Published : 07 Feb 2019 10:50 AM
Last Updated : 07 Feb 2019 10:50 AM

‘பசியில்லா வடமதுரை’ அமைப்பை தொடங்கி மனநலம் பாதித்தோருக்கு மறுவாழ்வு தரும் இளைஞர்கள்

நகர வீதிகளில் ஆதரவற்ற நிலையில் தனித்துவிடப்பட்டோரையும், அழுக்கு உடை, கலைந்த தலைமுடி, பலநாள் தாடியுடன் தன்னைத்தானே பராமரித்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டோரையும் அன்றாடம் காண்கிறோம். பெரும்பாலும் அவர்களை அலட்சியப்படுத்திவிட்டு கடந்து செல்வோரே அதிகம். சிலருக்கு உதவ மனமிருந்தாலும், அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பதில் தயக்கம் இருக்கும்.

ஆனால், இப்படிப்பட்டவர் களுக்கு தங்களால் ஆன உதவி களை செய்ய வேண்டும் என களம் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை சேர்ந்த இளைஞர்கள் பிரேம்குமார், விசுவ நாதன், கார்த்திக், கருப்பையா ஆகியோர். ஆதரவற்ற நிலையில் திண்டுக்கல், வடமதுரையில் பொது இடங்களில் திரியும் 30 பேருக்கு உணவு வழங்கி வருகின் றனர். இதற்காக ‘பசியில்லா வடமதுரை’ என்ற அமைப்பை தொடங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் தனித்துவிடப்பட்டு பரிதாபமான நிலையில் உள் ளோரின் பசியை போக்க உணவு வழங்கும் பணியை மட்டுமே செய்து வந்தனர். இந்நிலையில், ஆதரவற்ற நிலையில் இருக்கும் சிலர் தங்களின் பெயர், ஊரை மறந்து மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பதைக் கண்டு அவர்களுக்கு உதவ முடிவு செய்தனர். அழுக்கேறிய கிழிந்த ஆடைகளுடனும், உடம்பு முழுவதும் மண், அழுக்கு படிந்து, அடர்ந்த தலைமுடி, நீண்ட நாள் தாடியுடன் இருக்கும் இவர்களை குளிக்க வைத்து, தலைமுடியை சீர்படுத்தி, புதிய ஆடைகளை அணிவித்து புது மனிதர்களாக்கி வருகின்றனர்.

இதுவரை 7 பேரை இதுபோன்று மீட்டு பராமரித்து வருகின்றனர்.

தங்களின் சேவை குறித்த தகவல்கள், புகைப்படங்களை ‘பசியில்லா வடமதுரை’ என்ற முகநூல் பக்கத்தில் பதிவு செய்துவருகின்றனர். இதைப் பார்த்த சிலர், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து நண்பர்களுடன் சேர்ந்து உதவி வரும் பிரேம்குமார் கூறியதாவது: சென்னையில் திரைப்பட உதவி இயக்குநராக பணிபுரிந்து வருகிறேன். தனித்துவிடப்பட்டவர்களில் கை, கால் நன்றாக இருப்பவர்கள் உணவுக்காக உழைத்து சம்பாதித்துக்கொள்வர். சிலர் பிச்சை எடுத்தாவது தங்களது பசியை போக்கிக்கொள்வர். ஆனால் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களால் பிச்சை எடுக்கக்கூட தெரியாது. இவர்களை கடந்து செல்பவர்கள் கூட, இவர்களின் அழுக்கான உடை, சுகாதாரமில்லாத இடம் ஆகியவற்றை பார்த்து உதவாமல் சென்றுவிடுவர். எனவே, அவர் களை பராமரிக்கும் முயற்சி யை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை ஏழு பேருக்கு முடிவெட்டி, குளிக்கவைத்து, நல்ல உடைகள் கொடுத்து, உணவு கொடுத்து பராமரிக்கத் தொடங்கியுள்ளோம்.

சமீபத்தில் வடமதுரை பேருந்து நிறுத்தத்தில் அழுக்கான ஆடையில் இருந்த நபரை மீட்டோம். அவரை பற்றி கேட்டபோது, தனது பெயர் ராமன் என்று தெரிவித்தார். ஆனால், அதற்கு மேல் தன்னை பற்றிய விவரங்கள் எதுவும் அவருக்கு நினைவில் இல்லை.

இவர்களைப் போன்றவர்களை அழைத்துச் சென்று தங்க வைத்து பராமரிக்க தற்போதைக்கு எங்களிடம் கட்டிட வசதியில்லை. அதற்கான முயற்சியில் ஈடுபட் டுள்ளோம். மேலும் மருத்துவ உதவிக்கும் ஏற்பாடு செய்ய உள் ளோம்.

எங்களைப் போன்று ஒவ்வொரு ஊரிலும் உள்ள இளைஞர்கள், பொதுஇடங்களில் ஆதரவற்ற நிலையில் உள்ளோரை தத்தெ டுத்து பராமரித்தால் விரைவில் பசியில்லாத தமிழகம் என்ற லட்சியத்தை அடையலாம். இவ் வாறு அவர் கூறினார்.

இளைஞர்களின் இந்த செயல் இன்னும் மனிதநேயம் மறைந்துவிடவில்லை என்பதையே காட்டுகிறது.

இதுபோன்று தனித்துவிடப் பட்டவர்களை பராமரிக்க ஒவ்வொரு ஊரிலும் இளைஞர்கள் முன்வந்தால் பசியில்லாத தமிழகம் சாத்தியமே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x