Published : 14 Feb 2019 12:12 PM
Last Updated : 14 Feb 2019 12:12 PM
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து வரும் 16-ம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக, அக்கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை கடந்த சில ஆண்டுகளாகவே சரியில்லாமல் உள்ளதால் அவர் சிங்கப்பூருக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். கடந்த ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். இதையடுத்து, இந்தியா திரும்பிய அவர் மீண்டும் கடந்த டிசம்பர் மாதம் 18-ம் தேதி மனைவி பிரேமலதாவுடன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
இதனிடையே, அவர் கட்சிப் பொறுப்புகளை கவனிக்க முடியாத நிலை இருப்பதால், அவரது மனைவி பிரேமலதாவுக்கு தேமுதிக பொருளாளர் பதவி வழங்கப்பட்டது. அவரது மூத்த மகன் விஜய் பிரபாகரனும் அவ்வப்போது கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று முக்கியப் பிரச்சினைகளில் கருத்துகளைக் கூறி வருகிறார்.
இந்நிலையில், விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்தபடியே கிறிஸ்துமஸ், புத்தாண்டு, திருமண நாளைக் கொண்டாடும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகின.
இந்நிலையில், விஜயகாந்த் பூரண நலமுடன் நாளை மறுநாள் (16-ம் தேதி) சென்னை திரும்புவார் என தேமுதிக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக தலைமைக் கழகம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 18-ம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். மேல்சிகிச்சை முடிந்து பூரண நலமுடன் வரும் 16-ம் தேதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு தாயகம் திரும்பவுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளபடுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT