Last Updated : 10 Feb, 2019 11:00 AM

 

Published : 10 Feb 2019 11:00 AM
Last Updated : 10 Feb 2019 11:00 AM

வெட்டருவா செஞ்சி வீசுகிற ஊரில்... விவசாய பணிக்கு மணப்பள்ளி அரிவாள்!

அரிவாள் என்றவுடன் வெட்டிச் சாய்த்தனர் என்ற வார்த்தையும் சேர்த்து நினைவுக்கு வரும். மனிதர்களைக் கொல்லும் அரிவாள் தேவையற்றது. அதேசமயம், விவசாயத்துக்கு உதவும் அரிவாள், உழவர்களுக்கு ஏற்றது. அந்த வகையில், விவசாயத்துக்கு உதவும் அரிவாள்களைத் தயாரிக்கிறது மணப்பள்ளி கிராமம்.

சேலம் மாம்பழம், நாமக்கல் முட்டை, ஈரோடு மஞ்சள், திருநெல்வேலி அல்வா, மதுரை மல்லிகை என தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும், ஏதாவது ஒரு அடையாளத்தைத்  தாங்கியுள்ளது. அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் தயாராகும் வீச்சரிவாள், அப்பகுதியின் அடையாளமாக உள்ளது. அதற்கு இணையான புகழ் பெற்றது,  நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகேயுள்ள மணப்பள்ளியில் தயாராகும் அரிவாள்.

மோகனுார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில்  விவசாயம் நடைபெறுகிறது. இப்பகுதியின் பிரதான தொழிலே விவசாயம்தான். வேளாண் விளை நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்கி வருகிறது காவிரி. வாழை, கரும்பு, வெற்றிலை போன்றவை இப்பகுதியின் பிரதானப்  பயிர்களாகும். இவை நீங்கலாக, நெல் உட்பட பிற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.

விவசாயத்தை சார்ந்து நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். அதேசமயம், விவசாயம் சார்ந்த  பல்வேறு தொழில்களும் மோகனுார் மற்றும்  சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒன்றுதான், அரிவாள் தயாரிப்பு தொழில்.

மோகனுார் மணப்பள்ளியில் நேர்த்தியான வடிவமைப்புடன் தயார் செய்யப்படும் பல்வேறு ரக அரிவாளை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் அதிகம்  வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து மணப்பள்ளியைச் சேர்ந்த அரிவாள் தயாரிப்பு பட்டறை உரிமையாளர் வி.பரமசிவம் கூறும்போது, "மோகனுார் மணப்பள்ளியில் பல தலைமுறைகளாக அரிவாள் தயாரிப்புப் பணி நடைபெறுகிறது. கரும்பு, வாழை, வெற்றிலை மற்றும் தென்னை போன்றவை பிரதானப் பயிர்கள் என்பதால், அவற்றை அறுவடை செய்யப்  பயன்படுத்தப்படும் அரிவாள், இப்பகுதியில் அதிகம் தயார் செய்யப்படுகின்றது.

கரணை அரிவாள்,  வாழை அரிவாள்,  கதிர் அரிவாள், வெற்றிலை கொடிக்கால் அரிவாள் என பல்வேறு வடிவங்களில் அரிவாள்கள் தயார் செய்யப்படுகின்றன.

சில்லறை விற்பனைக்கு மட்டுமின்றி, ஆர்டர் முறையிலும் அரிவாள்கள் தயார் செய்து தரப்படுகின்றன. அரிவாள்கள், அதன்  அளவுக்கு தகுந்தாற்போல பல்வேறு விலைகளில் விற்கப்படுகின்றன. குறைந்தபட்சம் ரூ.600 முதல், அதன் அளவு, எடைக்குத் தகுந்தாற்போல  விலை நிர்ணயிக்கப்படுகிறது.விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படும் அரிவாள் மட்டுமின்றி, வேல், இறைச்சி வெட்டுவதற்குப்  பயன்படுத்தப்படும் அரிவாள் உள்ளிட்டவையும் இங்கு தயாரிக்கப்படுகிறது. கோயில்களில் வேண்டுதலுக்காக வைக்கப்படும் அரிவாள் மற்றும் வேலும் தயார் செய்கிறோம். இங்குள்ள முனியப்பன் கோயிலில் 2 டன் எடை கொண்ட வேலும், தலா 75 கிலோ எடை கொண்ட இரு அரிவாள்களும் கிராம மக்கள் சார்பில் செய்து வைக்கப்பட்டுள்ளன. இநத் வேல் உருவாக்க ஒரு மாதமானது. ஒரு அரிவாள் தயார் செய்ய 15 நாட்களானது. விவசாயப் பயன்பாட்டுக்கான அரிவாள், தினமும் 3 வீதம் தயார் செய்யப்படும். இப்பகுதியில் மொத்தம் 15 அரிவாள் தயாரிக்கும் பட்டறைகள் உள்ளன.

இவற்றில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

அரிவாள் தயார் செய்ய பயன்படுத்தப்படும் இரும்பு, சேலம், நாமக்கல் பகுதியில் கொள்முதல் செய்யப்படுகிறது. திருப்பாச்சேத்தி (எ) திருப்பாச்சி அரிவாள் வன்முறைக்குப்  பயன்படுத்தப்

படுவதுபோல திரைப்படங்களில் காண்பிக்கப்படுகிறது. ஆனால், உண்மை அதுவல்ல. விவசாயப் பணிகளுக்காக நீளமான அரிவாள்கள் அங்கு தயாரிக்கப்படுகின்றன. எனினும், அதுபோல இங்கு தயார் செய்வது கிடையாது. வெற்றிலைக் கொடிக்கால் சாகுபடி அதிகம் என்பதால், சிறிய ரக அரிவாள்கள்தான் கணிசமான அளவு தயார் செய்யப்படுகின்றன. நீளமான அரிவாள் செய்வற்கு எவ்வளவு நேரமாகுமோ, அதேகால நேரம் சிறிய அரிவாள்கள் செய்வதற்கும் ஆகும்" என்றார்.

இரும்புக் காலத்தில் உருவான அரிவாள்...

மனித வாழ்வில், புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் செம்பு கற்காலம் எனப்பட்டது. இக்காலத்தில் செம்பு மற்றும்வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. செம்பு கற்காலத்தைத் தொடர்ந்து வந்த காலம் இரும்புக் காலமாகும்.

வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி நிறைய குறிப்புகள் உள்ளன. தென்னிந்தியாவில் இரும்புக் காலமும், பெருங்கற் காலமும் சமகாலம் எனக் கருதப்படுகிறது. இரும்பு உருக்கி வேளாண்மைக்கு உதவும் கருவிகள் செய்யத் தொடங்கினர். குறிப்பாக, பயிர்களை அறுக்க

அரிவாள் செய்து, பயன்படுத்தியுள்ளனர். அதேசமயம், இரும்பைக் கொண்டு ஆயுதங்களையும் செய்யத் தொடங்கினர். இந்த நவீன யுகத்திலும், கதிர்களை அறுக்க அரிவாள் பயன்படுத்தப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x