மூலம் ஆண்டுக்கு 30.50 டிஎம்சி தண்ணீரை எதிர்பார்த்து, அவற்றை கிழக்குப்புறமாக திருப்பி, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வறட்சியான பகுதிகள் பாசன வசதி பெறவும், மின் உற்பத்தி செய்யவும் ஏதுவாகத் தொடங்கப்பட்டது இந்த திட்டம்.
தமிழக மற்றும் கேரளா மாநில அரசுகளுக்கு இடையே ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தப்படி செயலாக்கப்பட்டு வருகிறது இத்திட்டம். மேற்கண்ட ஒப்பந்தப்படி கேரள மாநிலத்துக்கு ஆண்டுக்கு 19.55 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படுகிறது. சோலையாறிலிருந்து 12.30 டிஎம்சி, ஆழியாற்றிலிருந்து 7.25 டிஎம்சி தண்ணீரை ஆண்டுதோறும் கேரளத்துக்கு வழங்க வேண்டும். இன்று வரை எவ்வித இடையூறுமின்றி கேரளம் தனக்குரிய பங்கைப் பெற்று வருகிறது. ஆனால், தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 30.50 டிஎம்சி தண்ணீர், பல்வேறு காரணங்களால் முழுமையாக கிடைப்பதில்லை.
ஆனைமலையாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றாத காரணத்தால், ஆண்டுதோறும் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய 2.50 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை. அக்டோபர் 1-ம் தேதி முதல் ஜனவரி 31- ம் தேதி வரை சோலையாறு அணையில் இருந்து கிடைக்கும் தண்ணீரை கேரள மாநிலத்துக்கு வழங்குவதால், ஆண்டுக்கு சுமார் 2 டிஎம்சி தண்ணீர் நமக்குக் கிடைப்பதில்லை. பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய தொகுப்பணைகளில் இருந்து ஆண்டுக்கு 14 டிஎம்சி தண்ணீரை எதிர்பார்த்ததில், சராசரியாக 10 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. இதுபோன்ற காரணங்களால் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 8.50 டிஎம்சி தண்ணீர் கிடைப்பதில்லை. இதனால், பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகளுக்கு முழுமையாகப் பயனளிக்கவில்லை.
ஆனைமலையாறு அணைத் திட்டம்
இரு மாநிலங்களிடையே செய்துகொண்ட ஒப்பந்தப்படி, கேரளம் இடைமலையாறு அணை கட்டிய பிறகு, ஒரு துணை ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஆனைமலை ஆறு அணைத் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனைமலையாறு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால் ஆண்டுதோறும் 2.50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்கும். மேற்கண்ட இடமலையாறு அணையை கேரளா 1970-ல் தொடங்கி 1985-ல் கட்டிமுடித்ததாக கேரள அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் இரு மாநில அதிகாரிகள் அளவில் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, மேற்கண்ட திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று கேரள அரசு அதிகாரிகள், தவறான தகவல்களைக் கூறி, நமது அதிகாரிகளை ஏமாற்றி வருகின்றனர்.
இது தொடர்பாக விவசாயிகள் பலமுறை தமிழக அரசுக்குப் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. 1958-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம், 60 ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஒரு அணைத் திட்டத்தை மாநில அரசு 60 ஆண்டுகளாக நிறைவேற்றாமல், கிடப்பில் போட்டுள்ளது கொங்கு விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தை நிறைவேற்ற கேரளா அரசு ஒப்புக்கொள்ள மறுக்கும் நிலையில், சோலையாறு அணையிலிருந்து கொடுக்க வேண்டிய தண்ணீரில், 2.5 டிஎம்சி தண்ணீரை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
நல்லாறு அணைத் திட்டம்
இதேபோல, நீராறில் இருந்து கிடைக்கும் தண்ணீர் முழுவதும் தமிழகத்துக்குச் சொந்தமானது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேல் நீராறு மற்றும் கீழ் நீராறுவிலிருந்து கிடைக்கும் தண்ணீர், சோலையாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, சர்க்கார்பதி வழியாகச் சென்று காண்டூர்க் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணையை அடைய, சுமார் 100 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும்.
மேற்கண்ட இரு அணைகளில் இருந்தும் ஆண்டுக்கு 11.50 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். ஒப்பந்தப்படி மேல் நீராறு தண்ணீர் தமிழகத்துக்குச் சொந்தம் என்பதால், மேல் நீராறில் இருந்து 14.40 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து, மேற்கண்ட சுரங்கப்பாதை வழியாக நல்லாறு பகுதிக்கு தண்ணீரைக் கொண்டுவந்து, அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவுக்கு கால்வாய் அமைத்து காண்டூர்கால்வாயுடன் இணைக்கலாம்.
இந்த நல்லாறு அணைத் திட்டம் மூலம் திருமூர்த்தி அணைக்கு வருடந்தோறும் 9 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். இந்தக் கோரிக்கைகளை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பதே பிஏபி விவசாயிகளின் பிரதானக் கோரிக்கையாகும்.
இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், 4 லட்சம் ஏக்கரில் முழுமையாக பயிர் செய்து, உணவு உற்பத்தியைப் பெருகுவதுடன், விவசாயிகளும் பயனடைவர். மேலும், இந்த திட்டத்தின் மூலம் 250 மெகாவாட் அளவுக்கு மின்சாரமும் உற்பத்தி செய்யலாம்.
ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சோலையாறு அணைக்கு வரும் சுமார் 24 டிஎம்சி தண்ணீரில், ஒப்பந்தப்படி தமிழகம் பெற வேண்டிய தண்ணீர் முழுவதையும் பெற்றுப் பயன்படுத்த முடியும். சோலையாறு அணையின் கொள்ளளவு குறைவாக இருப்பதால், அணையிலிருந்து ஆண்டுதோறும் சராசரியாக 3 டிஎம்சி முதல் 8 டிஎம்சி தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது.
கடந்த ஆண்டு வரலாறு காணாத வகையில், சுமார் 20 முதல் 25 டிஎம்சி தண்ணீர் கிடைத்தும், பயன்படுத்த முடியாமல் வீணானதாக விவசாயிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விவசாயி உடுக்கம்பாளையம் பரமசிவம் கூறும்போது, “இந்த திட்டத்தை நிறைவேற்றக் கோரி, மாவட்டத் தலைநகரான திருப்பூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்ற ஊர்வலம் நடைபெற்றது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், ஆட்சியர்
கே.எஸ்.பழனிசாமி ஆகியோர், `உடனடியாக இத்திட்டம் குறித்து ஆய்வுசெய்து அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும்` என உறுதியளித்தனர். பல மாதங்களாகியும் ஆய்வறிக்கை அரசுக்கு அனுப்பப்படவில்லை.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி பிஏபி விவசாயிகள் குழுவினர், முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT