Published : 11 Feb 2019 08:43 AM
Last Updated : 11 Feb 2019 08:43 AM

தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததால் வனப் பகுதியில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன: வன அலுவலர்கள், ஊழியர்கள் வெளியூர் செல்லத் தடை

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை குறைவாக பெய்ததால் வனப் பகுதிகளில் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. அதனால் தீ தடுப்புப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க வன அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியூர் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் சராசரியாக 33 செமீ மழை பதிவானது. இது வழக்கமாகப் பெய்வதை விட 24 சதவீதம் குறைவாகும். தருமபுரி, கிருஷ்ணகிரி, சென்னை, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் 50 சதவீதத்துக்கும் குறைவாக மழை பெய்துள்ளது. 40 முதல் 50 சதவீதம் வரை 5 மாவட்டங்களில் மழை குறைவாக பெய்துள்ளது. அதிகபட்சமாக தருமபுரி மாவட்டத்தில் 59 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.

இதன் காரணமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதமே வனப் பகுதியில் தீ விபத்துகள் ஏற்படுவது தொடங்கிவிட்டன. கடந்த மாதம் மேலும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேனி மாவட்டம் குரங்கணி வனப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்ட 23 பேர் உயிரிழந்த நிலையில், இந்த ஆண்டு கோடையில் தீ விபத்துகளைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:செயற்கைக்கோள் மூலம் தீ பரவும் பகுதிகள் குறித்த முன்எச்சரிக்கையை இந்திய வன நில அளவை நிறுவனம் மூலம் பெற்றவுடன், மாவட்ட வன அலுவலர்கள் வழியாக தீ தடுப்புக் காவலர்களுக்கு உடனடியாக கம்பியில்லா தொலைத்தொடர்பு, கைபேசி மூலம் தெரிவித்து, அவர்களை ஒருங்கிணைத்து தேவையான வாகனங்களை அளித்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அவ்வாறு கடந்த நவம்பர் முதல் ஜனவரி மாதம் வரை 181 இடங்களில் தீ பிடித்திருப்பதாக செயற்கைக்கோள் மூலம் தகவல் கிடைத்து, அவற்றை கட்டுப்படுத்தி இருக்கிறோம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 29 இடங்களில் தீ ஏற்பட்டு, அணைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 853 இடங்களில் தீ பிடித்துள்ளன.

மாவட்ட வன அலுவலகத்தில் தீ தடுப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டு, அங்கிருந்து 24 மணி நேரமும் அலுவலர்களும், ஊழியர்களும் தீ குறித்த தகவல்களைப் பெறுதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ தடுப்புப் பணிகள் தொடர்பாக, அனைத்து வன அலுவலர்களுக்கும் சில தினங்களுக்கு முன்பு வனத்துறைத் தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், தீ தடுப்புப் பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கோடைகாலத்தில் அலுவலர்கள், ஊழியர்கள் அவர்களது தலைமை இடத்தை விட்டு வெளியில் செல்லக்கூடாது. முன்கூட்டியே அனுமதி பெற்றுதான் விடுப்பு எடுக்க வேண்டும். முன் அனுமதி இன்றி பொதுமக்களை வனத்துக்குள் அனுப்பக் கூடாது. அனுமதி பெற்றுச் செல்பவர்கள், எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள், தீப்பெட்டி போன்றவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது.

கூட்டு வன மேலாண்மை மற்றும் வனப் பாதுகாப்புக் குழுக்களை அமைத்து, அவர்கள் மூலம் தீ தடுப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசின் மலையேற்ற ஒழுங்குமுறை விதிகளின்படி, வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை மலையேற்றப் பயிற்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x