Published : 02 Feb 2019 11:28 AM
Last Updated : 02 Feb 2019 11:28 AM
ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர்தான் முன்பெல்லாம் ஞாபகத்துக்கு வரும். ஆனால், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்துக்குப் பின்னர், தமிழகமெங்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறத் தொடங்கிவிட்டன. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்ற அத்தனை மாவட்டங்களிலும் வீரர்களுடன், காளைகளும் தயாராகி வருகின்றன.
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் இரண்டாம் ஆண்டாக நாளை (பிப். 3) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதற்கான ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளன. ஏறத்தாழ 500 காளைகளும், 600 மாடு பிடி வீரர்களும் போட்டியில் பங்கேற்கின்றனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பிரபல காளைகளான புலிக்குளம், உம்பளச்சேரி, தேனி மரமாடு, திருச்சி, புதுக்கோட்டை நாட்டு மாடுகளும் பங்கேற்க உள்ளன. இந்நிலையில், கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற காங்கயம் காளைகளும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தயாராகி வருகின்றன.
காங்கயம் காளைகளை வளர்த்து, முதல்முறையாக ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் விஜய் கூறியபோது, "மூன்று காங்கயம் காளைகளை அலகுமலை ஜல்லிக்கட்டுக்குத் தயார் செய்து வருகிறேன். பொதுவாகவே, நம் பகுதியில் உள்ள காங்கயம் காளைகள் நல்ல உடற்கட்டுடன் காணப்படும். உழைப்புக்கும் பெயர் பெற்றவை. வழக்கமாக ரேக்ளா பந்தயத்துக்குப் பயன்படுத்துவோம். ஆனால், முதல்முறையாக ஜல்லிக்கட்டுக்கு அனுப்புவதால், உரிய முறையில் தயார்படுத்தி வருகிறோம். காரி, மயிலை செவலை என மூன்று ரக காங்கயம் காளைகளும் போட்டியில் பங்கேற்கின்றன” என்றார்.
கொங்கு மண்டலத்தில், ஈரோட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் முடிந்த நிலையில், திருப்பூர் மற்றும் கோவை என தொடர்ந்து போட்டிகள் நடைபெறுவதால், பலரும் காங்கயம் காளைகளை ஜல்லிக்கட்டுப் போட்டிக்குத் தயார்படுத்தி வருகிறார்கள். "ஜல்லிக்கட்டு காளைகள் அருகில் யாரையும் நெருங்கவிடாது. அதேபோல, முட்டுவதிலும் ஆக்ரோஷம் இருக்கும். எனவே, காங்கயம் காளைகளை உரிய முறையில் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்” என்கின்றனர் காங்கயம் காளை வளர்ப்பாளர்கள்.
மேலும், "திருப்பூர் மாவட்டத்தில் காங்கயம் காளை வளர்ப்போர், மதுரையில் காளைகளுக்கு பயிற்சி தருபவர்களிடம் ஆலோசனை கேட்டு, கடந்த 3 மாத காலமாக காளைகளுக்கு பிரத்யேக பயிற்சி அளிக்கின்றனர். காலங்காலமாக காங்கயம் காளைகளை வளர்த்தாலும், அவற்றை ஜல்லிக்கட்டுத் தயார் செய்வது என்பது கொங்கு மண்ணில் இல்லாத ஒரு வழக்கம். தற்போது ஜல்லிக்கட்டுக்கு காளைகளைத் தயார்படுத்தும் பணியில் பலரும் ஈடுபட்டுள்ளோம்” என்றும் தெரிவிக்கின்றனர்.
திருப்பூர் பெருந்தொழுவு சாணார்பாளையத்தைச் சேர்ந்த எஸ்.மோகன்குமார் கூறும்போது, "காங்கயம் காளைகளை மிகுந்த பிரியமுடன் வளர்த்து வருகிறோம். திருச்சி, மதுரை என ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்கள் தொலைவில் இருந்ததால், இதுவரை ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுப்பாமல் இருந்தோம். தற்போது அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால், மிகுந்த உற்சாகத்துடன் காளைகளைத் தயார்படுத்தி வருகிறோம். அலகுமலையில் பங்கேற்கும் மூன்று காளைகளில் ஒரு காளைக்கு திருப்பூரிலும், மற்ற இரண்டு காளைகளுக்கு மதுரையிலும் பயிற்சி அளித்துவருகிறோம். மண்ணை முட்டுவது, நீச்சல் உட்பட பல்வேறு பயிற்சிகள் காளைகளுக்கு அளிக்கப்படுகினறன" என்றார்.
தென் மாவட்டங்களைத் தொடர்ந்து, கொங்கு மண்டலத்திலும் காங்கயம் காளைகள் வரவால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் களைகட்டும் என்பதில் சந்தேகமில்லை!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT