Published : 22 Feb 2019 08:38 AM
Last Updated : 22 Feb 2019 08:38 AM

ஹைட்ராலிக் இருக்கை, எல்இடி விளக்கு, ஒலிபெருக்கி என கோவையில் நவீன வசதிகளுடன் தயாராகும் பிரச்சார வாகனங்கள்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படும் முன்பாகவே சூடுபிடித்துள்ளது தேர்தல் திருவிழா. அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்வதற்கு வசதியாக கோவையில் அதிநவீன வசதிகள் கொண்ட பிரச்சார வாகனங்கள் தயாராகின்றன.

தமிழகத்தில் நவீன வசதிகொண்ட பிரச்சார வாகனங்கள் கோவையில்தான் தயாராகின்றன. கோவை சிவானந்தா காலனியில் இந்த வாகனங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது கோயாஸ் அண்டு சன்ஸ் நிறுவனம்.

இதுதொடர்பாக அந்நிறுவன நிர்வாக இயக்குநர் முகமது ரியாஸ் கூறியதாவது:அப்பா பி.வி.ஹாசன், ஆரம்பத்தில் சைக்கிளில் வாகனத் தரை விரிப்புகளை விற்றுக் கொண்டிருந்தார். பின்னர், நஞ்சப்பா சாலையில் வாகனத் தரைவிரிப்பு, சீட் கவர், உதிரி பாகங்கள் விற்கும் கடை தொடங்கினார்.

தொடர்ந்து, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப கார், ஜீப்களில் மாற்றம் செய்துதரும் தொழிலில் ஈடுபட்டோம்.

25 ஆண்டுகளுக்கு முன்புடெம்போ டிராவலர் வாகனங்களை மாற்றத் தொடங்கினோம். இதுபற்றி கேள்விப்பட்டு, அரசியல் கட்சித் தலைவர்களும் வாகனங்களை பிரச்சாரத்துக்கு ஏற்றவாறு மாற்றித் தருமாறுகோரினர்.

பிரச்சார வேனை வாங்கி பதிவுசெய்து கொடுத்துவிடுவார்கள். அதில், படுக்கை, சாப்பிடுவதற்கான மேஜை வசதி, சொகுசு இருக்கை, கழிப்பறை, தண்ணீர்த் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, டிவி ஆன்டெனா, ஆன்லைன் மூலமாக படம் பார்க்கும் வசதி, எல்இடி விளக்குகள், ஏசி வசதி, ஃபோகஸ் லைட், ஹைட்ராலிக் இருக்கை, அதிநவீன ஒலிபெருக்கி உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படுகின்றன. ஹைட்ராலிக் கிரேன் மூலம், மக்களுக்கு நன்கு தெரியும் வகையில் 4 அடி உயரத்துக்கு இருக்கையை உயர்த்திக் கொள்ளவும் முடியும். ஒரு வாகனத்தில் இந்த வசதிகளை செய்ய ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலவாகும்.

மக்களவைத் தேர்தலை யொட்டி, தற்போது முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கான வாகனங்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த அரசியல் தலைவர்களுக்கும் வாகனங்களை தயார் செய்து கொடுத்துள்ளோம். வட மாநிலங்களில் இதுபோன்ற வசதி இருப்பதால், வட மாநிலத் தலைவர்கள் அங்கேயே தயார் செய்துகொள்கிறார்கள்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரது விருப்பத்துக்கு ஏற்ப காரை வடிவமைத்துக் கொடுத்தோம். சூலூரில் உள்ள விமானப்படை தளத்துக்கு அந்த கார் கொண்டு வரப்பட்டு, வசதிகள் செய்யப்பட்டு, பின்னர் அனுப்பிவைக்கப்பட்டது. கருணாநிதிக்காக வீல்சேரை வேனில் ஏற்றி, அதில் இருந்தபடியே பிரச்சாரம் செய்வதற்கான வசதிகளை செய்துகொடுத்தோம்.

சொகுசு வாகனத்தை வடிவமைக்க 15 முதல் 20 நாட்கள் தேவைப்படும். எவ்வளவு தூரம் பயணம் செய்தாலும், அசதி ஏற்படாத வகையில் வாகனத்தை தயார் செய்வதுடன், தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துகொடுத்து விடுகிறோம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x