Published : 11 Feb 2019 11:40 AM
Last Updated : 11 Feb 2019 11:40 AM
உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்` என்றார் பாரதி. ஆனால், இன்று விவசாயம் மட்டுமல்ல, சிறு, குறுந் தொழில்களும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகளிலும் திட்டங்களோ, சலுகைகளோ இல்லாமல் இவை புறக்கணிக்கப்பட்டுள்ளன என்கின்றனர் தொழில் துறையினர்.வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்புகளை வழங்குபவை சிறு, குறுந் தொழில்கள்தான். குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் விவசாயத்தைப் போலவே, சிறு, குறந் தொழில் துறையும் முக்கியத்துவம் பெற்றுள்ளன.
சர்வதேச அளவிலான உற்பத்தியாளர்கள், இந்தியாவை முக்கியச் சந்தையாக கருதுகின்றனர். இதனால், இந்திய நுகர்வோரைக் குறிவைத்தே பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை மேற்கொள்கின்றன. ஆனால், உள்நாட்டு சிறு, குறு உற்பத்தியாளர்களோ பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 10 லட்சம் சிறு, குறுந் தொழில்நிறுவனங்களை நம்பி, 80 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்கின்றனர். கொங்கு மண்டலத்தின் மையமான கோவையில் மட்டும் 50000 சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள், 5 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரமாகத் திகழ்கின்றன. தமிழகம் மட்டுமின்றி, பிஹார், ஒடிசா, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் தொழிலாளர்களுக்கும் கோவையில் வேலைவாய்ப்பு கிடைத்துவருகிறது.
வெட் கிரைண்டர்கள், மோட்டார் பம்ப்செட்டுகள், ஜவுளி, பொறியியல் துறைக்கான உபகரணங்கள், காற்றாலைகளுக்கான இயந்திரங்கள், நகைகள் என குண்டூசி முதல் ராணுவத் தளவாடங்கள் வரை கோவையில் உற்பத்தியாகி, உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.
ஏற்கெனவே, 1998-ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு, 2008 முதல் 2012 வரை மின் வெட்டுப் பிரச்சினை என நெருக்கடிகளை சந்தித்து வந்த சிறு, குறுந் தொழில் துறை, அதிலிருந்து மீண்டு வருவதற்குள் பண மதிப்பு நீக்கம் இத்துறையை நெருக்கடிக்கு உள்ளாகியது. 2017 ஜூலை 1-ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரியும் (ஜிஎஸ்டி) இத்துறையை அசைத்துப் பார்த்தது.
தொடக்கத்தில், 3200-க்கும் மேற்பட்ட பொருட்களை பெரிய மற்றும் நடுத்தர தொழில்கள் உற்பத்தி செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டு, சிறு, குறுந் தொழில்நிறுவனங்களுக்கு சட்டப்பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், 1991-ல் உலக நாடுகளின் புதிய பொருளாதாரக் கொள்கை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்ட பின்னர், பெரு நிறுவனங்கள் மட்டுமின்றி, அந்நிய நிறுவனங்களும் அனைத்துப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டதால், சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்படத் தொடங்கின. மேலும் மேலும் நெருக்கடிகள் வந்ததால், தொழில்முனைவோர் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது, ஜாப் ஆர்டர்கள் முறையில் செயல்படும் நிறுவனங்களுக்கும் 18 சதவீத வரி விதிக்கப்பட்டது. வரலாறு காணாத வகையில் விதிக்கப்பட்ட இந்த வரியால், தொழில்முனைவோர் நிலைகுலைந்துபோனார்கள். இதனால், நூற்றுக்கணக்கான குறுந்தொழில்கூடங்கள் மூடப்பட்டன.
இந்த நிலையில், மத்திய, மாநில பட்ஜெட்டுகளில் சிறு, குறுந் தொழில் துறைக்கு அதிக சலுகைகள், வரி குறைப்புகள், புதிய திட்டங்கள் இருக்கும் என தொழில்துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால், சிறு, குறுந் தொழில் துறைக்கு போதுமான அளவு சலுகைகளோ, திட்டங்களோ இல்லை. இத்துறை புறக்கணிக்கப்பட்டுவிட்டது என்கின்றனர் கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர்.
தொழிற்பேட்டை உருவாக்கப்படுமா?
தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில்முனைவோர் சங்கத் (டாக்ட்) தலைவர் ஜே.ஜேம்ஸ் கூறும்போது, "கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனில் அக்கறை செலுத்தும் மத்திய அரசு, சிறு, குறுந் தொழில்கள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கும் உதிரி பாகங்களில் 25 சதவீதத்தை, சிறு, குறுந் தொழில்முனைவோரிடம் வாங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். வங்கிக் கடனுதவி நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் மானியத்தை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்த வேண்டும். மாநில அரசு ரூ.25 லட்சம் வரையிலான முதலீடுகளுக்கு 25 சதவீத மானியம் வழங்குகிறது. இந்த உச்சவரம்பை ரூ.50 லட்சமாக உயர்த்துவதுடன், காலதாமதமின்றி மானியம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
தமிழகத்திலேயே, குறுந்தொழில் மிகுந்த மாவட்டம் கோவை. சிறு, குறுந் தொழில்களுக்காக கோவை நகரையொட்டியுள்ள பகுதிகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் தொழிற்பேட்டைகளை உருவாக்க வேண்டும். அடுக்குமாடி தொழிற்பேட்டைகளை உருவாக்குவது சிறு, குறுந்தொழில்முனைவோரை ஊக்குவிப்பதுடன், அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். மேலும், தனியார் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களில் 50 சதவீதத்தை சிறு, குறுந்தொழில்முனைவோரிடம் வாங்க வேண்டுமென சட்டமியற்ற வேண்டும். தொழில் துறைக்கு மானியம் வழங்க ரூ.2500 கோடி மட்டுமே தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் போதுமானதல்ல. தாய்கோ மூலம் 5 சதவீத வட்டியில் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய, கடனுதவி வழங்கும் அறிவிப்பும் இல்லை. மொத்தத்தில், மத்திய, மாநில அரசுகளின் நிதிநிலை அறிக்கைகள், சிறு, குறுந்தொழில்முனைவோரை ஏமாற்றிவிட்டன" என்றார்.
மின் கட்டண சலுகை
கோவை வெட் கிரைண்டர்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் சாஸ்தா எம்.ராஜா கூறும்போது, "சிறு, குறுந் தொழில்களுக்கு ரூ.6.50 முதல் ரூ.8 வரை மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. ஏற்கெனவே, பல நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் தொழில்முனைவோருக்கு, மின் கட்டண சலுகை அறிவிப்பு எதுவுமே இல்லை. விவசாயத்துக்கும், விசைத்தறிக்கும் வழங்குவதுபோல, சிறு, குறுந்தொழில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும். மாதத்துக்கு 1000 யூனிட் மின்சாரத்தை இலவசமாக வழங்குவதுடன், மின் கட்டணத்தையும் கணிசமாக குறைக்க வேண்டும்.
ரூ.10 லட்சம் முதலீட்டில் உருவாகும் குறு நிறுவனம், 20 பேருக்கு வேலைவாய்ப்பு தரும். அதேசமயம், ரூ.100 கோடி முதலீட்டில் செயல்படும் பெரு நிறுவனத்தில், 50 பேர் தான் வேலையில் இருப்பார்கள். சிறந்த தொழில் நிர்வாகிகள், திறமையான தொழிலாளர்கள் நிறைந்த தமிழகத்தில், சிறு, குறுந் தொழில் துறையை ஊக்குவிப்பது வேலைவாய்ப்பை அதிகரிக்கும்" என்றார்.
கோவை தங்க நகை உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் பி.முத்துவெங்கட்ராம் கூறும்போது, "வரி நிர்வாகம் முழுமையாக மத்திய அரசிடம் உள்ளதால், மாநில அரசால் வரிச் சலுகைகளை வழங்க முடியாது. அதேசமயம், சிறு, குறுந் தொழில்முனைவோருக்கு சலுகைகள் வழங்குமாறு, மத்திய அரசிடம், மாநில அரசு வலியுறுத்தலாம்.
மத்திய அரசு தொழில் துறைக்கு அதிக நிதி ஒதுக்குகிறது. எனவே, மாநில அரசின் மாவட்ட தொழில் மையமும், மத்திய அரசின் சிறு, குறுந் தொழில் துறையும் ஒருங்கிணைந்து, தொழில்முனைவோருக்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். 2014-ல் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.62.33-ஆக இருந்தது. தற்போது ரூ.71.50-ஐக் கடந்துவிட்டது.
இதனால், தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.509 அதிகரித்துள்ளது. ஒரு பவுனுக்கு ரூ.4,065 கொடுக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால், விற்பனை குறைந்து, நகை வியாபாரிகள், பொற்கொல்லர்கள், தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்துகொண்டே செல்வதை தடுக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT