Published : 03 Apr 2014 10:30 AM
Last Updated : 03 Apr 2014 10:30 AM

மார்க்சிஸ்ட் வேட்பாளர் வாசுகி மனுதாக்கல்: ரூ.26 லட்சம் சொத்து விவரம் அளித்தார்

மார்க்சிஸ்ட் கட்சியின் வடசென்னை தொகுதி வேட்பாளர் உ.வாசுகி, புதன்கிழமை மனு தாக்கல் செய்தார். அவர் தனக்கு 26 லட்சத்து 82 ஆயிரத்து 364 ரூபாயும், கணவருக்கு ஒரு கோடியே 75 லட்சம் சொத்துக்களும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் சேர்ந்து 18 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை வேட்பாளராக உ.வாசுகி போட்டியிடுகிறார். அவர், புதன்கிழமை காலை 11.50 மணிக்கு, வடசென்னை தொகுதி தேர்தல் அதிகாரி எம்.லட்சுமி யிடம் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., மற்றும் கட்சியின் வட சென்னை மாவட்ட நிர்வாகி சம்பத் ஆகியோர் முன்மொழிந்தனர்.

வாசுகி தனது மனுவில், தனக்கு சொந்தமாக ஒரு ஹோண்டா ஆக்டிவா மோட்டார் சைக்கிளும், கணவரின் பெயரில் வேகன் ஆர் காரும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 40 கிராம் அணிகலன் இருப்பதாகக் கூறியுள்ள அவர், அது தங்கமா, வைரமா என்பது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் தங்கத்துக்கான தோராய விலை மதிப்பைக் குறிப்பிட்டுள்ளார்.

தன் கைவசம் ரூ.1,756ம், வங்கிக் கணக்கில் ரூ. 19 லட்சத்து 84 ஆயிரத்து 754ம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். தனது கணவர் விஸ்வநாதனின் கைவசம் ரூ.6,425ம் வங்கிக் கணக்கில், ரூ.80 லட்சத்து 48 ஆயிரத்து 822ம் இருப்பதாகவும், தன் கணவரின் பெயரில் 28 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தனது பெயரில் விவசாயமற்ற நிலம் 3,500 சதுர அடியும், கணவர் பெயரில் 1,450 சதுர அடி நிலமும் உள்ளதாகத் தனது ஆவணத்தில் வாசுகி குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக வாசுகி வேட்பு மனு செய்ய வரும்போது, கம்யூனிஸ்ட் கட்சியினரும், தொழிற்சங்கத்தினரும் ஏராளமான ஆட்டோக்களில் பேரணியாக வந்தனர். அதேநேரம் தேர்தல் ஆணைய விதிப்படி, 100 மீட்டருக்கு முன்பே வாகனங்களையும், பேரணியையும் நிறுத்தி விட்டு, ஐந்து பேர் மட்டுமே தேர்தல் அலுவலகம் வந்து மனுதாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், வடசென்னை தொகுதியின் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே பிரிவு) சார்பில் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ரமேஷ் கண்ணன், லோக் சத்தா கட்சியின் பாபு மைலன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x