Last Updated : 23 Feb, 2019 12:08 PM

 

Published : 23 Feb 2019 12:08 PM
Last Updated : 23 Feb 2019 12:08 PM

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தக்காளி விலை சரிவால் விவசாயிகள் விரக்தி: சாலையோரங்களில் கொட்டிச் செல்லப்படும் அவலம்

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுப்படியான விலை கிடைக்காததால், தக்காளியை வீதியில் கொட்டிச் செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், கூடுதல் பரப்பில் விவசாயிகள் காய்கறி சாகுபடி மேற்கொண்டனர். உடனடியாக ரொக்கத்தை கையில் சேர்க்கும் தக்காளிக்கு, எப்போதுமே விவசாயிகளிடம் வரவேற்பு இருக்கும். அந்த வகையில், கடந்த ஆண்டு 2,000 ஏக்கரில் நடைபெற்ற சாகுபடி, தற்போது 2 மடங்காக அதிகரித்தது. அதனால், உற்பத்தியும் அதிகரித்தது.

சந்தையில் தேவைக்கு அதிகமாக வரத்து அதிகரித்ததால், உடனடியாக விலையும் குறைந்தது. இது தக்காளி விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேறு மாநிலங்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கம் இன்றியும், இருப்பு வைக்கும் வசதி இன்றியும் தக்காளி விவசாயிகளின் பரிதவிப்பு ஒவ்வோர் ஆண்டும் தொடர்கிறது.

கடந்த ஆண்டு வறட்சியான சூழலில் தக்காளி நடவு செய்த சில விவசாயிகளுக்கு, பெட்டிக்கு (ஒரு பெட்டி என்பது 14 கிலோ) ரூ.650 வரை விலை கிடைத்தது. ஒரு கிலோ ரூ.46 என்ற மொத்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டது. சில்லரையில், அதைவிட கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை ஒரு பெட்டியின் விலை முதல் தரம் ரூ.100 முதல் ரூ.110 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் ரூ.50 முதல் ரூ.60 என்ற விலைக்கு தான் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒரு கிலோவுக்கு அதிகபட்சம் ரூ.7, குறைந்தபட்சம் ரூ.3 என்ற விலையில் சந்தையில் கொள்முதல் செய்யப்படுகிறது. தோட்டத்தில் கூலி ஆட்களை வைத்து தக்காளிகளை பறித்து பெட்டிகளில் அடுக்கி , வாகனங்கள் மூலமாக சந்தைக்கு கொண்டு செல்ல ஆகும் செலவுகூட கிடைக்காத விரக்தியில், விவசாயிகள் பலர் தக்காளியை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டிச் செல்கின்றனர்.

இதுகுறித்து குருவப்ப நாயக்கனூர் பகுதி விவசாயி ரமேஷ் கூறும்போது, 'இது விவசாயிகளின் சாபக்கேடு. இயற்கை சமயங்களில் காய்ந்து கெடுக்கும் அல்லது பெய்து கெடுக்கும். ஆனால், கடந்த ஆண்டு பருவமழை சாதகமாக இருந்தது. பெரும்பாலானவர்கள் தக்காளி சாகுபடி செய்தனர். தக்காளி 45 முதல் 60 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடுகிறது.

ஜனவரி தொடக்கத்தில் பெட்டி ரூ.300-க்கு விற்றது. வரத்து அதிகரிக்க தொடங்கியதும் விலையும் குறைந்தது. வேறு வழியின்றி குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகளுக்கு புதிதல்ல, வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் நிகழ்வதால் பழகிவிட்டது’ என்றார். தோட்டக்கலைத் துறையினர் கூறும்போது, 'தண்ணீர் அதிகமாக இருக்கும்போது, பக்கத்து விவசாயி என்ன பயிர் சாகுபடி செய்கிறார் என்பதை பொறுத்து, மற்ற விவசாயிகளும் அதே பயிரை சாகுபடி செய்கின்றனர். அதுவே, இதுபோன்ற பிரச்சினைகளுக்கு காரணமாகிவிடுகிறது’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x